Wed04242024

Last updateSun, 19 Apr 2020 8am

எந்த வகை ரத்தமானாலும் மிதிபடுவது சேர்ந்தே நித்தம்

ஐந்து நிமிடங்களை ஒதுக்கி இதனை முழுவதுமாக வாசியுங்கள்.

சமீபத்தில் அந்த இரத்தம், இந்த இரத்தம் என்று சொல்லி லேபல் ஒட்டிக்கொண்டு கூச்சலிட்டுக் கொண்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது. இலங்கையில் பல்வேறு இன மக்கள் இருப்பதை நாம் அறிவோம். சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர், மலே ஆகிய அனைவரும் இலங்கைக் குடிமக்கள். நாங்கள் அனைவரும் ஒரே கடைக்குத்தான் செல்கின்றோம். ஒரே ஆஸ்பத்திரிக்குத்தான் செல்கின்றோம். ஒரே பஸ்ஸில், ஒரே இரயிலில் செல்கின்றோம். எமது பிள்ளைகள் ஒரே பாடசாலையிலேயே கற்கின்றனர். ஒரே பாடநெறியையே படிக்கின்றாரகள். அரிசி, மா, சீனி, பால்மா போன்றவற்றின் விலைகள் உயரும்போது சிங்களவருக்கு ஒரு விலையிலும், தமிழருக்கு ஒரு விலையிலும், முஸ்லிம்களுக்கு ஒரு விலையிலும், பறங்கியருக்கு ஒரு விலையிலும் மலே இனத்தவருக்கு இன்னொரு விலையிலும் விற்கப்படுவதில்லை. ஆஸ்பத்திரி ஓ.பி.டீ.யில் அலையும்போதும், பாமஸியில் மருந்தை வாங்கும்போதும் அப்படித்தான். பாடசாலையில் வசதிக் கட்டணம் செலுத்தும்போதும், பஸ்ஸில் டிக்கட் வாங்கும்போதும், டிஸ்பென்சரியில் ஊசி போடும்போதும் - இந்த எல்லா இடங்களிலும் நாம் எந்த இனத்தை சேர்ந்தவர்கள் என்று யாரும் கேட்பதில்லை. சற்று சிந்தியுங்கள்.

நாம் ஒவ்வொருவராக பிரிந்து சிங்கள இரத்தம், தமிழ் இரத்தம், முஸ்லிம் இரத்தம், பறங்கி இரத்தம், மலே இரத்தம் என பிரிவதனால் எந்த பிரயோசனமும் கிடையாது. நாம் அனைவரும் ஒரே விதமாக துன்பப்படுகின்றோம். அனைவரும் ஒரே விதமாக கஸ்டப்படுகின்றோம். பாடசாலையில், ஆஸ்பத்திரியில், கடைவீதியில், வயலில், தொழிற்சாலையில், பஸ் தரிப்பிடத்தில், இரயில் நிலையத்தில் - ஆகிய அனைத்து இடங்களிலும் நாங்கள் அனைவரும் பேதமின்றி ஒரே விதமாக கஸ்டப்படுகின்றோம். எம் அனைவரினதும் வாழ்க்கை சுமை ஒன்றுதான். சுருக்கமாக சொல்வதாயிருந்தால், அனைவருக்கும் இருப்பது ஒரே இரத்தம். மாத்திரமல்ல அனைவரும் ஒரே படுகுழியில்தான் உள்ளோம். ஆகையால், நாங்கள் அந்த இரத்தம், இந்த இரத்தம் என கூறிக் கூறி தனித்துவிடாது, பிரிந்துவிடாது ஒற்றுமையாக இருந்தால் இந்த படுகுழியிலிருந்து வெளிவர முடியுமென்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஒற்றுமைதான் ஒரே பலம்! சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர், மலேயர் என்ற பேதமில்லாமல் மூளையை பாவித்து ஒற்றுமையின் பலத்தை காட்டினால், எம்மை மிதிப்பவர்கள் மிரண்டோடிடுவார்கள்!!

சம உரிமை இயக்கம்

16-02-2016

குறிப்பு: இத்துண்டுப்பிரசுரம் இன்று தென்பகுதியில் மக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டது. இத்துண்டுப்பிரசுர விநியோகமும், மக்களுடனான இனவாதத்திற்கு எதிரான கலந்துரையாடல், தெருமுனைக் கூட்டங்கள் தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு இடம்பெறவுள்ளது.