Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

கடத்தப்பட்டுக் காணாமல் போனோரை விடுவிக்கக்கோரி யாழில் சமவுரிமை இயக்கம் போராட்டம்

“காணாமல் போனவர்களின் தகவல்களை உடன் வெளியிடு”

வட-கிழக்கு உட்பட 5000 இக்கு மேற்பட்டோர் கடத்தப்பட்டு, அல்லது திட்டமிட்ட முறையில் காணாமற் போகச் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, வைகாசி 2009 இல் முள்ளிவாய்காலில் தமிழ் மக்களின் இரத்தம் ஆறாய் ஓட, கூக்குரல்களுக்கும் அவலங்களுக்கும் மத்தியில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. அதன் பின் சரணடைந்த போராளிகள் மற்றும் பொதுமக்கள் பலருக்கு என்ன நடந்ததென்று அரசைத் தவிர ஒருவருக்கும் தெரியாது. இன்றுவரை. தற்போது எவரும் காணாமற் போகச் செய்யப்பட்டோர், கடத்தப்பட்டோர் பற்றி கதைப்பதும் இல்லை. இவர்களின் குடும்பங்களின் நிலை பற்றி அக்கறை கொள்வதுமில்லை. தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் தாம் தான் எனக் கூறிக் கொள்வோர், மைத்திரி-ரணில் அரசைக் காக்கும் விதத்தில் கள்ள மௌனம் காக்கின்றனர்.

இன்னிலையை மாற்றியமைத்து, காணாமல் போகச் செய்யப்பட்டோர், கடத்தப்பட்டோர்களை விடுவிக்கக் கோரியும், அவர்களின் குடும்பங்களுக்கு நியாயம் கோரியும் சமவுரிமை இயக்கம் தொடர் போராடங்களை முன்னெடுத்து வருகிறது.

இப்போராட்டங்களின் தொடர்ச்சியாக, யாழ் பிரதான பஸ் நிலையம் முன்பாக எதிர்வரும் சனிக்கிழமை 28.11.2015 அன்று காலை 9 மணிக்கு ஆர்ப்பாட்டம் ஒன்றை சமவுரிமை இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது. இதில் காணாமல் போகச் செய்யப்பட்டோர், கடத்தப்பட்டோரின் குடும்பங்கள், சமூக ஆர்வலர்கள், மனித உரிமைவாதிகள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்தப் போராட்டத்தில் பெரும் அளவில் பங்கு கொண்டு கடத்தப்பட்டோர் மற்றும் காணாமல் போகச் செய்யப்பட்வர்கள் குறித்த உங்களது அக்கறையினை வெளிப்படுத்த அனைவரையும் அழைக்கின்றோம்

காலம் : 28.11.2015

இடம் : யாழ் பஸ் நிலையம்

நேரம் :காலை 09.00

சமவுரிமை இயக்கம்