Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

ஊடகங்களுக்கான அறிக்கை - சி.கா.செந்திவேல்

எட்டு மணி நேர வேலை கோரிப் போராடிய அமெரிக்காவின் சிக்காக்கோத் தொழிலாளர்களின் இரத்தத்திலும் உயிர்த் தியாகத்திலும் உதித்ததே உலகத் தொழிலாளர்களின் சர்வதேசப் போராட்டத்தினமான மே தினமாகும். போராட்டத்தில் பிறந்து மீண்டும் உலகத் தொழிலாளர்களுக்கும் ஒடுக்கப்படும் மக்களுக்கும் போராட்ட உத்வேகம் அளித்து வரும் மேதினத்திற்கான முதலாம் திகதியினை மறுப்பதற்கோ, மாற்றுவதற்கோ அல்லது தடுப்பதற்கோ முதலாளிய ஆட்சியினருக்கு எவ்வித உரிமையும் கிடையாது. மைத்திரி - ரணில் தலைமையிலான மக்கள் விரோத ஆட்சியானது மேதினத்தை முதலாம் திகதிக்குப் பதிலாக மே ஏழாம் திகதியில் நடாத்த வேண்டும் என எடுத்துள்ள முடிவு தொழிலாளர் விரோத முடிவேயாகும். இதனை நாட்டின் தொழிலாளர்களும் உழைக்கும் மக்களும் அவர்களது கட்சிகளும் தொழிற்ச்சங்கங்களும் நிராகரித்து எதிர்ப்பது அவசியமாகும். எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியும் ஆட்சியினரது மேற்படி முடிவை மிக வன்மையாக கண்டித்து எதிர்க்கிறது. அதே வேளை மே முதலாம் திகதியே மேதினத்தை நடாத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது. 

இவ்வாறு புதிய ஜனநாயக மாச்சிச லெனினிசக் கட்சியின் அரசியல் குழு சார்பாக அதன் பொதுச் செயலாளர் சி.கா.செந்திவேல் மேதினத் திகதி மாற்றம் பற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. இலங்கையில் கொலனிய காலத்திலிருந்தே தொழிலாளர் இயக்கங்கள் தோன்றி வளர்ந்து வந்த சூழிலிலே பல்வேறு அடக்கு முறைகளுக்கு மத்தியில் மேதினம் சர்வதேசப் போராட்டத்தினமாக நினைவு கூரப்பட்டு வந்திருக்கிறது. 1956ம் ஆண்டுக்குப் பின்பே மேதினம் பொது விடுமுறைத் தினமாக்கப்பட்டது ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்த காலங்களில் பௌத்த தினங்களான வெசாக் தினங்களைச் சாட்டாக வைத்து மேதினங்களைத் தடுப்பதிலும் பொலிஸ் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவதிலும் முன்னின்று வந்துள்ளது. அவற்றுக்கு எதிராகத் தொழிலாளர்களும் இடதுசாரிக் கட்சிகளும் போராடி வந்துள்ளன. அதன் வழியிலேயே இன்றைய மைத்திரி-ரணில் தலைமையிலான கூட்டு ஆட்சியானது தொழிலாளர்களின் மேதினத்தை அதற்குரிய நாளில் இருந்து ஏழாம் திகதிக்கு மாற்றியுள்ளது. இத்தகைய தொழிலாளர் விரோத முடிவின் மூலம் மேதினத்தின் முக்கியத்துவத்தை நிராகரித்து முதலாளிய வர்க்க சக்திகளை மனம் குளிர வைத்தும் உள்ளது. எனவே நாட்டின் தொழிலாளர்களும் உழைக்கும்  மக்களும் ஒடுக்கப்படும் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து நேர்மையான இடதுசாரி ஜனநாயக முற்போக்கு சக்திகளுடன் ஐக்கியப்பட்டு எதிர்வரும் மேதினத்தை மே முதலாம் திகதியில் நடாத்துவதற்குத் தயாராக வேண்டும் என்பதை எமது கட்சி வலியுறுத்துகிறது.

சி.கா.செந்திவேல்

பொதுச் செயலாளர்

31-03-2018