Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

கூட்டமைப்பு என்ற மக்களின் உரிமைகளை விற்கும் தரகுக் கும்பல்!

தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்தவர்கள் மற்றும் வேறு இயக்கங்களில் இருந்த பிரமுகர்களை ஒன்றிணைத்து, புலிகள் உருவாக்கிய தமிழத் தேசிய கூட்டமைப்பானது புலிகளின் அரசியல் தேவைக்கு ஏற்ப இயங்கியது. புலிகள் அழிக்கப்பட்டதும், இந்திய ஆட்சியாளர்களின் கைம்பொம்மையாக மாறி இந்திய அரசின் பொருளாதார அரசியல் தேவைக்கேற்றவாறு தமிழ் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது.

கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்காகத் தாம் உலகநாடுகளிடம் நியாயம் கேட்டுத் தீர்வை பெற்றுத் தருவோம் எனவும், முள்ளிவாய்க்காலில் சரணடைந்து காணமல் ஆக்கப்பட்டவர்கள், அரசியல் கைதிகள் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பொது மக்களின் வாழ்விடங்களை விடுவிக்கப் போராடுவோம் எனவும் உறுதிமொழி வழங்கி, மக்களை நம்ப வைத்து பெருவெற்றி பெற்று பாராளுமன்ற கதிரைகளையும், அரச வசதிகளையும் சுகபோகங்களையும் பெற்றுத், தம்மை மேம்படுத்திக் கொண்டனர். மக்களிற்கு வழங்கிய உறுதி மொழிகளை குப்பைக்குள் வீசி எறிந்து விட்டனர் இந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர்.

இலங்கையில் நவதாராளவாத பொருளாதாரம் மிகத் தீவிரமாக அமெரிக்காவின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கு எதிரான போராட்டங்களை மாணவர்களும் மக்களும் இடதுசாரிகளும் தெற்கில் பரவலாக முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றனர். இலவசக் கல்வி மற்றும் மருத்துவத்திற்கு சங்கூதும் முன்னெடுப்புகள் ஆரம்பித்துள்ளன. தொழிலாளர்களிற்கு சாதமாக இருந்த சில சட்டங்கள் கூட, முதலாளிகளிற்கு சாதகமாக மாற்றப்படுகின்றன. புதிதாக அரச வேவைகளிற்கு சேர்த்துக் கொள்ளப்படுபவர்களிற்கு ஓய்வூதியம் மறுக்கப்படுகின்றது. தனியார் துறை ஊழியர்களின் சேமலாப நிதியினைக் கொள்ளையிடும் நடவடிக்கை ஆரம்பித்துள்ளது. மொத்தத்தில் மக்களிடமிருந்து கோவணத்தைத் தவிர அனைத்தையும் பறித்தெடுப்பதற்கான, நவதாரளவாத பொருளாதாரக் கொள்கையினை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் தொடங்கி விட்டன.

நாட்டின் பொறுப்பு வாய்ந்த எதிர்க்கட்சி தலைவர் பதவி வகிக்கும் சம்பந்தரோ மேற்கூறிய ஆபத்துக்கள் குறித்தோ, அன்றி போராடும் மாணவர் பொதுமக்கள் மீதான அரசின் அடக்குமுறை குறித்தோ இதுவரை அக்கறை கொண்டது கிடையாது. குறைந்த பட்சம் தமிழ் மக்கள் இன்று முகம் கொடுக்கின்ற பிரச்சினைகள் குறித்து பாராளுமன்றத்தில் பேசியதோ, மக்களுடன் இணைந்து நின்று போராட்டங்களை நடாத்தியதோ கிடையாது. அரசியல் கைதிகள் தமது விடுதலைக்காக போராடும் போதெல்லாம், அதனை மழுங்கடிக்கும் விதமாக செயற்படுகின்றது இந்த கூட்டமைப்பு. "போராடாதையுங்கோ நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம்",  "உண்ணாவிரதமிருந்து கெடுத்து விடாதையுங்கோ" என்று குழப்பிக் குழப்பி இன்று, மைத்திரி – ரணில் அரசு, அரசியல் கைதிகள் கிடையாது, சிறையில் இருப்பவர்கள் கிரிமினல் குற்றவாளிகள் என்று சொல்லும் நிலைக்கு வைத்துள்ளனர்.

அமெரிக்கா மற்றும் இந்திய ஆட்சியாளர்களினால் நவதாராளவாத பொருளாதாரத்தை தீவிரமாக முன்னெடுப்பதற்கும், மைத்திரி – ரணில் ஆட்சிக்கு இடையூறு வராமல் இருப்பதற்காகவும், நாட்டில் இன்னமும் எரிந்து கொண்டிருக்கும் தேசியப்பிரச்சினை மீள எழுற்ச்சி பெறாமல் இருப்பதற்காகவும் தமது விசுவாசிகளான தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்கு கொடுக்கப்பட்ட ஒரு பதவியே இந்த எதிர்க்கட்சித் தலைவர் பதவி.

பலாலியிலிருந்து மையிலிட்டி வரை இந்திய நலன்களிற்க்காக, பொது மக்களின் காணிகள் வீடுகள் மீள கையளிக்கப்பட போவதில்லை என்பது உறுதியாகி உள்ளது. இந்நிலையில் அண்மையில் மூதூருக்கு ஆடை தொழிற்சாலை ஒன்றினை திறந்து வைக்க சென்ற சம்பந்தர், அங்கு சம்பூர் அனல் மின்னிலைத்திற்கு எதிராக போராடிய மக்கள் மத்தியில் "இந்தியா இதனை அமைக்கவில்லை என்றால் சீனா இந்த இடத்தில் அனல் மின்னிலையம் அமைத்திருக்கும்" என இந்திய அரசின் செயற்பாட்டை நியாயப்படுத்திப் பேசித் தனது இந்திய விசுவாசத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த அனல் மின்னிலையத்தால், இப்பகுதியில் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள மக்கள் உடல்நல குறைபாடுகள் குறித்தோ, கடல்வள அழிவுகள் குறித்தோ சம்பந்தருக்கும் அவர் கட்சியினருக்கும் அக்கறை கிடையாது என்பதே உண்மை.

தென்பகுதியில் நாட்டை கொள்ளையிடும் சுதந்திரக்கட்சியையும், ஜக்கிய தேசிய கட்சியையும் மாறி மாறி பதவியில் அமர்த்தி, சாதாரண உழைக்கும் மக்கள் தமது வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் காணாதது போல, வடக்கு கிழக்கில் தேர்தல் காலங்களில் மேடை மேடையாக ஏறித் தமிழ்த் தேசியம் பேசி மக்களை உசுப்பேத்தி உசுப்பேத்தி, பாராளுமன்றத்துக்கு போய் எந்தச் சிங்கள அரசு- தமிழின எதிரி என்றார்களோ, அவர்களிடம் அனைத்து சலுகைகளையும் வசதிகளையும் பெற்று தம்மை மேம்படுத்துபவர்களிடம் தொடர்ந்தும் மக்கள் ஏமாந்து கொண்டிருக்கின்றனர்.

தமிழ் தலைமைகள் என்று தம்மைக் கூறிக் கொள்பவர்கள், தமிழ் மக்களை அடைவு வைத்துத், தமது சொந்த வாழ்வை மேம்படுத்த யார் காலையும் நக்கக் கூடியவர்களாகவே, அன்று தொட்டு இருப்பது இரகசியமான விடயமல்ல.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஏனைய தமிழ்க் கட்சிகள் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே. எனவே மக்கள் தமது போராட்டங்களில் இவர்களின் தலையீட்டுகளிற்கு எதிராக போராடுவதும், தமது நியாய பூர்வமான கோரிக்கைகளுக்காக விட்டுக் கொடுக்காத போராட்டங்களை நாடாத்துவதும், நாட்டிலுள்ள உழைக்கும் சிங்கள, முஸ்லீம், மலையக மக்களின் போராட்டங்களுடன் தம்மை இணைத்துக் கொள்வதும் தான், இந்தக் கயவர்களிடம் இருந்து மீள்வதற்க்கான வழியாக அமையும் .