Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

சுதந்திர வாழ்விற்காக, சமத்துவ வாழ்விற்காக போராடுவோம்!!!

அமெரிக்கா தொடங்கி இலங்கை வரையான ஒவ்வொரு நாடும் தனியார்மயம் எனப்படும் முதலாளித்துவ பொருளாதார முறையே மக்களது வறுமையை தீர்க்கும். நாடுகளை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்று மக்களை நம்பச் சொல்கிறார்கள். தங்களிடையே சண்டை போடும் அய்க்கிய தேசியக் கட்சி, சிறீலங்கா சுதந்திரக் கட்சி என்பன பொருளாதாரம் என்று வரும் போது முதலாளித்துவமே ஒரே தீர்வு என்று ஒத்த குரலில் சொல்கிறார்கள்.

பெளத்த சிங்கள பொதுபல சேனா, தமிழ் தேசியக்கட்சி, முஸ்லீம் காங்கிரஸ், மலையகத் தொழிலாளர்களின் கட்சி என்று சொல்லிக் கொள்ளும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்று மற்றைய கட்சிகளும் இலங்கையில் இன்று இருக்கும் நாட்டைக் கொள்ளையடிக்கும் உலகு தழுவிய பொருளாதார கொள்கையான புதிய நவதாராளமய கொள்கையையே (நவ தாராளமய முதலாளித்துவம்) தமது பொருளாதார கொள்கையாக வைத்திருக்கின்றன.

இவர்கள் சமுதாயத்தின் மிகச் சிறுபகுதியினரான முதலாளிகள் நாட்டு பொருளாதாரத்தின் மிகக் கூடிய பங்கை கொள்ளையடிக்கும் முதலாளித்துவ முறையே முன்னேற்றத்தைக் கொண்டு வரும் என்று பொய் சொல்கிறார்கள். இலங்கையில் மக்கள் தொகையில் இருபது வீதத்திற்கும் குறைவாக இருக்கும் பணக்காரர்கள் தேசிய வருமானத்தில் ஜம்பத்து மூன்று வீதத்திற்கும் அதிகமான பங்கை அபகரித்துக் கொள்கிறார்கள். எனவே உழைக்கும் ஏழை மக்களும், மத்தியதர மக்களுமான எண்பது சதவீதத்திற்கும் அதிகமான மக்களிற்கு இலங்கையின் தேசியவருமானத்தில் நாற்பத்தேழு வீதமே கிடைக்கிறது. இதுவா முன்னேற்றம்?, இதுவா மக்களிற்கான பொருளாதாரம்?. இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து இன்று வரை வந்த எல்லா அரசாங்கங்களும் தமது அரசு மக்களிற்கான அரசு என்று சொல்லிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த புள்ளி விபரங்கள் சொல்லும் உண்மை என்ன?. பெரும்பாலான உழைக்கும் ஏழை மக்களின் பசியும் பட்டினியுமான வாழ்க்கை நிலைகள் சொல்லும் உண்மை என்ன?. இந்த அரசுகள் பணக்காரர்களிற்கான அரசுகள். முதலாளிகள் தமது சொத்துக்களை மேலும் மேலும் பெருக்குவதற்காகவே இருக்கும் அரசுகள் என்ற யதார்த்தத்தை இவை முகத்தில் அறைந்து சொல்லுகின்றன.

உலக வல்லரசுகள் தங்குதடையில்லாமல் ஏழைநாடுகளை சுரண்டுவதற்காக புதிய பொருளாதாரக் கொள்கை ஒன்று 1973 இல் உலக வங்கியின் தலைவராக இருந்த ரொபேர்ட் மக்னமாராவால் முன் வைக்கப்பட்டது. அமெரிக்காவின் ரொனால்ட் ரீகனும், பிரித்தானியாவின் மார்க்கிரட் தட்சரும் இந்த நவபொருளாதார முதலாளித்துவ கொள்கையை நடைமுறைக்கு கொண்டு வந்தார்கள். இலங்கையில் 1977 இல் பதவிக்கு வந்த ஜெயவர்த்தனா திறந்த பொருளாதாரம் என்ற பெயரில் இதை நடைமுறைப்படுத்தினார். இந்தக் கொள்ளைக்கு எதிராக எழும் எதிர்ப்புகளை ஒடுக்குவதற்காகவும், பொருளாதார சுரண்டலை வேகமாக நடைமுறைப்படுத்துவதற்காகவும் தனி ஒரு மனிதனால் சகல முடிவுகளையும் எடுக்கக் கூடிய சர்வவல்லமை பொருந்திய ஜனாதிபதி ஆட்சிமுறை இலங்கையில் ஜெயவர்த்தனாவினால் கொண்டு வரப்பட்டது.

உலக வல்லரசுகள் தமது வர்த்தகத்தை, முதலீடுகளை உலகம் முழுவதும் தங்குதடையில்லாமல் செய்வதற்கு தடையாக இருக்கும் சட்டங்களை இல்லாது ஒழித்தல், பொருளாதார விடயங்களில் அரசின் கட்டுப்பாடுகளை நீக்குதல், விலைக் கட்டுப்பாடுகளை நீக்குதல், முதலாளிகளிற்கு விதிக்கப்படும் வரிகளைக் குறைத்தல், தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்கள் எதுவுமில்லாத சுதந்திர வர்த்தக வலயங்களை அமைத்து தொழிலாளர்களின் உழைப்பை மலிவாக விற்றல, சமுக பாதுகாப்பு சேவைகளான கல்வி, சுகாதாரம் என்பவற்றை தனியாருக்கு விற்றல், கைத்தொழில், விவசாயம் என்பவற்றை விட தொலைத்தொடர்பு, அதி வேகப்போக்குவரத்து, உல்லாசப் பயணத்துறை போன்ற சேவைத்துறைகளிற்கு அதிகமான அரச முதலீடுகளை ஒதுக்குவதன் மூலம் மக்கள் பணத்தில் செய்யப்படும் அடிப்படை கட்டுமானங்களை வெளிநாட்டு முதலாளிகள் எதுவித செலவுமின்றி பயன்படுத்த அனுமதித்தல், இயற்கையை அழிப்பதைத் தடுப்பதற்காக ஒரளவிற்கேனும் இருந்த சட்டங்களை இல்லாது ஒழித்தல் போன்றவை நவபொருளாதார முதலாளித்துவத்தின் வெளிப்பாடுகள் ஆகும்.

புலிகளைத் தோற்கடித்து தமிழ் மக்களைக் கொன்று குவித்து போரை முடிவுக்கு கொண்டு வந்த பிறகு நவதாராள முதலாளித்துவத்தின் இரண்டாம் கட்டத்தை மகிந்த ராஜபக்ச முன்னிலும் கூடுதலான அடக்குமுறையுடன் கொண்டு வந்தார். இரண்டு முறைக்கு மேலும் ஒருவர் ஜனாதிபதியாக வரலாம், பொது மக்களின் பிரச்சனைகளில் தலையிடும் அதிகாரத்தை இராணுவத்திற்கு வழங்கியமை, போர் முடிந்து விட்டது சொல்லிக் கொள்ளும் அதேவேளை வடக்கு-கிழக்கில் இருந்து இராணுவத்தை அகற்றாமல் வைத்திருத்தல், பல்கலைக்கழக மாணவர்களிற்கு இராணுவப் பயிற்சி வழங்குவதன் மூலம் மக்களை இராணுவமயமாக்குதல், இந்த அநீதிகளை எதிர்ப்பவர்களை கடத்துதல், கொலைசெய்தல் மூலம் சமுதாயத்தை அச்சுறுத்தி மெளனமாக்குதல் என் இந்த இரண்டாம் கட்டம் தனது பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.

மக்களிற்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று சொல்லி அந்நிய முதலாளிகளிற்கு நாட்டை விற்கிறார்கள் இந்த தேசபக்த முகமூடி போட்ட கொள்ளையர்கள். ஆனால் மக்களோ வேலைவாய்ப்புகள் இல்லாமல் வெளிநாடுகளிற்கு வேலை தேடிப் போகிறார்கள். இதுவரை இருபது லட்சம் பேர் வெளிநாடுகளிற்கு வேலைகளிற்காக சென்றிருக்கிறார்கள். இவர்களில் 93.3 வீதமானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளிற்கு தொழிலாளர்களாக சென்றுள்ளனர். தொழிலாளர் உரிமைகள் எதுவுமே இல்லாத மத்திய கிழக்கு நாடுகளின் பாலைவனங்களில் இரத்தத்தையும், வியர்வையையும் சிந்தி உழைக்கும் ஏழைத்தொழிலாளர்கள் அனுப்பும் அந்நிய செலாவணியில் இருந்து தான் முழு நாடுமே பராமரிக்கப்படுகிறது. சில புள்ளி விபங்களைப் பார்ப்போம். 2013 இல் பொருட்களின் இறக்குமதிக்கு செலவிடப்பட்ட தொகை 18.003 பில்லியன் டொலர்கள். ஆனால் இறக்குமதியின் மூலம் கிடைத்த வருமானம் 10.394 பில்லியன் டொலர்கள். அண்ணளவாக 8 பில்லியன் டொலர்கள் பற்றாக்குறையாக இருக்கிறது. வெளிநாடுகளில் வேலை செய்யும் தொழிலாளர்களிடமிருந்து கிடைக்கும் அந்நியச்செலாவணி 6.4 பில்லியன் டொலர்கள். இலங்கை அரசாங்கத்தின் பற்றாக்குறையின் பெரும்பகுதி இந்தத் தொழிலாளர்களின் உழைப்பின் மூலமே நிரப்பப்படுகிறது. அவர்களது உழைப்பின் பலனை சுரண்டும் இலங்கை அரசு தொழிலாளர்களின் உரிமைகள், பாதுகாப்பு குறித்து எதுவித கவனமும் செலுத்துவதில்லை.

முதலாளித்துவத்தின் பொய்கள் இவ்வாறு தான் இருக்கின்றன. ஜக்கிய நாடுகள் சபையின் கணக்குப்படி உலகில் 192 நாடுகள் இருக்கின்றன. விரல்விட்டு எண்ணக்கூடிய சில நாடுகளை தவிர பெரும்பாலான நாடுகள் முதலாளித்துவ பொருளாதார அமைப்பு முறையையே தமது பொருளாதாரக் கொள்கையாக வைத்திருக்கின்றன. இவற்றில் மிகப்பெரும்பான்மையான நாடுகள் வறுமையில் பசியும், பட்டினியுமாக வாழும் மனிதர்களைக் கொண்ட நாடுகளாகவே இருக்கின்றன. பொற்காலம் ஒன்று வரும் என்று சொல்லி கானல்நீரைக் காட்டுகிறார்கள். முப்பது வருடங்களிற்கு முன்பு இருந்த வாழ்க்கை வசதிகள் கூட இன்று பெரும்பாலான மக்களிற்கு கிடைப்பதில்லை. மாலை நேரங்களில் ஒன்றாக இருந்து உணவருந்தி வானொலியில் பாடல்கள் கேட்ட காலங்கள் எல்லாம் கனவுகள் போலாகி விட்டன. வேலை தேடி வேறு நாடுகளிற்கு, வேறு நகரங்களிற்கு குடும்பத்தை பிரிந்து போக வேண்டிய நிலையிலேயே பலர் உள்ளனர். உள்ளூரில் வேலை செய்பவர்களும் அதிகநேரம் வேலை செய்தால் தான் குடும்ப செலவுகளை சமாளிக்க முடியும் என்ற அவலநிலையிலேயே உள்ளனர்.

மனித வாழ்க்கையை சீரழிக்கும் இந்த முதலாளித்துவ கொடுமைகளிற்கு எதிராக நாம் வைக்கும் தீர்வு எதுவாக இருக்க முடியும்?. மிகப் பெரும்பான்மையான உழைக்கும் ஏழை மக்கள் மகிழ்ச்சியாக, சுதந்திரமாக, தன்மானத்துடன் வாழ நாம் வைக்கும் தீர்வு எதுவாக இருக்க முடியும்?. சோசலிசப் பொருளாதாரம் ஒன்றே உழைக்கும் மக்களின் கைவிலங்குகளை உடைத்தெறியும். பாரிய உற்பத்திகளின் உரிமையை மக்கள் மயமாக்கல், பன்னாட்டு முதலாளிகளிற்கு சேவகம் செய்யும் பொருளாதாரக் கொள்கைகளிற்கு மாற்றாக மக்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லுதல், சம்பள முரண்பாட்டை ஆகக் குறைந்த மட்டத்திற்கு கொண்டு வருதல், அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைத்து எல்லோரும் அவற்றை பெற்றுக் கொள்ள வசதிகள் செய்தல், வேலை நேரத்தை முடிந்தளவு குறைப்பதன் மூலம் குடும்பத்துடன் கூடியளவு நேரத்தை செலவளிக்கும் மகிழ்ச்சியான மனிதர்களையும், சமுகத்தையும் உருவாக்குதல் என இந்த மக்களிற்கான பொருளாதார அமைப்பு சமத்துவமான வாழ்க்கையை நோக்கி முன் செல்லும்.

சோசலிசப் புரட்சிகள் தோற்று விட்டன, முன்னைய சோசலிச நாடுகள் முதலாளித்துவப் பாதைக்கு திரும்பி விட்டன, இனி ஒரு புரட்சி, இனி ஒரு சமத்துவப் பொருளாதார பாதை சாத்தியமில்லை என்று முதலாளித்துவவாதிகள் கூச்சல் இடுகின்றனர். சோசலிச நாடுகளிற்குள் இருந்த உள் பிரச்சனைகள், குறைபாடுகள், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்த எதிரிகளின் தொடர்ச்சியான தாக்குதல்கள் என்பன காரணமாக இந்த புதிய, இளம் அரசுகள் தோற்கடிக்கப்பட்டன. அவை தோற்கடிக்கப்பட்டன என்பதற்காக முதலாளித்துவத்தின் கொடுமைகளை சகித்துக் கொண்டு நடைப்பிணங்களாக வாழ வேண்டுமா?. முயற்சி தான் மனித வாழ்க்கையின் ஆதாரம். நாமும், நமது சந்ததியினரும் மகிழ்ச்சியாக வாழ போராடுவோம். ஆண்களும்,பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ போராடுவோம்.

ஏனெனில் முதலாளித்துவத்திற்கு ஒரு முடிவு கட்டாவிட்டால் அது மனிதத்துவத்தை அழித்து விடும். தான் உயிர் வாழ்வதற்காக மனிதர்களை இனம், மதம், மொழி, பிரதேசம் என்று அது பிரித்து சண்டையிட வைக்கிறது. ஒவ்வொரு நாளும் முதலாளித்துவத்துவம் தனது இறுக்கமான, ஈவிரக்கமற்ற கொலைக்கரங்களால் மனிதர்களை மூச்சுத் திணற வைக்கிறது. ஜெயவர்த்தனாவின் ஆட்சி கொடுமையானது என்றோம், ஆனால் அதன் பிறகு வந்த பிரேமதாசா, சந்திரிகா, மகிந்த என்று ஒவ்வொருவரும் தமது மக்கள் விரோதத்தை, கொள்ளைகளை, கொலைகளை கூட்டிக் கொண்டே போனார்கள். ஆகவே இது தனி மனிதர்களின் குணங்களா? இல்லை இந்த கொலைகளும், கொள்ளைகளும் முதலாளித்துவ பொருளாதார முறையின் குணாம்சங்கள். முதலாளித்துவத்தின் சுரண்டல் அதிகரிக்க அதிகரிக்க மக்கள் மீதான ஒடுக்குமுறைகளும் அதிகரிக்கின்றன.

இன்றிருக்கும் மகிந்த ராஜபக்சவை தோற்கடித்து விட்டு எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் என்று சொல்லப்படும் மைத்திரி சிரிசேனா ஜனாதிபதியாக வந்தாலும் இந்த அடக்குமுறைகள் தொடரத்தான் போகின்றன. நாட்டின் சொத்துக்களையும், மக்களின் உழைப்பினையும் கொள்ளையடிப்பதும் தொடரத்தான் போகின்றது. ஏனெனில் இவர்கள் எல்லோரும் முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் அடிவருடிகள். ஜனநாயகம், குடும்ப ஆட்சியை ஒழித்தல் என்று பல முகமூடிகளை போட்டு வரும் இவர்களிற்கும் மகிந்த ராஜபக்ச கும்பலிற்கும் எதுவித வித்தியாசங்களும் இல்லை.

ஒன்று சேர்ந்து அணி திரண்டு ஒடுக்குமுறைகளிற்கு எதிராக, முதலாளித்துவ கொள்ளைகளிற்கு எதிராக போராடுவது ஒன்றே நம் முன் இருக்கும் ஒரே தெரிவு. வாழ்வது ஒரு முறை தான், அதை மகிழ்ச்சியாக வாழ்ந்திட போராடுவோம். நாம் ஒதுங்கி இருந்தால் கூட அவர்கள் நம்மை விட்டு வைக்கப் போவதில்லை. இலங்கைத்தீவு எங்கும் கொல்லப்பட்டவர்கள் பலரும் அப்பாவிப் பொதுமக்கள் தான், அடங்கி இருந்தவர்கள் தான். ஆனாலும் கொல்லப்பட்டார்கள். கொலைகாரர்கள் உயிர்ப்பிச்சை இடுவதில்லை. கெஞ்சினால், எதிர்ப்பு காட்டாமல் அஞ்சினால் அவர்கள் மிஞ்சுவார்கள். எம் சகோதர, சகோதரியரே எழுந்து வாருங்கள், சுதந்திர வாழ்விற்காக, சமத்துவ வாழ்விற்காக போராடுவோம்.