Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

நிபுணர்குழு ஆய்வறிக்கை, மக்கள் பெரும் அதிர்ச்சி!

சுன்னாகம் மின்நிலையத்தைச் சூழவுள்ள பிரதேசங்களில் அண்மைய ஆண்டுகளாக நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்து நன்னீர் மாசடைந்து வந்துள்ளது. இதனால் பாதிப்படைந்த மக்களும், பொதுஅமைப்புகளும், சமூக ஆர்வலர்களும், இதனை வெளிக்கொணர்ந்து வெகுஜன செயற்பாடுகளை முன்னெடுத்தனர்.

அதன் காரணமாக வடக்கு மாகாணசபை தூய நீருக்கான விசேட செயலணியை உருவாக்கி நன்னீரில் கழிவு எண்ணெய் கலந்து மாசடைவு ஏற்பட்டுள்ளதா என ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க நிபுணர்குழு ஒன்றினை நியமித்தது. அந் நிபுணர் குழு நேற்று முன்தினம் முதற்கட்ட ஆய்வறிக்கையெனக் கூறி தமது முடிவை வெளியிட்டிருந்தது. அதில் மாசடைந்துள்ளதாக மக்களால் அடையாளம் காணப்பட்ட நீரில் ஆபத்தான நச்சு இரசாயன மூலகங்கள் எதுவும் இல்லையெனவும் குறிப்பிட்டிருந்தது. இதனால் பாதிக்கப்பட்ட நானூறு வரையான நன்னீர் கிணறுகளைப் பயன்படுத்தி வரும் சுமார் இருபதினாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நிபுணர் குழுவின் முதல் அறிக்கை இவ்வாறெனில் அடுத்த கட்ட அறிக்கைகள் எவ்வாறு அமையும் என்பதை சொல்லத் தேவையில்லை. மக்களால் நன்கு உணரப்பட்ட நிலத்தடி நன்னீர் மாசடைந்துள்ள அபாயத்தினை மூடி மறைக்கும் உள்நோக்கத்துடன் இம்முடிவு வெளியிடப்பட்டுள்ளதா எனும் நியாயமான சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மாகாணசபையின் நிபுணர்குழு  இதன்மூலம் தனது நம்பகத்தன்மையை இழந்து நிற்பதையே காணமுடிகிறது. இவ்வாறான நிபுணர் குழுவின் மக்கள் விரோத முடிவினை எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. அதே வேளை கழிவு எண்ணெய்க் கலப்பால் பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியம் 23.03.2015ல் வெளியிட்டுள்ள சந்தேகங்களும் எழுப்பியுள்ள கேள்விகளும் முற்றிலும் நியாயமானவை என்பதை எமது கட்சி மக்களோடு இணைந்து ஆதரிக்கிறது.

இவ்வாறு புதிய ஜனநாயக  மாக்சிச லெனினிசக் கட்சியின் அரசியல் குழு சார்பாக அதன் பொதுச்செயலாளர் சி.கா.செந்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் அவ்வறிக்கையில் நிபுணர் குழுவானது 40 கிணறுகளின் நீர் மாதிரிகளை ஆய்வு செய்தே மேற்படி முடிவிற்கு வந்துள்ளதாகக்  கூறுகிறது.

ஆனால் வடக்கே தெல்லிப்பளை வரையும் மேற்கே சங்கானை வரையும் கிழக்கே நீர்வேலி வரையும் தெற்கே கொக்குவில் வரையும் “கிறீஸ் பூதம்”; போன்று கழிவு எண்ணெய்ப் படிவுகள் பரவிவந்துள்ளன. எனவே மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை அவலத்திற்கு உள்ளாக்கி நிற்கும் நன்னீர் மாசடைதலுக்கு மாகாணசபையும் முதலமைச்சரும் உரிய பதிலை தாமதமின்றி முன்வைக்க வேண்டும் என வற்புறுத்துகின்றோம். அத்துடன் மின்நிலைய வளாகத்தில் எவ்வாறு கழிவு எண்ணெய் தேக்கப்பட்டு வந்தது என்பதையும் நிலத்தடிக்குள் அவை செல்வதற்கு எவ்வாறான வழிமுறைகள் பின்பற்றப்பட்டன என்பது பற்றியும் உரிய விசாரனைகள் மூலம் கண்டறியப்பட வேண்டும். அதனை மக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படவும்  வேண்டும். இவ்விடயத்தில் நொதேன் பவர் கம்பனியின் லாபத்தையோ அதன் பங்காளர்களையோ சில பெரும் புள்ளிகளின் நலன்களையோ பாதுகாத்து மக்களுக்கு துரோகம் செய்வது மன்னிக்க முடியாத  குற்றம் என்பதை எமது கட்சி மக்கள் சார்பாக சுட்டிக்காட்டுகிறது எனவும் மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சி.கா.செந்திவேல்
பொதுச்செயலாளர்.