Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

தோழர் குமார் குணரத்தினத்தின் அரசியல் உரிமைகளுக்காக அணிதிரள்வோம்!

மைத்திரி- ரணில் அரசாங்கம், தாம் கடந்த தேர்தல் மூலம் பதவிக்கு வருவதற்கு முன்னதாக வழங்கிய அத்தனை வாக்குறுதிகளையும் படிப்படியாக கைவிட்டு வருகிறது என்பது நாளுக்கு நாள் நிரூபணமாகி வருகின்றது.

அன்றைய அரசாங்கத்தினால், இலங்கை மக்களுக்கு அப்பட்டமாகவே மறுக்கப்பட்டுவந்த நாட்டின் ஜனநாயகத்தினை மீள நிலைநாட்டுவோம் என்பதே ராஜபக்ச ஆட்சி மீது இவர்கள் முன்வைத்த பிரதான கோசமாகும். ஆனால் அரசியலில் பாதிக்கப்பட்டோருக்கு, காணாமலாக்கப்பட்டோருக்கு, அரசியற்கைதிகளுக்கு இவர்களால் எந்த நீதியும் நியாயமும் இன்றுவரை வழங்கப்படவில்லை.

ரத்துவஸ்வல ஆர்ப்பாட்டத்தின் மீது துப்பாக்கிச் சூட்டினை நிகழ்த்தியவர்களை எந்த நீதிவிசாரணைக்கும் உட்படுத்தவில்லை. ஊடகவியலாளர்களான லசந்த விக்கிரமசிங்க கொலை மற்றும் பிரகீத் ஏக்னிலிகொட காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் மௌவுன நிலைப்பாட்டினையே தொடர்ந்தும் கடைப்பிடித்து வருகிறார்கள். லலித்-குகன் காணாமலாக்கப்பட்டமைக்கான எந்தப் புலனாய்வு விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை. லலித்-குகன் காணாமலாக்கலுக்குப் பொறுப்பானவர்கள் எவரையும் கைது செய்வதற்கும் முன்வரவில்லை. ஆனால் அதே சமயம் தங்களுடைய உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக ஜனநாயக வழிமுறைகளைப் பின்பற்றிப் போராடுகின்ற இளையோர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விடுவதற்கு இன்றைய புதிய அரசு தயக்கம் காட்டுவதில்லை. யாழ்ப்பாணம், தம்புல்ல, பண்டகிரிய, மீதோட்டமுல்ல, கொட்டகேதன போராட்டங்களில் வன்முறையைக் அரசு கட்டவிழ்த்து விட்டமை இதற்குச் சான்றாகும்.

அரசியல் அடக்குமுறைகள் காரணமாக, தோழர் குமார் குணரத்தினம் உட்பட நாட்டை விட்டு வெளியேறியவர்களின் நிலவரம் அன்றுள்ளது போன்றே இன்றுமுள்ளது. நாட்டை விட்டு வெளியேறியவர்கள் நாட்டுக்கு சுதந்திரமாக திரும்பி வருவதற்கு தடையேதுமில்லை என்ற பகிரங்க அறிவிப்பு இன்றைய அரசாங்கத்தின் அரசியலை ஏற்றுக்கொள்ளும் அவர்களுடைய நண்பர்களுக்கு மட்டுமானதேயென இன்று ஆகியுள்ளது. அர்ஜூன் மகேந்திரனுக்கு 24 மணித்தியாலயங்களுக்குள் பிரஜாவுரிமை வழங்கப்பட்டு மத்திய வங்கியின் ஆளுநராக பதவி வழங்கப்பட்ட அதேவேளை மற்றவர்களுக்கு அவ்வுரிமை மறுக்கப்பட்டிருக்கின்றது.

குமார் குணரத்தினம் மேலான இந்த அரசாங்கத்தின் கொள்கை என்ன? குமார் குணரத்தினம் இலங்கையில் பிறந்து வளர்ந்து தன்னுடைய ஆரம்பக்கல்வி, உயர்கல்வி, பல்கலைக்கழக கல்வி வரை இந்ந நாட்டிலேயே பெற்றுக்கொண்டவர். இலங்கையில் 1981 இலிருந்து அரசியலில் செயற்பட்டு வந்தவர். அரசியலில் செயற்பட்ட அதே காரணத்துக்காகவே நாட்டை விட்டு வெளியேற வேண்டி இருந்தார். இலங்கையின் பிரஜாவுரிமையை மீள வழங்கவேண்டுமென்ற அவரது கோரிக்கையும், இலங்கையில் அவர் அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமையை வழங்குதல் என்பதும் நற்சிந்தனையுடைய நபர் ஒருவரால் எதிர்க்கப்பட முடியாதது. இதுவே தான் நீதியானது. குமார் குணரத்தினத்தின் பிராஜவுரிமை விண்ணப்பத்தை மறுப்பதற்கான காரணம் என்னவென்பது மிகவும் தெளிவானது. இன்றைய இந்த அரசினாலும் கூட மறுக்கப்படுகின்ற மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் பாதுகாத்துக் கொள்வதற்குமான ஒரு போராட்டத்தில் முன்னிலை சோசலிசக் கட்சி தீவிரமான இருப்பதும், இன்றைய அரசின் ஆளும் கொள்கைகளை எதிர்த்து நிற்கின்றதும் என்ற முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியலில் குமார் குணரத்தினம் செயற்படுவது என்பதே இதற்கான அடிப்படைக் காரணம் என்பது வெளிப்படை.

ஜனநாயகம் என்பது அவர்களுடன் உடன்பட்டுப் போகிறவர்களுக்கான சலுகை என்றில்லாமல் உன்னுடைய கருத்துக்களை எதிர்க்கும் எவருக்கும் அவ்வாறு எதிர்க்கும் உரிமை உண்டு என ஏற்றுக்கொள்வதே. மைத்திரி-விக்கிரமசிங்க அரசு இந்தத் திசையில் செல்லவில்லை என்பதற்கு போதுமான நல்ல சான்றாக குமார் குணரத்தினத்தினத்தின் உதாரணம் இருக்கின்றது. குமார் குணரத்தினத்தின் அரசியல் உரிமைக்கான கோரிக்கையை முன்வைத்து கொழும்புக் கோட்டைப் புகையிரத நிலையத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் 60 நாட்களை தாண்டிப் போய்விட்டது மட்டுமல்லாமல் குமார் குணரத்தினம் விளக்கமறியலில் அடைக்கப்பட்டு மூன்று மாதங்கள் ஆகிப் போய்விட்டன. அரசு குறைந்தது இந்த விடயத்தில் தங்கள் கொள்கை என்ன என்பதைக் கூட இன்றுவரை வெளியிடவில்லை. நாங்கள் அரசின் இந்தப் போக்கினை பகிரங்கமாக கண்டிப்பதோடு அதனை எதிர்த்து நிற்கிறோம். மக்கள் ஒருபோதும் தங்கள் உரிமைகளை போராட்டங்களின்றி வென்று கொள்ள முடியாது என்பதை வரலாறு மீளவும் மீளவும் நிரூபித்திருக்கின்றது. எங்களுடைய உரிமைகளை வென்றெடுப்பதற்காக அவற்றைப் பாதுகாத்துக் கொள்வதற்காக நாம் எமது கரங்களை இணைத்துக் கொள்வோமாக. இந்த நமது போராட்டத்தினை பலப்படுத்துவதற்காய் உங்களையும் இணையுமாறு வேண்டுகிறோம்.

குமார் குணரத்தினத்தின் அரசியற் உரிமைகளை நிலைநாட்டு !!!

அரசியல் அச்சுறுத்தல்களை நிறுத்து !!!

ஜனநாயகம் குறித்து வழங்கிய தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்று !!!

 

முன்னிலை சோசலிச கட்சி (பிரித்தானிய கிளை)

06-02-2016

(இத்துண்டுப்பிரசுரம் 6-2-2016 அன்று லண்டன் வெம்பிளி பகுதியில் முன்னிலை சோசலிச கட்சியின் உறுப்பினர்களால் மக்கள் மத்தியில் விநியோகம் செய்யப்பட்டது)