Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

யாழ் புத்தூர் கலைமதி கிந்துசிட்டி மயானத்தில் பிணம் எரிப்பதற்கு இடைக்கால தடை உத்தரவு

18.09.2017 திங்கட்கிழமை யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றத்தில் மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் அமைந்துள்ள கிந்துசிட்டி மயானத்தை அகற்றக்கோரிய வழக்கு மா.இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது மயானத்தை அகற்றக்கோரி வழக்கு பதிவு செய்த வழக்கறிஞர் முன்வைத்த நியாயமான கோரிக்கையின் அடிப்படையில் இன்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 04.06.2017 அன்று மல்லாகம் நீதிமன்றத்தால் 10 அடி உயரத்திற்கு சுற்று மதில் அமைத்து அதன் பின்னர் ஒரு வருடகாலத்திற்குள் GAS CHAMPER உடல்களை எரிப்பதற்கு நடவடிக்கைகள் செய்யப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

ஒரு வருடத்திற்குள் GAS CHAMPER பொருத்தப்படாவிட்டால் இவ் மயானத்தில் பிணம் எரிப்பது தடுத்து நிறுத்தப்படும். முக்கியமாக அப்பகுதியில் உள்ள மக்கள் அதை அனுமதித்தால் மட்டும் தான் மயானத்தை புனரமைக்க முடியும் என தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், புத்தூர் கலைமதி மக்கள் யாழ்ப்பாணம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு 17.09.2017 இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது கலைமதி மக்கள் தொடர்ச்சியான எதிர்ப்பை சத்தியாக்கிரக போராட்டமூடாக வலியுறுத்தி வருகின்றமையை சுட்டிக்காட்டிய நீதிபதி மக்களின் எதிர்ப்பையும் மீறி புனரமைப்பு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

புத்தூர் மேற்கு கிந்துசிட்டி மயான விவகாரத்தில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் அனைவரையும் யாழ்.மேல் நீதிமன்றுக்கு வருமாறு நீதிபதி இளஞ்செழியன் அச்சுவேலிப் பொலிஸார், கிராம சேவகர் ஊடாக தெரிவித்திருந்தார்.

 

இன்று காலை குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மேற் குறித்த உத்தரவை பிறப்பித்த நீதிபதி வழக்கை பிற்பகலுக்கு ஒத்தி வைத்தார்.

நீதிபதியின் இந்த உத்தரவுக்கு அமைய போராட்டத்தில் பங்கேற்றுள்ள 300 வரையான கிராம மக்கள் மன்றுக்கு வருகை தந்திருந்தனர்.

குறித்த மக்கள் அனைவருக்கும் முன்னிலையில் மீண்டும் பிற்பகல் 01 மணிக்கு குறித்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போதே புத்தூர் மேற்கு கிந்துசிட்டி மயானத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளுக்கும், இறந்தவர்களின் சடலங்களை குறித்த மயானத்தில் எரிப்பதற்கும் யாழ்.மேல் நீதிமன்றத்தால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிந்துசிட்டி மயானப் புனரமைப்புத் தொடர்பில் மல்லாகம் மாவட்ட நீதவானால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கெதிராக புத்தூர் கலைமதி கிராம மக்கள் சார்பாக கலைமதி சனசமூக நிலைய நிர்வாகத்தினரால் யாழ்.மேல் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

வழக்குத் தொடுநர் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி தம்பையா புத்தூர் மேற்கு கிந்துசிட்டி மயானத்தை அண்மித்த பகுதியில் நான்கு மயானங்கள் அமைந்திருப்பதாக நீதிபதியின் கவனத்திற்குக் கொண்டு சென்றார்.

அவரது கருத்தை கவனத்தில் கொள்வதாக நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்தார். மேலும், மயானத்தை அகற்றக் கோரி இதுவரை காலமும் அமைதியான முறையில் போராடிய மக்களுக்குப் பாராட்டுத் தெரிவித்த நீதிபதி சம்பந்தப்பட்ட அரசாங்கத் திணைக்களங்களுடன் தொடர்பு கொண்டு மயானத்தை வேறு இடங்களுக்கு மாற்றுவது தொடர்பில் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் போராட்டத்தை கைவிடுமாறும் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.