Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

இதுதான் ஜனநாயகமா?

ஒவ்வொரு மனிதனும் நீதி நியாயத்தைத்தான் கேட்டு நிற்கின்றான். நாட்டின் அதிகார பீடத்திலுள்ளவர்கள் தான் அதனை நிறைவேற்ற வேண்டும். அதிகாரத்தில் இருப்பவர்களிடமே நீதி நியாயத்தை கேட்க வேண்டிய நிலையில் இந்நாட்டு மக்கள் இருக்கின்றார்கள். முன்னாள் ஆட்சியாளர்களை விமர்சித்தும் ஜனநாயகத்தை கேட்டு மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தினையும் பயன்படுத்தியே இந்நாள் ஆட்சியாளர்கள் அதிகாரத்திற்கு வந்தார்கள். குறிப்பாக, ஜனநாயகம் சம்பந்தமான பிரச்சினைகள் அன்றைய தேர்தல் மேடைகளில் முழங்கியது எமக்கு நினைவிருக்கின்றது.

இப்போது என்ன நடந்து கொண்டிருக்கின்றது? அவை அனைத்தும் தூக்கி எறியப்படவில்லையா? காணாமலாக்கல்கள், கடத்தல்கள், கொலைகள் வெளிப்படுத்தப்பட்டனவா? எக்னெலிகொட, லசந்த விக்ரமதுங்க, லலித் - குகன், ஜனாக – சிசித போன்ற பெயர்கள் தேர்தல் மேடைகளில் முழங்கியது எமக்கு நினைவிருக்கின்றது. எங்கே…? நீதி கிடைத்ததா?

ஆபத்தான விடயம் என்னவென்றால் கொடுத்த வாக்குறுதிகள் அப்படியே இருக்க ஜனநாயக உரிமைகளை மேலும் மேலும் பறிப்பதற்கு இன்றைய ஆட்சியாளர்கள் படிப்படியாக முன்வருவதுதான். ராஜபக்ச ஆட்சிக்கு நாங்கள் கொஞ்சமும் சளைத்தவர்களல்ல என்பதை நிருபிக்கும் விதமாக மாணவர்களை தாக்குகின்றார்கள். ஆர்ப்பாட்டம் செய்யும் மக்களை தாக்குகின்றார்கள்.

தோழர் குமார் குணரத்தினத்தை சிறையில் அடைத்தமை கூட இன்றைய ஆட்சியாளர்களின் ஜனநாயகம் தரம் சம்பந்தமான சிறந்த உதாரணமாகும். அவருக்கு வழங்கிய தண்டணை, ஒரு வருட சிறைவாசம். சட்டப் புத்தகத்தை புரட்டி புரட்டி அதனை சட்டத்தின் தலையில் சுமத்த முயன்றாலும் அது இன்றைய ஆட்சியாளர்களின் அரசியல் பலிவாங்களினதும், அடக்குமுறையினதும் பிரதிபலன் என்பது வெளிப்படை.

சிறைவாசம் முடிந்த பின்பு அவரை இரகசியமாக நாடு கடத்தும் திட்டத்தினால் தான் அவருக்கு குடியுரிமை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதில்லை.

ஒருவர், அவர் அல்லது அவள் பிறந்த நாட்டில் வாழும் உரிமையை கேட்கும் போது அதனை வழங்காதிருக்குமளவிற்கு அரசாங்கம் முட்டாள்தனமாக நடந்து கொள்கின்றது. இந்தப் பிரச்சினையின் கதாநாயகன் குமார் குணரத்தினமாக  இருந்தாலும், நாளை நாட்டின் தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், மீனவர்கள் மற்றும் வேலை கிடைக்காத நிலையில் நடத்தும் போராட்டங்களின் தலைவர்களுக்கும் கிடைக்கப்போவது இதுதானே?

இந்த “அகப்பை” ஏனையவர்கள் விடயத்திலும் நாளை பயன்படுத்தப்படக்; கூடும். அதுமட்டுமல்ல, தொழிலாளர் வேலை நிறுத்தத்தை ஒழித்துக் கட்டும் அதிகாரம் கொண்ட சட்ட மூலத்தை கொண்டுவர அரசாங்கம் ஏற்க்கனவே தயார் நிலையில் உள்ளது. தொழிலாளர் உரிமைகளை பறிப்பதற்கு மேலும் 14 சட்டமூலங்களை கொண்டுவர அரசாங்கம் தயாராகின்றது. மாணவர்களை அடக்குவதற்க்காக சித்திரவதை சட்டங்களை செயற்படுத்த அரசாங்கம் தயாராகின்றது.

எமக்கு முன்னாள் வந்து கொண்டிருக்கும் இந்த பயங்கர தலைவிதிக்கு எதிராக உறுதியோடு போராட வேண்டும். நீதியையும், நியாயத்தையும் போராடி வென்றெடுக்க வேண்டுமேயன்றி அவர்களுடன் உறவாடி வென்றெடுக்க முடியாது. ஜனநாயகத்திற்கான  போராட்டத்திற்கு முன்வருமாறு உங்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம். ஒரு சிலரின் சுதந்திரத்திற்கும் ஜனநாயகத்திற்கும் பதிலாக பெரும்பாலானோரின் சுதந்திரத்தினையும் ஜனநாயகத்தினையும் வென்றெடுக்கும் போராட்டத்தினோடு அணிதிரள்வோம்.

முன்னிலை சோசலிச கட்சி.   
01-06-2016