Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

'இலங்கை : போர் குற்றங்களை தடுக்கத் தவறிய சர்வதேச சமூகம்'

இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் போர்க் குற்றங்கள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு மேற்கத்தைய நாடுகளோ அல்லது ஐநாவோ செயற்திறன் மிக்க நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளன என்று அந்தப் போர் குறித்த விவரணப்படத்தை தயாரித்த பிரிட்டிஷ் தயாரிப்பாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இலங்கையின் பாதுகாப்புப் படையினர் இந்தப் போரில் மேற்கொண்டதாகக் கூறப்படும் பல குற்றச்சாட்டுக்களை கசிந்த ஐநா ஆவணங்கள் மூலமும், அமெரிக்கத் தகவல் பரிமாற்ற கேபிள்களின் தகவல்களை வெளியிட்ட விக்கிலீக்ஸ் மூலமும், ஐநாவின் முன்னாள் மூத்த அதிகாரிகளின் செவ்விகளின் மூலமுமே தாம் உறுதி செய்ததாக '' இலங்கை போர்க்களம் : தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்'' என்ற அந்த விவரணப்படத்தின் தயாரிப்பாளரான கலும் மக்ரே கூறியுள்ளார்.

 

 

சர்வதேச சட்டங்களின் கீழ் அடிப்படை நியமமாக உள்ள இந்த பாதுகாப்பை வழங்க வேண்டியது சர்வதேச சமூகத்தின் கடப்பாடு என்று அவர் கூறியுள்ளார்.

பயங்கரவாதத்தின் மீதான உலகப் போர் என்ற மேற்கத்தைய செயற்திட்டத்தை ராஜபக்ஷ அரசாங்கம் பயன்படுத்தியதே இப்படியான போர்க்குற்றங்களை செய்வதற்கான சாத்தியத்தை ஏற்படுத்தியது என்றும் அவர் கூறியுள்ளார்.

சனல் 4 தொலைக்காட்சியால் ஒளிபரப்பப்படவுள்ள இந்த விவரணப்படத்தில், விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் 12 வயதேயான மகனான பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்ட நிகழ்வு குறித்த பயங்கரமான தகவல்களும் இடம்பெறவுள்ளன.

இப்படியான கொலைகளும், பொதுமக்கள் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதல்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலர் கோத்தாபாய ராஜபக்ஷ மற்றும் இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா ஆகியோரினால் உத்தரவிடப்பட்டதாகவும், அந்த விவரணப்படம் குற்றஞ்சாட்டுகின்றது.

பிபிசி சந்தேசியவுக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே மக்ரே இந்தத் தகவல்களை தெரிவித்துள்ளார்.