Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

"யாவரும் கேளிர்" கனடா நிகழ்வு (படங்கள் இணைப்பு)

கனடா சம உரிமை இயக்கத்தின் முதலாவது கலாச்சார நிகழ்வான "யாவரும் கேளிர்" கலை நிகழ்வு 13,06,2015 அன்று ஸ்காபுறோ சிவிக் மண்டபத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. முதலில் வரவேற்புரை மூத்த இடதுசாரியும் சமூக சிந்தனையாளருமான திரு மார்க் சூசை அவர்களால் வழங்கப்பட்டது.

இவர் இலங்கையில் இனங்களிடையே சம உரிமையின் அவசியத்தையும், இதற்காக சம உரிமை இயக்கம் இலங்கையில் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுப்பதையும் இதன் தொடர்ச்சியாக புலம்பெயர் இலங்கையரிடம் ஜரோப்பிய நாடுகளிலும், கனடாவிலும் சம உரிமை இயக்கத்தின் கிளைகளை உருவாக்கி ஆக்கபூர்வமான முன்னெடுப்புக்களை செய்வதைப்பற்றியும் குறிப்பிட்டு உரை நிகழ்த்தினார்.

முதல் நிகழ்வாக கனடிய பூர்வீக மக்களின் இசை நிழ்வு ஒரு இனிய தொடக்கமாக அமைந்திருந்தது. ஜசயா காடா வினால் நடாத்தப்பட்ட நிகழ்த்துகையில் பல்லின மக்களின் ஒற்றுமையின் மூலம் கனடாவில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையை பெற்றுக்கொள்ள முடியும் என விளக்கினார். இவரது ஓன்மம் மிக்க குரலும,; சபையை அதிர வைத்த பறையும் இவரது திறமைக்கு பறைசாற்றியது.

அடுத்து கிழக்கிலங்கை நாட்டார் பாடல்கள் சுல்பிகா, சுமதி, தர்சினி மற்றும் நிருபா ஆகியோரால் நடத்தப்பட்டது. மிகவும் வித்தியாசமான முறையிலும் அற்புதமான அழகியலை உள்ளடக்கிய இந்த நிகழ்வு பலராலும் பாராட்டப்பட்டது. மிகவும் எளிமையான முறையில் உடை உடுத்திய முறையிலும் சுளகு, பாய், தானியங்கள் போன்றவற்றை பயன்படுத்திய விதத்திலும் அப்படியே மீன்பாடும் தேனாட்டின் கிராமப்புறத்தின் பகைப்புலத்தை நயகரா அருவியின் இசையில் கலந்து விட்டிருந்தனர். இந்த நிகழ்வினை நீளமான பெரிய நிகழ்வாக எதிர் காலத்தில் தொகுக்குமாறு பலரும் சுல்பிகாவிடம் கோரியிருந்தனர்.

அடுத்த நிழ்வில் கருத்துரையும் பாடலையும் வழங்கியவர் கனடாவின் பாரிய தொழிற்சங்கம் ஒன்றின் தேசிய பொறுப்பாளர் பதவியை வகிப்பவரான கெவின் சிமன். இவர் தொடர்சியாக தொழிற்சங்க போராட்டங்களில் மட்டுமல்லாமல் மனித உரிமை செயற்பாடுகளிலும் பங்கெடுப்பவர். ரொறன்ரோவில் நடைபெற்ற ஜி20 ஏகாதிபத்திய நாடுகளின் மகாநாட்டை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்களில் முன்னின்று போராடியவர். இவர் இலங்கையில் யுத்தம் நிகழ்ந்த மிகவும் மோசமான காலங்களில் இரண்டு வருடங்களிற்கு மேல் வாழ்ந்;தவர். தன் இலங்கை அனுபவங்களை பகிர்ந்து கொண்டதுடன் ஓரு இனிய பாடலையும் கிற்றார் இசைத்து பாடினார். இவர் சிறந்த பேச்சாளர் என்பது பலரும் அறிந்த விடயம் சிறந்த பாடகர் என்பதையும் சபையினர் இப்போது புரிந்து கொண்டனர்.

சமாதானத்திற்கான பாடலை வழங்கிய நதீஸ் ஜெயசிங்க ஏற்கனவே பலராலும் அறியப்பட்டவர் மடடுமல்ல மென்மையான சுபாவம் கொண்டவர். இவர் கடந்த மாதம் இசை நிழ்ச்சிகள் மூலம் நேபாளத்தின் பூகம்ப நிதிக்காக நிதி சேகரித்தவர். இவரை விட இளம் வயதினரான டினித விதானகே கிற்றார் இசைத்தபடி நந்தா மாலினியின் பாடலை பாடினார். தனது வாயினால் விசில் இழைத்த இசை புதுமையாகவும் அற்புதமாகவும் அமைந்தது.

வின்சர் பல்கலைகழகத்தின் விரிவுரையாளரான பாத்திமா காதர் தன் உரையில் எப்படி அனைத்து முற்போக்கு சக்திகளும் இணைத்து வேலை செய்வது என்பதை விளக்கினார். இவர் சம உரிமை இயக்கத்தின் கடந்த கூட்டத்தில் உலகளாவிய அளவில் "முஸ்லிம் மக்கள் மீது ஏற்படுத்தப்படும் எதிர்ப்புணவு" பற்றிய விழிப்புணர்வு பற்றி சிறந்த உரை நிகழ்த்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
மலையகத்தினை பூர்வீகமாக கொண்ட சந்திரசேகரன் கடந்தகால கசப்பனுபவங்களை கடந்து இலங்கையில் இனங்களிடையில் ஒற்றுமையை எமது புதிய சந்ததியினருக்கு விட்டுச்செல்ல வேண்டும் என்று தன் உரையில் கூறினார்.

மெலனி கங்காதரன் கிப் பொப் இசைக்கு வழங்கிய நடனம் பல இளம் வயதினரையும் சிறாரையும் கவர்ந்தது. மெலனி தனது இளம் வயதிலேயே அமெரிக்காவின் பல மாநிலங்களிற்கும் சென்று கிப் பொப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிகளை கண்டவர்.

யாவரும் கேளிர் நிகழ்வின் தலைப்பையே நடன நிகழ்வின் தலைப்பாக கொண்டு சிறப்புற பெருமை சேர்த்தவர் வசந்தா டானியல்.  ஜம்பது வருடங்களிற்கு மேலாக நடன ஆசிரியராக இலங்கையிலும், கனடாவிலும் பயிற்றுவித்து வருபவர். குறுகிய காலத்தில் இப்படியொரு கச்சிதமான நடன அரங்கத்தை வேறு எவராலும் நடாத்தியிருக்க முடியாது. வசந்தா டானியல் கடந்த காலங்களிலும் மாற்று கருத்தியல் கழங்களிலும் துணிந்து பெரும்பான்மை நீரோட்டதை எதிர்த்து நிகழ்வுகளை நிகழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் ரொறன்ரோ மாநகரின் நாடக ரசிகர்கள், ஆர்வலர்கள் எல்லோரையும் அரங்காடல் நிகழ்வில் அதிர வைத்தவர் மெலிஞ்சி முத்தன். இவரது "மோகப் பறவை" தென் மோடி கூத்து நாடகம் மிகவும் வரவேற்பை பெற்றது. இதில் நடித்த நடிகர்கள் அனைவருமே திறம்பட நடித்திருந்தனர்.  தொழிலாளர், ஒடுக்கப்பட்டவர்கள் போன்றவர்களின் குரலாக தன்னை வெளிப்படுத்த விளையும் மெலஞ்சிமுத்தன் சிவிக் மண்டபத்தில் உள்ள வட்டகளரியை தென்மோடி மெட்டுக்களின் அரங்கக் களரியாக அற்புதமாக்கியவர். தமிழர்களின் பாரம்பரிய கலையான கூத்துக் கலையை மீண்டும் மிளிர வைக்க விளையும் இந்த அரங்கநிகழ்வு பல வகையிலும், பாடலிலும், நடிப்பிலும் மற்றும் பின்னணி இசையிலும் செழித்திருந்தது.

நன்றியுரை சபேசனால் கூறப்பட்டது. தமிழில் நேசனும், ஆங்கிலத்தில் நந்தினியும் நிகழ்வினை தொகுத்து வழங்கியிருந்தனர்

ஆரோக்கியமானதாகவும் சிறப்பாவும் செழித்திருந்தது "யாவரும் கேளிர்" நிகழ்வு. சம உரிமை இயக்கத்தின் அவசியத்தினை பலரும் புரிந்திருந்ததனை பிரதிபலித்திருந்தது.