Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

பாடுபடத் தொடங்கி வருடங்கள் 200 தோட்டத் தொழிலாளர் எமக்கு வீட்டு முகவரி இல்லை

நாங்கள் இன்றுவரை 45 சதுர அடிக்கும் குறைவான லைன் அறைகளிலேயே வாழ்கின்றோம். எமது முந்தைய தலைமுறையினர் அனைவரும் இங்குதான் பிறந்தார்கள், இந்த லைன் அறைகளிலேயே மடிந்தார்கள். எமது பிள்ளைகளும், பிள்ளைகளின் பிள்ளைகளும் இப்படித்தான் வாழ வேண்டுமா? இன்னும் எத்தனை தலைமுறைகள் இப்படியே வாழ வேண்டும்.

புகையிரதப் பாதைகளை அமைத்ததும், நெடுஞ்சாலைகளை அமைத்ததும் எமது மூதாதையரின் கரங்களே. அவர்கள் சிந்திய இரத்தம், வியர்வை, கண்ணீரினால் ஆயிரக்கணக்கான கோப்பித் தோட்டங்கள், தேயிலைத் தோட்டங்கள், இரப்பர் தோட்டங்கள் செழித்து வளர்ந்தன. அந்தத் தோட்டங்களுக்கு உரிமையுடைய கம்பனிகளின் துரைமார்களுக்கு கொழும்பில் கட்டப்பட்ட மாளிகை போன்ற வீடுகள் உள்ளன. உல்லாச வாகனங்கள் உள்ளன. அது மட்டுமல்ல, எமது வாக்குகளால் அதிகாரத்திற்கு வந்த அமைச்சர் மற்றும் பிரதானிகளின் சுகபோக வாழ்விற்கு எந்தக் குறையும் இல்லை. ஆனால், வீடு கட்டிக்கொள்ள எமக்கு ஒரு காணித்துண்டும் கிடையாது. குடியிருக்க வீடு கிடையாது. தண்ணீர் கிடையாது. கழிவறைகள் கிடையாது. போக்குவரத்து வசதிகள் இல்லை. பிள்ளைகளுக்கு படிக்க வசதியில்லை. போசாக்கின்மையால் நோய்களுக்கும் குறைவில்லை.

அரசாங்கத்திற்கு சொந்தமான தபால் திணைக்களம் எங்களைத் தவிர சகல இலங்கை மக்களுக்கும் அவர்களது விலாசத்திற்கு கடிதங்களைக் கையளிக்கின்றன. தமக்குரிய வீட்டில் இருந்தாலும், வாடகை வீட்டில் குடியிருந்தாலும் ஒவ்வொருவருக்கும் விலாசம் உண்டு. தபால் திணைக்களம் அந்த ஒவ்வொருவருக்கும் அவர்களது பெயருக்கு வரும் ஒவ்வொரு கடிதத்தையும் அவர்களதுகைகளிலேயே ஒப்படைக்கின்றது. ஆனால், தோட்டத் தொழிலாளர்களாகிய எங்களுக்கு விலாசம் இல்லை. ஆகவே, எமது பெயருக்கு வரும் கடிதங்கள் தோட்ட நிர்வாகியின் மூலம் அவரது விருப்பத்திற்கேற்ப பெற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம்.

விலாசமும் கிடையாது, இலங்கையில் ஏனைய பிரஜைகள் அனுபவிக்கும் குறைந்தபட்ச சிவில் உரிமைகளும் கூட தோட்டத் தொழிலாளர்களாகிய எங்களுக்குக் கிடையாது. எமது வாக்குகளால் அதிகாரத்திற்கு வந்த எந்தவொரு அரசாங்கமும் அந்த உரிமைகளில் எதையும் எங்களுக்கு வழங்காதது மாத்திரமல்ல, தோட்டத் தொழிலாளர்களின் முழுமையான சிவில் உரிமைகளை இலங்கை அரசு இதுவரை ஏற்றுக் கொள்ளவுமில்லை.

ஆகவே, துன்பப்பட்டது போதும். இது, எமது உரிமைகளுக்காக போராட வேண்டிய காலம். தனித் தனியாக அல்ல சேர்ந்து போராட வேண்டும். அதற்காக தோட்டத் தொழிலாளர் மத்தியநிலையத்தோடு இணையுங்கள்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு காணியும் வீடும் மாதாந்த சம்பளமும் வென்றெடுக்கப் போராடுவோம்! 

தோட்டத் தொழிலாளர்களுக்கான சிவில் உரிமைகளை வழங்கு! 

தோட்டத் தொழிலாளர்களுக்கு நிரந்தர மாதச் சம்பளத்தை வழங்கு!