Thu04252024

Last updateSun, 19 Apr 2020 8am

உறங்கிக் கிடப்போமா? அன்றேல் உரிமைக்காய் எழுவோமா?

தேயிலை உற்பத்தியானது இந்த நாட்டின் தேசிய வருமானத்தை ஈட்டித் தருவதில் இன்றியமையாத பங்கு வகிக்கின்றது என்பதை எவராலும் மறக்கவோ மறுக்கவோ முடியாது. இந்த தேயிலை உற்பத்தியின் பின்னணியில் இருப்பது யார்? அவர்களின் வாழ்க்கை நிலை எவ்வாறு இருக்கிறது? அவர்களின் சமூக, அரசியல் நிலவரங்கள் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது. என்பது பற்றி ஆட்சியாளர்களோ அல்லது தோட்டக்கம்பனிகளோ கண்டுகொள்ளாது இருப்பது வேதனைக்குரிய விடயமாகும்.

75 வருடங்களுக்கும் அதிகமான தொழிற்சங்க வரலாற்றையும் பாரம்பரியத்தையும் கொண்ட தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம், காணி, வீடு, குடிநீர், சுகாதாரம், கல்வியென சகலவிதமான உரிமைகளும் புறக்கப்பட்ட ஒரு சூழலிலேயே அவர்கள் தமது வாழ்க்கையின் நாட்களை நகர்த்தி வருகின்றனர்.

மேலதிக நேரம் எனும் போர்வையில் வேலை நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் மிகக் குறைந்த கூலியைக் கொடுத்து தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றி இலாபம் ஈட்டும் தந்திரோபாயத்தை தோட்ட நிர்வாகங்கள் தொடர்ச்சியாக செய்து வருகின்றன. மறுபுறத்தில் இவர்களின் சந்தா பணத்தை பெற்றுக் கொண்டு வயிறு வளர்க்கும் தொழிற்சங்கங்களும் காலத்துக்குக் காலம் இவர்களுக்கு துரோகம் இழைத்தும் இவர்களைக் காட்டிக் கொடுத்தும் சுக, போகங்களை அனுபவித்து வருகின்றன.

தொழிற்சங்கம் என்பது அடிப்படையில் தொழிலாளர்களின் நலன்களை வென்றெடுக்கவும் அவர்களின் தொழில்சார் உரிமைகளை வென்றெடுக்கவுமே தொடங்கப்பட்டது என்ற போதிலும் தோட்டத் தொழிலாளர்களைப் பொருத்தவரையில் ஆரம்ப காலந்தொட்டு இன்றுவரை தொழிற்சங்கங்கத் தலைமைகளின் குறுகிய சுய விருப்பு வெறுப்புகளுக்காகவும் தமது அரசியல் இலாபங்களுக்காகவும் வெறும் பகடைக் காய்களாய் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்ற நிலைமைகளே நிலவுகின்றமை யாவரும் அறிந்த ஒன்றாகவே இருக்கின்றது.

தோட்டத்தொழிலாளர்களை மையமாகக் கொண்டு இயங்குகின்ற சகல தொழிற்சங்கங்கத் தலைமைகளும் தேர்தல் காலங்களில் மட்டுமே தொழிலாளர் உரிமைகள் பற்றி பேசுவதோடு வாக்கெடுப்பு முடிந்து பதவிகளில் அமரந்த மறுகணமே ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவாக செயற்படத் தொடங்கி விடுகின்ற துர்ப்பாக்கிய நிலைமைகளே தொடர்ந்தும் அரங்கேறி வருகின்றன.

இன்றைய நிலையில் தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வு பிரச்சினை ஒரு வருடத்தை கடந்திருக்கின்ற போதிலும அது இழுபறி நிலையில் இருப்பதற்கு தொழிற்சங்கங்களின் அசமந்த போக்கே காரணமாகும். ஒவ்வொரு ஈராண்டு முடிவிலும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கான ஒப்பந்தமானது கைச்சாத்திடப்பட வேண்டுமென்ற சட்டங்கள் அமுலில் இருக்கின்ற போதிலும் அவை உரிய காலத்தில் அமுலுக்கு கொண்டுவரப்படாத நடைமுறைகளே பின்பற்றப்பட்டு வருகின்றது.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கான ஒப்பந்தம் கடந்த வருடம் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த போதிலும் அது ஒரு வருடத்தை கடந்திருக்கின்ற நிலையிலும் முடிவு காணப்படாமல் இருக்கின்றது. இது தொழிற்சங்கங்களின் வஞ்சகமான செயற்பாடுகளையும் வங்குரோத்து நிலைமையையுமே பறைசாற்றி நிற்கிறது. தற்போதைய நிலைமைகளை நோக்கும்போது இந்நிலைமை வருடமொன்றை கடந்தாலுங்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. அரசாங்க ஊழியர்கள் உள்ளிட்ட ஏனைய துறைகளின் ஊழியர்களுக்கு கால மாற்றத்திற்கு ஏற்பவும் அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவுகளுக்கு ஏற்பவும் சம்பள உயர்வானது ஏதோ ஒரு வகையில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற போதிலும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் மாத்திரம் கவனிப்பாரற்றே கிடக்கிறது.

பதவிகளில் அமர்ந்த அமைச்சர்களும் சரி, பாராளுமன்ற உறுப்பினர்களும் சரி தம்மையே நம்பி இருக்கின்ற இந்த அப்பாவி மக்களின் அடிப்படை உரிமைகளைக்கூட பெற்றுக் கொடுக்க வக்கனை இல்லாதவர்களாகவே இருப்பதோடு இன்றுவரை தமது இயலாமைகளை மறைத்தும் தாம் தான் அந்த மக்களின் விடுதலையை, சுதந்திரத்தைப் பெற்றுத்தரும் இரட்சகர்கள் என்று தம்பட்டமடித்தும் காலத்தை கடத்தி வருகின்றனர்.

உரிமைகளை பெற்றுத் தராத தொழிற்சங்கங்களில் தொடர்ந்தும் உறுப்பினர்காளாக இருப்பதா அல்லது அவற்றிலிருந்து வெளியேறி சுயாதீனமாக தமது உரிமைகளுக்காய் போராடுவதா என்ற முக்கியமான தீர்மானத்தை தோட்டத் தொழிலாளர்கள் எடுப்பதற்கு இதுவே மிகவும் பொருத்தமான காலமாகும்.

அத்தோடு தோட்டப்புறங்களில் இருக்கின்ற படித்த, புத்திஜீவி மற்றும் சமூக மாற்றம் குறித்து சிந்தித்த வண்ணம் இருக்கின்ற இளைஞர்கள் யுவதிகள் வளர்ந்தவர்கள் யாவரும் இணைந்து இந்த அநீதிக்கு எதிராக தங்களின் இயலுமையின் எல்லைவரை சென்று இயக்கமுற்று ஏமாற்றுக்கார தொழிற்சங்கத் தலைமைகளைத் தோற்கடித்து தமது சமூகத்திற்கு விடிவைத் தேடித்தரும் வரலாற்றுப் பணியில் பங்கெடுக்க வேண்டும்.

இது தத்தமது அரசியல் நிலைப்பாட்டைத்தாண்டிய மலையக மக்களின்பால் உண்மையாகவே அக்கறை கொண்ட எண்ணப்பாட்டுடன் முன்னெடுக்கப்பட வேண்டும். அவ்வாறானதொரு நிலைமைகள் தோற்றுவிக்கப்படாத பட்சத்தில் தொடர்ந்தும் மேற்குறிப்பிட்ட அரசியல், தொழிற்சங்க தலைமைகளிடம் எமது சமூகம் ஏமாந்து போவதை எவராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது.