Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

நானும் தெருவில் நின்று போராட்டம் நடாத்தியவன்!

நானும் தெருவில் நின்று போராட்டம் நடாத்தியவன்!

லண்டன் போராட்டங்களில் நியாயம் இல்லையாம்!

இந்தக்  காருண்ணியவாதியின் அரசு ஓரிரு பொது மக்களைத் தான் கொன்றதாம்!

நான் எதிர்க்கட்சியில் இருந்தபோது நானும் இப்படி தெருத் தெருவாகப் போராட்டியவன். எனது போராட்டத்திற்கு நியாயம் இருந்தது. ஆனால் இங்கு நடைபெறும் போராட்டங்களுக்கு நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை” எனத் தெரிவித்தார்.  மகிந்த ராஜபக்ச.  பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே மகிந்தா இதனைத் தெரிவித்தார்.

 

உண்மை தான் கசாப்புக் கடைக்காரனுக்கு எதிராக போராட்டம் நடாத்தினாலும், அவனும் இப்படித் தான் சொல்வான். காரணம் நீங்கள் இருவரும் செய்வது ஒரு தொழில் தான்.  இரண்டு வருடத்திற்கு முன்பாக அரசியல் "கொலைஞன்" ஆகி 40,000ற்கு மேற்பட்டவர்களை கொன்றொழித்துவிட்டு, லண்டன் சென்றால், அங்கு கொலை வெறிக்கெதிராகப் போராட்டம் நடாத்தினால் தங்களுக்கு அதில் நியாயம் இருக்காது தான்.

தாங்கள் லண்டனில், தங்களுக்கான பேருரையில் என்ன தான் பேசியிருப்பீர்கள@; அதை ரைம்ஸ் பத்திரிகைக்கு தெளிவாக சொல்லியுள்ளீர்களே. எனது நாட்டின் படையினர் நடாத்திய எதிரெதிர்ற் தாக்குதலில் ஒன்று அல்லது இரண்டு பொது மக்கள் தான் இறந்திருக்கக்கூடும்!. இது குறித்து கவனம் செலுத்துவோம்! ஆஹா! இந்தக் கசாப்புக்கடைக்காரனுக்கு எந்தளவு பெரிய ஜீவகாருண்ணிய மனசு. உந்தக் கவனம் செலுத்தலில். 20,000-யிரம் மக்கள் கொல்லப்பட்டார்களே என ரைம்ஸ் நிருபர் வினவ? பதில் எதுவுமின்றி சிறு மௌனம் (மனமுறுத்த) காத்தார். பின் தன்னை சுதாகரித்துக்கொண்டு பாஸிசச் சிரிப்புடன் மிக நிதானமாக மறுத்தார். முன்னையது மனச்சாட்சியுடனான சம்மதத்தின் அடையாளம்தானே?

இதைத் தானே  ஐக்கிய தேசியக்கட்சியின் துணைத் தலைவர் கரு ஜயசூரிய "இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான போர் குற்றங்கள் குறித்து விசாரணை செய்யப்பட வேண்டுமென ஏற்கனவே  அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்". இதற்கு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருகின்றோம் என பெரும் போர்ப் பிரகடனம் செய்கின்றீர்கள். " மகிந்தா ஓர் போர்க் குற்றவாளி" இது ஊருலகறிந்த உண்மை. இதன் பிரதிபலிப்பே இவரின் இம் முறை லண்டன் பிரயாணத்தை பிரித்தானிய அரசு கண்டு கொள்ளாததும், இதனால் இவருக்கு இங்கேற்பட்ட  அலங்கோலங்களும். அத்துடன் மகிந்தாவின் கருத்தரங்கை பிரித்தானிய அரசு ஒழுங்கு செய்யவேயில்லை. இது இந்தச் சிந்தனையாளனுக்கும் புரியலையோ? புரியாமல் தான் இந்தப் புலம்பலோ….

”ஜனநாயகத்தின் தாய்நாடாக இருக்கும் பிரித்தானியாவில் கருத்துச் சுதந்திரத்திற்கு முன்னுரிமை அளிக்கின்ற ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் யூனியனில் எனது கருத்தை தெரிவிக்கவிடாமல் தடுத்தது கருத்துச் சுதந்திரத்தை மறுத்ததே” அரசு என்கின்றார் நம் மகிந்த மன்னன்….

சுதந்தரமிக்க ஒரு நாட்டிலே பாதுகாப்பு காரணங்களுக்காக பிறநாட்டு ஜனாதிபதி ஒருவரின் உரை இரத்து செய்யப்பட்டது என்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு விடயமா?. எனக் கேட்கின்றார் நம் வெளிநாட்டு மந்திரி….இவர்களுடன் சேர்ந்து மோவின் சில்வா என்ற இன்னொன்று……

"வெள்ளைக்காரர்களுக்கு நான் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். பணம் பெற்றுக் கொண்டு புலிகளுக்கு பந்தம் பிடிக்கும் இங்கிலாந்து வெள்ளைக்காரர்கள் இங்கிலாந்துக்கு சமாதானத்தை பாதுகாக்கத் தெரியாவிட்டால் இங்கிலாந்துக்கு வெளிநாட்டுத் தலைவர் ஒருவர் நாட்டிற்கு வந்தால் அவருடைய கடமையை முடிப்பதற்கு உதவி செய்யத் தெரியாவிட்டால் வெள்ளைக்காரர்களின் மூத்தவர்களிலிருந்து அனைவரையும் இலங்கைக்கு அழைக்கிறேன். நீங்கள் எந்த நேரத்திலும் வாருங்கள் நீங்கள் வந்த வேலையை முடித்துக் கொண்டு வந்தது போன்றே செல்ல முடியும். நான் உலகிலுள்ள அனைத்து வெள்ளைக்காரர்களையும் இலங்கைக்கு அழைக்கிறேன் இங்கு வகுப்பு நடத்தி மஹிந்த சிந்தனையில் உள்ளது போன்று  முன்னோக்கிச் செல்ல முடியும்!" என்கின்றது

இதுதான் மகிந்த சிந்தனையென்றால், இதைச் சொல்லவும் கேட்கவும் யார் தான் இந்தப் பரிவாரங்களை அழைப்பர்.

ஜனாதிபதியின் உரை ரத்து செய்யப்பட்டமைக்கும் தமக்கும் தொடர்பில்லை – பிரித்தானியா

ஜனாதிபதியின் உரை ரத்து செய்யப்பட்டமைக்கும் தமக்கும் தொடர்பில்லை என பிரித்தானியா அறிவித்துள்ளது. ஒக்ஸ்பொர்ட் பல்கலைக்கழகத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆற்றவிருந்த உரை ரத்து செய்யப்பட்ட சம்பவத்திற்கும் அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாதென பிரித்தானியா சுட்டிக்காட்டியுள்ளது.

பிரித்தானிய அரசாங்கம் இந்த உரையை ஏற்பாடு செய்யவுமில்லை எனவும் ரத்து செய்யவுமில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒக்ஸ்பொர்ட் ஒன்றியம் மற்றும் லண்டனுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரலாயம் ஆகியன கூட்டாக இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தன

மகிந்தவின் இலண்டன் பயணத்தின் - பின்னணி தான் என்ன?

ஒக்ஸ்போட் பல்கலைக்கழக்கத்தில் ஏராளமான சிறிய அமைப்புக்களையும் சங்கங்களையும் வேறுபட்ட நாடுகளையும் இனங்களையும் சேர்ந்த மாணவர்கள் அமைத்திருக்கிறார்கள்.

இந்திய மாணவர்கள் பங்களாதேசைச் சேர்ந்த மாணவர்கள் துருக்கி மாணவர்கள் சீன மாணவர்கள் எனப் பல குழுமங்கள் அங்குண்டு. இந்த ஒவ்வொரு மாணவர் சமூகங்களும் தமக்கான அமைப்புக்களைக் கொண்டிருக்கின்றன. இவர்கள் ஆண்டு நிகழ்வுகளை நடாத்துவார்கள்.

இந்த நிகழ்வுகளின்போது தத்தமது நாடுகளிலிருந்து கலைஞர்களையும் பேச்சாளர்களையும் சில மாணவர்கள் குழுக்கள் வரவழைப்பார்கள். ஆனால் இதற்கான முன்னனுமதியினை இவர்கள் பல்கலைக்கழகத்தின் அதிகாரிகளிடமிருந்து பெற்றிருக்கவேண்டும்.

ஏனைய நாடுகளின் மாணவர் அமைப்புக்களைப் போலவே ஒக்ஸ்போட் பல்கலைக்கழத்தில் 16 உறுப்பினர்களைக் கொண்ட சிறிலங்காவினது மாணவர் அமைப்பு ஒன்றுள்ளது. இவர்கள் அனைவரும் சிங்களவர்களே.

சிங்கள மாணவர்களும் இரண்டு குழுக்களாகப் பிரிந்தே இருக்கிறார்கள். இதன் காரணமாக எட்டு சிங்கள மாவர்களே அதிபர் ராஜபக்சவினது இந்த நிகழ்வினை ஒழுங்கு செய்திருந்தார்கள்.

சிறிலங்காவினைச் சேர்ந்த மாணவர் அமைப்பின் தலைவர் டிலான் பெனாண்டோ என்பவரே சிறிலங்காவினது அதிபரைப் உரை நிகழ்த்த வருமாறு கோரி அதற்கான அழைப்பினை அனுப்பியிருந்தார்.

ஒக்ஸ்போட் யூனியன் தனியான நிர்வாக அலகுகளைக் கொண்டிருக்கிறது. இதற்கும் ஒக்ஸ்போட் பல்கலைக்கழக மாணவர் அமைப்புக்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் கல்விகற்கும் சிறிலங்காவினைச் சேர்ந்த மாணவர்கள் எவருமே ஒக்ஸ்போட் யுனியனில் அங்கத்தவர்களாகக்கூட இல்லை.

ஒக்ஸ்போட் யூனியனில் உரை நிகழ்த்துவதற்கு  ராஜபக்சவிற்கு அழைப்புக் கிடைத்திருக்கிறது என அந்த அழைப்புத் தொடர்பாக சிறிலங்காவில் பெருமையுடன் அதிகம் பேசப்பட்டது.

ஒக்ஸ்போட் பல்லைக்கழகத்தில் உரைநிகழ்த்துவதற்கு அதிபர் ராஜபக்சவிற்கு அழைப்புக் கிடைத்திருக்கிறதென்றும் அனைத்துலக ஊடகவியலாளர்களும் வெளிநாடுகளுக்கும் கருத்துக்களைக் கூறுவதற்குக் கிடைத்த அரியதொரு சந்தர்ப்பம் என்றும் இந்த அழைப்புக் கிடைத்தது தொடர்பாக குடியரசு அதிபரின் செயலாளர் லலித் வீரதுங்க தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டிருந்தாராம்.

அனைவரும் பேசுவதைப்போல  ராஜபக்சப் பரிவாரம் கடந்தவாரம் பிரித்தானியாவிற்கு மேற்கொண்ட பயணமானது பெருந்தொகைப் பணத்தையும் பொன்னான  காலத்தினையும் வீணடித்த  செயலேயன்றி வேறெதுவுமில்லை.

இத்துடன் இக் கோமாளித்தனம் முடிவடையவேயில்லை. மகிந்தா தான் பட்ட அவமானத்துடன் இங்கிருந்து அங்கு செல்ல, அதைப் போக்க மகிந்த ரசிகர்கள் மந்தி(ரி)கள் பிரதானிகள் எல்லாம் பிரித்தானியானிவிற்கு எதிரான பிரமாண்டப் போராட்டமாம். இதற்குள் தமிழ்ப் பகுதியிலும் மகிந்த ஆதரவுப் போராட்டம் என்றொரு கூத்து. துப்பாக்கி முனையில் மக்களை பலாத்கதரமாக அழைத்துவந்து ஊர்வலம் போக வைப்பது மகிந்த ஆதரவுப் போராட்டமாம்.  இலங்கையில் சகலதிலும் தானாகியதின் தொழிற்பாட்டை, நொந்து வீழ்ந்த மக்களிடம் வீரமென காட்டுகின்றார். அம் மக்கள் வீழுச்சிக்கெதிராய் கிளர்ந்தெழும் நாள் வெகுநாள் ஆகாது!