Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

இஸ்லாமிய அச்சக்கோளாறு! இஸ்லாமிய எதிர்ப்புணர்வு!

கனடா சமஉரிமை இயக்கத்தினரால், "இஸ்லாமிய அச்சக்கோளாறு! இஸ்லாமிய எதிர்ப்புணர்வு!" எனும் தலைப்பில் கலந்துரையாடல் ஒன்று ஸ்காபரோ சிவிக் சென்ரறில் கடந்த 7ம் திகதி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. வின்சர் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறையில் விரிவுரையாளராக இருக்கும் பாதிமா காதர், சைலான் முஸ்லீம் ஒழுங்கமைப்பின் பிரதிநிதித் தலைவர் சமீம் முகம்மட், கலாநிதி சுல்பிகா இஸ்மாயில் ஆகியோர் இதில் உரையாற்றினர்.

பாதிமா காதர், இஸ்லாமிய எதிர்ப்புணர்வுச் சம்பவங்களின் பின்னணி குறித்தும் கனேடிய குடிவரவுச் சட்டதிருத்தில் உள்ள பாதகமான விடயங்கள் குறித்தும் கருத்துக்களை முன்வைத்தார். இலங்கையில் அழுத்கம பிரதேசத்தில் முஸ்லீம்கள் மீது திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களின் பின்னணிகளின் இஸ்லாமிய எதிர்ப்புணர்வு எவ்வாறு ஏற்படுத்தப்பட்டது என்பதையும் முஸ்லீம் பெண்களின் அடையாளம் எவ்வாறு சர்ச்சைக்குரிய விடயமாக்கப்பட்டது என்பதையும் எடுத்துக்கூறினார். முஸ்லீம் பெண்கள் இந்த எதிர்ப்புணர்வுக்கு எதிராக எவ்வாறு தங்கள் வாதிடல்களை முன்னெடுத்தனர் என்பதனையும் குறிப்பிட்டுக் காட்டினர்.

கனடாவில் நிகாப் (முகத்திரைக்கு) எதிராக குடிவரவு அமைச்சரினால் கொண்டு வரப்பட்ட தடை உத்தரவு குறித்தும் அதன் பின்னணியில் இஸ்லாமிய எதிர்ப்புணர்வு குறித்தும் விரிவாக எடுத்துக் கூறினார். பிரஜாவுரிமைக்கான சத்தியப் பிரமாணம் எடுக்கும் சந்தர்ப்பத்தில் முஸ்லீம் பெண்கள் முகத்திரை அணியக்கூடாது என்ற இந்தத் தடை உத்தரவின் பின்னர் நீதிமன்ற உத்தரவின் பெயரில் அழைக்கப்பட்டமையும், அதனை கொண்டு வருவதற்கான அரசு தரப்பு வாதிடல்கள் பற்றியும் எடுத்துக்கூறினார். 2011 இல் கொண்டு வரப்பட்ட கனேடிய குடிவரவுச்சட்டத்தின் திருத்தங்கள் பற்றிய பல தகவல்களையும் அது தொடர்பான அவரது கருத்துக்களையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

இச்சீர்திருத்தங்கள் குறிப்பாக தனிப்பட்ட தகவல்களின் அந்தரங்க தனிமை தொடர்பாக வரையறைகளும் குறிப்பாக நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை அடிப்படையில் அவற்றின் மீறல்கள் நியாயப்படுத்தப்படுகின்றது என்ற கருத்தையும் அவர் முன்வைத்தார். நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் மேற்கொள்ளும் "பயங்கரவாதிகள்" (இது பலவேளைகளில் முஸ்லீம் பயங்கரவாதிகளாகவும், தமிழ் பயங்கரவாதிகளாகவும் அர்த்தம் கொள்ளப்படுகின்றது) மீதான கட்டுப்பாடுகளாக இவை முன்வைக்கப்பட்ட போதிலும் சட்டவாக்கத்தின் பின்னர் பொதுவாக எல்லோர் மீதும் பிரயோகிக்ககூடய ஆபத்தைக் கொண்டிருக்கிறது எனவும் வாதிட்டு வலியுறுத்தினார்.

தொடர்ந்து உரையாற்றிய சமீம் முகமட் அண்மைக்காலத்தில் கனடாவிலும் சர்வதேச ரீதியாகவும் இடம்பெற்று வருகின்ற முஸ்லீம் எதிர்ப்புணர்வு நடவடிக்கைகள் பலவற்றை சுட்டிக்காட்டி கருத்துக்களை முன்வைத்தார். குறிப்பாக பிரான்ஸில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களை தொடரந்து உருவான இஸ்லாமிய எதிர்ப்புணர்வின் தாக்கம் கனடாவின் கியூபெக் மாநிலத்தில் ஏற்படுத்திய விளைவுகளையும் சுட்டிக்காட்டினார்.நீதிமன்றத்திற்கு இஜாப் உடையணிந்து வந்த முஸ்லீம் பெண் நீதிமன்றத்தில் பிரசன்னம் ஆவதற்கு தடை அளிக்கப்பட்டதை அவர் எடுத்துக்காட்டினார்.

சுல்பிகா இஸ்மையில், இஸ்லாமிய அச்சக்கோளாறு என்ற கருத்துருவாக்கம் பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் கருத்துக்களை முன்வைத்தார். இஸ்லாமியர்கள் மீதும் இஸ்லாம் சமயத்தின் மீதும் காட்டப்படுகின்ற எதிர்ப்பு/வெறுபபு/விரோத உணர்வை வெளிப்படையாக இது குறிப்பிடுகின்றது. இருந்த போதிலும் அடிப்படையில் இவ்வுணர்வுகளானது இஸ்லாமிய சமயம் குறித்தும் முஸ்லீம்களின் நடைமுறைகள், பழக்கவழக்கங்கள் குறித்தும் முன்வைக்கப்படுகின்ற முற்கற்பிதங்கள், எடுகோள்கள் வியாக்கியானங்களின் அடிப்படையில் பொதுமக்களிடையே சட்ட அச்சம் காரணமாகவே உருவாகின்றது. இவ்வச்ச நிலை உண்மையின் அடிப்படையில் உருவாவதில்லை என்பதாலும் அது மக்களிடையே பிரமையாக உருவாக்கப்படுவதாலுமே அச்சக்கோளாறு என வரைவிலக்கணப்படுத்தப்படுகின்றது என்றும் எடுத்துக்கூறினார். பொதுவான இஸ்லாமிய எதிர்ப்புணர்வு என்பது மனப்பாங்கு குறித்த விடயமாக மட்டுமே நோக்கப்படுகின்ற போதிலும் நடவடிக்கைகளையும் நடத்தைகளையும் இஸ்லாமிய அல்லது விழுமியங்கள் குறித்த விமர்சனங்கள் கேவலப்படுத்தல்களாகவும் வெளிப்படுத்தப்படுகின்றன எனவும் அவர் வாதிட்டார்.

பலவேளைகளில் இது சமய சகிப்புத்தன்மையின்மையால் வாதிடப்படுகின்ற போதிலும் இங்கு உருவாக்கப்படுகின்ற தாக்குதல்களும் இங்கு உருவாக்கப்படுகின்ற வெறுப்புணர்வும் தாக்குதல்களும் இனவாதத்திற்கு ஒப்பானவை எனவும் அவர் எடுத்துரைத்தார். சமய சார்பற்ற நாடுகளாக கொள்ளப்படுகின்ற மேலைத்தேய, வடக்கு நாடுகளிலும் (உண்மையில் அவை அவ்வாறு இல்லாத போதிலும்) முஸ்லிம்களின் குடிவரவு அதிகரித்திருக்கின்றது எனவும் அதனால் அவர்களது "பிற்போக்கு" நடைமுறைகள் அச்சமூகத்திற்குள் கொண்டு வரப்படுகின்றது எனவும், பயங்கரவாதிகளாக பட்டியலிடப்பட்டுள்ள இயக்கங்களில் பெரும்பான்மையானவை முஸ்லிம் சமூகத்தை சார்ந்தவர்கள் என வடக்கு நாடுகள் அடையாளப்படுத்தி இருக்கின்றமையாலும் இவ்வாறான நியாயமற்ற அச்சம் நியாயப்படுத்தப்படுகின்ற ஒரு நிலமையும் உருவாக்கப்பபட்டிருக்கின்றது என்ற கருத்தையும் அவர் முன்வைத்தார்.

உரையாடகளைத் தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடல்களில் பல்வேறு கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன.