Thu04252024

Last updateSun, 19 Apr 2020 8am

லண்டனில் அரசியல் கைதிகளின் விடுதலை கோரி போராட்டம் !

"அனைத்து அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை செய்!" என்ற கோசத்தை முன்வைத்து, சமவுரிமை இயக்கம், 20.06.2015 சனிக்கிழமை பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை  Westminster Parliament Square இல் போராட்டத்தை நடத்த இருக்கின்றது. இப் போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு அனைவரையும் அழைக்கின்றோம்.

யுத்தம் முடிந்து 6 வருடம். அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்!

மகிந்த அரசின் சர்வாதிகார அரசியல் மற்றும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை வீழ்த்தி அதனிடத்தில் ஜனநாயக அரசொன்றை மாற்றீடாக நிறுவுவோம் என்ற தேர்தல் வாக்குறுதிகளை கூறியே மைத்திரிபால சிறிசேன - ரணில் விக்கிரமசிங்க அரசு ஆட்சிக்கு வந்தது.

அரசியல் கைதிகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் போன்ற எந்தவொரு மிகவும் நிதர்சனமான வெளிப்படையான மனிதவுரிமை மற்றும் ஜனநாயகப் பிரச்சனைகளைப் பற்றி மைத்திரிபால - ரணில் கூட்டணி ஒருபோதும் பேசியதில்லை. விளைவாக சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் அவலப்படுகின்ற அரசியல் கைதிகளை விடுவிப்பது சம்பந்தமாக இன்றைய நாள் வரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

மறுபுறம் காணாமல் போனவர்களின் உறவுகளின் துயரத்தை துன்பங்களை தமிழ் அரசியல் தலைமைகள் தமது துரும்புச்சீட்டாக வாக்குகளுக்காகவும் செல்வாக்கு சரியும் போதெல்லாம் தூக்கி நிறுத்த பயன்படுத்தவும் அவ்வப்போது பயன்படுத்தி வருகின்றனர்.

காணாமல் போனவர்களின் பிரச்சனை பாரதூரமான சமூக பிரச்சினையாகும். இதனை அரசியல் இலாப நோக்கத்திற்காக பயன்படுத்தாத சமூக கவனத்தை ஈர்க்கும் வகையில் தொடர் போராட்டங்களே அவசியமானதாகும்.

எனவே சிறையில் வாடும் அரசியல் கைதிகளை எந்த விசாரணையும் இன்றி உடன் விடுதலை செய்ய வேண்டும் என்று நாம் இலங்கையில் சிங்கள முஸ்லீம் உழைக்கும் மக்களை இணைத்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

இதன் தொடர்ச்சியாக புலம்பெயர்ந்த தேசங்களிலும் இந்த போராட்டத்தை முன்னெடுக்கின்றோம். அரசியல் கைதிகள் மற்றும் முள்ளிவாய்க்காலில சரணடைந்தவர்களை நிபந்தனைகள் இன்றி விடுதலை செய்ய மைத்திரி – ரணில் அரசை கோரும் இந்த போராட்டங்களில்; அதிகளவு மக்கள் கலந்து கொள்வதன் மூலம் எமது இக்கோரிக்கைகளை வெற்றிகொள்ள முடியும். அதற்கு தங்களின் ஒத்துழைப்பையும் நாடுகின்றேம். இந்த போராட்டத்தினை எம்முடன் இணைந்து முன்னெடுக்க வருமாறு அழைக்கின்றோம்.

1. அனைத்து அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை செய்!

2. 100 நாட்கள் முடிந்துவிட்டன! வடக்கின் இளைஞர்கள் இன்னும் சிறையில்

3. யுத்தம் முடிந்து 6 வருடம். அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்!

4. மைத்திரி, இல்லையெனக் கூறிய அரசியல் கைதிகள் இதோ!

சம உரிமை இயக்கம் (பிரித்தானிய கிளை)