Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

எங்கே சுதந்திரம்? - மக்கள் கூட்டத்திற்கு அழைப்பு

பிரித்தானிய காலனித்துவம் 1948ம் ஆண்டு மாசி மாதம் 4ம் திகதி தனது நம்பிக்கைக்குரிய உள்நாட்டு ஆளும் வர்க்கம் மற்றும் தமது விசுவாசிகளிடம் நாட்டை ஒப்படைத்து விட்டு,  இலங்கை மக்களிற்கு சுதந்திரம் வழங்கி விட்டதாக அறிவித்தது. அன்று தொடக்கம் உள்நாட்டு ஆளும் வர்க்கங்கள் இன - மத ரீதியாக மக்களை பிரித்து மோத விட்டு - இரத்த ஆற்றை ஓட விட்டவாறு, ஜனநாயகத்தை உறுதிப்படுத்தப் போவதாக மக்களை ஏமாற்றி மாறி மாறி ஆட்சிக்கு வருவதும், நாட்டை கொள்ளை அடித்து தாம் செல்வத்தில் திளைப்பதுமாக கதை தொடர்கின்றது.

ஜனநாயக ஆட்சி நடத்துவதாக கூறும் ஆட்சியாளர்களின் இனரீதியான ஒடுக்கு முறைக்கு எதிராக ஆயுதம் மேந்திய போராட்டத்தாலும், பொருளாதார ரீதியாக அடக்கப்பட்ட  உழைக்கும் மக்களின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திய போராட்டத்தாலும் லட்சத்திற்கு மேற்பட்ட போராளிகளும், மக்களும் தொடர்ந்தும் மரணித்துக் கொண்டிருப்பது தான் சுதந்திரத்தின் பின்னான வரலாறாகும்.

ஜனநாயக உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்களின் குரல்வளைகள் தொடர்ந்தும் நசுக்கப்படுகின்றன, காணாமல்லாக்கப்படுகின்றனர், சிறையில் அடைக்கப்படுகின்றனர், வன்முறைத் தாக்குதல்களிற்கு உள்ளாகின்றனர்.

சுதந்திரம் வாங்கி விட்டோமா? அதனை அனுபவிப்பவர்கள் யார்? சாதாரண உழைக்கும் மக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? சகல இனங்களும் சமவுரிமையுடன் இந்நாட்டில் சந்தோசமாக வாழ்கின்றனரா?

உண்மையான சுதந்திரம் எது என அறிய, மாசி 4ம் திகதி 12 மணிக்கு புறக்கோட்டைக்கு வாருங்கள்.

முன்னிலை சோசலிச கட்சி