Tue04232024

Last updateSun, 19 Apr 2020 8am

ஊடகங்களுக்கான அறிக்கை -01.03.2016 -புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி

நல்லாட்சி என்னும் முகமூடி அணிந்த இன்றைய கூட்டு அரசாங்கத்தின் கீழ் பேரினவாத வெறியாட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதையே அம்பாறை நகரின் முஸ்லீம் கடைகள் பள்ளிவாசல் மீதான அண்மைய தாக்குதல்களும் எரிப்புச் சம்பவங்களும் எடுத்துக் காட்டுகின்றன. சம்பவம் இடம்பெற்று சுமார் ஒரு மணி நேரம் கழித்தே பொலிசார் அவ்விடத்திற்கு வந்ததாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் மூலம் மேற்படி தாக்குதல் பேரினவாத நோக்கில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதா என்னும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது முஸ்லீம்கள் மீது இடம் பெற்று வந்த தொடர் தாக்குதல்களில் ஒன்றாகவே அமைந்துள்ளது. எனவே பேரினவாத வக்கிரம் கொண்ட அம்பாறைத் தாக்குதலை எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. 

இவ்வாறு கடந்த 26ம் திகதி இரவு அம்பாறை நகரின் முஸ்லீம் கடைகள் பள்ளி வாசல் மீதான தாக்குதல் வாகனங்கள் எரியூட்டப்பட்மை பற்றி புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் அரசியல் குழு சார்பாக அதன் பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவ் அறிக்கையில், கடந்த காலத்தைப் போன்றே இன்றும் பேரினவாதச் செயற்பாடுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சட்டபூர்வமாகவும் சட்டங்களை மீறியும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் நாட்டின் தமிழ் முஸ்லீம் மலையகத் தமிழ் மக்கள் கடுமையாகன பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறார்கள். நல்லாட்சி நல்லெண்ணம் சமாதானம் போன்ற திரைகளின் பின்னால் இடம் பெற்றுவரும் பேரினவாத செயற்பாடுகளுக்கு அரசாங்கத்தில் அங்கம் பெற்று வரும் முஸ்லீம், மலையகத் தமிழ் பிரதிநிதிகளோ அல்லது எதிர்க்கட்சி என்ற பெயரில் இருந்து வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ திடமான தமது எதிர்ப்பைக் காட்டுவதில்லை. வெறும் வாய் உபசாரத்திற்குச் சம்பவங்கள் இடம் பெறும் போது அறிக்கைகள் வெளியிட்டு விட்டு தத்தமது பதவிகளில் ஒட்டி இருந்து சுகபோகம் அனுபவித்து வருகிறார்கள். அடையாள அரசியலை உசுப்பிவிட்டு, பாராளுமன்றம் வரை சென்று தமக்குரிய பதவிகளைப் பெற்றுக் கொள்ளும் முஸ்லீம் தலைமைகள் சாதாரண முஸ்லீம் மக்கள் எதிர்கொள்ளும் பேரினவாதப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதில்லை. கொடுக்கவும் மாட்டார்கள்.

எனவே, பேரினவாதத்தை எதிர்கொண்டு வரும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் குறுகிய நிலைப்பாடுகளுக்கு அப்பாலான சிங்கள உழைக்கும் மக்களோடு இணைந்து வெகுஜனத் தளங்களில் முன் செல்வதையிட்டுச் சிந்திப்பதே பேரினவாதத்தை முறியடிப்பதற்குரிய வழிமுறையாகும். ஆளும் வர்க்க சக்திகள் ஒரு போதும் பேரினவாதத்தைக் கைவிட மாட்டார்கள். அதே போன்று தத்தமது இனங்கள் மத்தியில் இருந்து வரும் அடையாள அரசியல் சக்திகள் மக்களைக் குறுகிய நிலைகளுக்குள் வைத்துத் தமது ஆதிக்க அரசியலை முன்னெடுப்பதையே நோக்காகவும் போக்காகவும் கொண்டுள்ளனர். இதனை அனைத்துத் தரப்புகளின் உழைக்கும் மக்களும் புரிந்து கொள்வது அவசியமாகும். 

சி. கா. செந்திவேல்

பொதுச் செயலாளர்.