Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

அம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள் மிருகத்தனமாக தாக்கப்பட்டதை கண்டிப்போம்!

நேற்றுக் காலையில் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தொடர்ச்சியாக எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த துறைமுக ஊழியர்கள் கடற்படை தளபதியின் தலையீட்டுடன் தாக்கப்பட்டுள்ளார்கள். இந்த தாக்குதல் சம்பவமானது அரசாங்கத்தின் தேவைக்காக அரசாங்கமும் அறிந்த நிலையில் நடந்துள்ளது தெரிகின்றது. அம்பாந்தோட்டை துறைமுகம் உட்பட 15000 ஏக்கர் காணி விற்கப்படுவதற்கும், துறைமுகத்தை தனியார்மயப்படுத்துவதற்கும் எதிராகவும், தமது தொழில் பாதுகாப்பு ஒழிக்கப்படுவதற்கு எதிராகவும் துறைமுக ஊழியர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 

முந்தைய அரசாங்கம் இந்த ஊழியர்களை தற்காலிக சமயாசமய அடிப்படையில் சேவைக்கு இணைத்துக் கொண்டது. துறைமுக அதிகார சபையில் நிரந்தர ஊழியர்களாக இணைத்துக் கொள்வதற்குப் பதிலாக தனியார் துறைக்கு இணைத்துக் கொள்வதால் அவர்கள் ஒருபுறம் ஏமாற்றப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகத்தினால் தனியார் துறை ஊடாக இன்னொரு புறம் அவர்களது தொழில் ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளது. எனவே, முந்தைய அரசாங்கத்தை போன்றே இன்றைய அரசாங்கமும் இந்த துறைமுக ஊழியர்களின் உரிமைகளை பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. 

தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையும் அந்த கொள்கையை செயற்படுத்துவதன் ஊடாக ஏற்படக் கூடிய ஜனநாயகத்திற்கு விரோதமான நிலைமைகள் சம்பந்தமாகவும், வெளிப்படையான சம்பவம் என்ற வகையில் அரசாங்கத்தின் ஜனநாய விரோத பயணத்தின் தரமான திருப்பமாகவும் இச்சம்பவத்தை கருத முடியும்.

விஷேடமாக கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகம் சம்பந்தமாக புனையப்பட்ட மன்மதக் கதைகள் மக்கள் மத்தியில் நாளுக்குநாள் அம்பலத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. கடந்த ராஜபக்ஷ ஆட்சி ரத்துபஸ்வல, கட்டுநாயக்க, சிலாபம் மக்கள் மீது ராணுவத்தை ஏவி நடத்திய அடக்குமுறைகளைவிட இந்த நடவடிக்கை சற்று வித்தியாசமாக இருப்பது உயிரிழப்பு ஏற்படவில்லை என்பதுதான். துறைமுக ஊழியர்களை பொல்லுகளாலும், துப்பாக்கிகளாலும் தாக்கியமை, வெடிவைத்தமை, ஊடகவியலாளர்களை தாக்கியமை, கடற்படைத் தளபதி சிவில் உடையில் வந்து துறைமுக ஊழியர்களை தாக்கியமையையும் பார்க்கும்போது அரசாங்கம் எதிர்காலத்தில் மக்களுக்கு ‘வழங்கவிருக்கும் ஜனநாயக’த்தின் முன்னறிவிப்புதான் இது என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. 

இது ஒரு பாரதூரமான சம்பவம் என்பதும், தொழிலாளர்களும் ஊடகவியலாளர்களும் தாக்கப்பட்டமை, வெடிவைத்தமை, ராணுவத்தை பயன்படுத்தி சிவில் மக்களின் செயற்பாடுகளை அடக்குவதும் மற்றும் உயர் பதவி வகிக்கும் ஒரு அதிகாரி சிவில் உடையில் வந்து தனிப்பட்ட முறையில் அந்த தாக்குதலுக்கு வழிகாட்டுவதும் எந்தவகை ஜனநாயகம் என்று ஆட்சியாளர்களிடம்தான் கேட்க வேண்டும். மேலும் இந்த ஆட்சி ஜனநாயகமானதாகும் என வெள்ளையடிக்க முயலும் பல்வேறு பிரிவுகளிடம் இந்த சம்பவத்திற்கும் ரத்துபஸ்வலயில் குடிநீர் கேட்டு போராடிய மக்களை சுட்டதற்கும் என்ன வித்தியாசம் என்று கேள்வி கேட்க வேண்டும்.

உருவாகி வரும் ஜனநாயகத்திற்கு முரணான நிலைமைகளுக்கு எதிராக உழைக்கும் மக்கள் முதற்கொண்டு ஜனநாயகத்தை விரும்பும் சக்திகள் உடனடியாக செயற்பட வேண்டுமென்பதனை நாம் வலியுறுத்துகின்றோம். அதேபோன்று அரசாங்க அதிகாரத்திற்குப் புறம்பாக மக்கள் அதிகாரத்தை கட்டியெழுப்புவதை தவிர இந்த ஜனநாயக விரோத செயலை குறைந்த பட்சம் கட்டுப்படுத்தவாவது முடியாதென்பதை வலியுறுத்துகின்றோம்.

ஆகவே, அரசாங்கத்தின் ஏகாதிபத்திய சார்பு நவ தாராளமய வேலைத்திட்டத்திற்கும் அரச அடக்கு முறைக்கும் எதிராக அணிதிரளுமாறு மக்களை கேட்டுக் கொள்கின்றோம். 

புபுது ஜெயகொட

பிரச்சாரச் செயலாளர் 

முன்னிலை சோஷலிஸக் கட்சி

11-12-2016