Thu04252024

Last updateSun, 19 Apr 2020 8am

தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலமும் கே.பி இன் புதிய அரசியல் கட்சியும்.

கே.பி புதிய கட்சி ஒன்றினை ஆரம்பித்து தமிழ் மக்களின் 30 வருட துயர அரசியலிற்கு நிவாரணம் செய்யப் போகின்றாராம். அதாவது வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராகி மகிந்தா குடும்பத்தினருக்கு முதுகு சொறியப் போகின்றாராம்.

இலங்கை, இந்திய அரசுகளிற்கும், பாரிய அளவில் முதலிட திட்டமிட்டுள்ள அந்நிய கம்பனிகளிற்கும், தமிழர்களின் பிரதேசமெங்கும் அரசியல் ரீதியில் ஒரு ஸ்த்திரமான நிலை பல காரணங்களிற்காக தேவையாக உள்ளது.அதாவது தமிழ் மக்களும் ஏனைய மக்களும் தமது அரசியல் உரிமைகளிற்காக போராடாமல் இருக்க ஒரு புதிய வகையான அரசியலை திணிக்க முயல்கின்றனர். அது தான் அபிவிருத்தி நிவாரண அரசியல். இதன் ழூலம் தமிழ் மக்கள் தங்களது நியாயமான உரிமைகளிற்கு குரலெழுப்பி, ஒன்று திரண்டு அரசிற்கு எதிராக போராடும் அரசியல் போக்கு எழுவதினை தமிழ் மக்களிடையே காணப்படுகின்ற துரோகிகளை முன்னிறுத்தி முறியடிக்க முனைகின்றனர்.


கே.பியின் புதிய கட்சியின் ழூலமும், கே.பியை வடக்கு முதலமைச்சராக்குவதன் ழூலமும் சிங்கள இனவாத அரசு பலவற்றினை சாதிக்கலாம் என நினைக்கின்றது.

1.    புலம்பெயர் தமிழர்களின் தமிழீழக் கோரிக்கையினை நாளாவட்டத்தில் மழுங்கடிக்க முடியும்.

2.    கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட புலிகளை கே.பியின் நிவாரண வேலைகளில் ஈடுபடுத்துவதன் ழூலம் அவர்களிடம் உள்ள விடுதலை உணர்வினை மழுங்கடிக்க முடியும்.

3.    புலத்தில் உள்ள புலிப் பினாமிகளிடம் தொங்கிப் போயுள்ள மில்லியன் கணக்கான பணத்தினை கைப்பற்ற முடியும்.
4.    மிக முக்கியமாக தமிழ் மக்களிடையே ஓரு புரட்சிகரமான அரசியல் உருவாக்கத்தினை தடுத்து நிறுத்த முயற்சித்தல்.
5.    கே.பி, டக்லஸ், கருணா, பிள்ளையான் என அரச ஆதரவுக் குழுக்களை தனித் தனியாக வைத்திருப்பதன் ழூலம் தமிழ் மக்களிடையே ஒற்றுமையீனத்தை பேண முடிவதுடன்,  தமிழ் தேசியம் பேசும் தமிழர் கூட்டமைப்பினை தமிழ் மக்களின் அரசியலில் இருந்து ஓரம் கட்டும் நடவடிக்கையாக கூட இருக்கலாம்.

புலிகள் இயக்கத்துடன் போர் முடிந்தவுடன் தமிழ் மக்களிற்கு ஒரு நியாயமான தீர்வு வழங்கப்படும் என்று அரசு கூறியதாக ஒரு ஞாபகம். இன்று வருடங்கள் இரண்டாகப் போகின்றது. தீர்வினைக் மருந்திற்கும் காட்டமாட்டேன் என்று அடம்பிடிக்கின்றது சிங்கள் இனவாத பாசிச மகிந்தாவின் அரசாங்கம்.
ஆனால் தம்பக்கத்திலே உள்ள துரோகியை (கைதியை) பொம்மையாக பாவித்து தமிழ் மக்களின் அனைத்து அரசியல் கோரிக்கைகளையும் புறந்தள்ளி விட்டு அபிவிருத்தி நிவாரண அரசியலையும்  மற்றும் தமிழர் பிரதேசங்களை சிங்கள மயமாக்கும்  மக்கள் விரோத செயற்பாட்டை முன்தள்ளுவதிலேயே இந்த அரசு முனைப்புடன் உள்ளது. இந்த கே.பியும் அவனது கட்சியும் தமிழ் மக்களிற்கு எந்த ஒரு விடிவையும் பெற்றுத்தரப் போவதில்லை.