Tue04232024

Last updateSun, 19 Apr 2020 8am

குடாநாட்டில் மகிந்தப் பேரினவாத அரசியல்…..

குடாநாட்டில் மகிந்தப் பேரினவாத அரசியல்…..

சட்டவிரோதமாக, அடாவடித்தனமாக அராஐகமாக அரங்கேறுகின்றது!

டக்ளஸ் போன்ற அரச ஏவலாளர்கள் காதில் பூ வைக்கின்றார்கள்!

"யாழ்.பொது நூலகத்தில் அடாவடித்தனத்தில் ஈடுபட்டவர்களை ஏன் கைது செய்யவில்லை" ….பொலிஸாரிடம் ஆணைக்குழுத் தலைவர் கேள்வி,

"சிங்கள மக்கள் நாவற்குழி அரச காணியில் பலாத்காரமாகவே குடியேறியுள்ளனர்"        …..யாழ் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார்!

 

"அப்பாவி யாழ்ப்பாண மக்கள் மீது அரசு வீண்பழி சுமத்துகிறது. தமிழ்மக்கள் வந்தே என்னை மீட்டார்கள். அவர்கள் வந்து உதவி செய்திருக்கா விட்டால் அந்தச் சம்பவத்தில் நான் இறந்திருப்பேன்".……ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெற்றி

இச்சம்பவங்கள் அண்மைக் காலங்களில் யாழ்-குடாநாட்டில்  மகிந்த அரசினால் கண்டும் காணாமலும், திட்டமிட்டும்  மேற்கொண்ட சட்டவிரோத, அடாவடித்தன,-அராஐகச் செயல்களாகும். இவைகளைச் சொல்பவர்கள் அரசின் பொறுப்பு மிக்கவர்கள். இவைகளுக்கு அரசும் அதன் ஏவல்களும் பொறுப்பற்ற விதத்தில் நடக்கின்றார்கள். அதற்கேற்ற விதத்தில்  பதில் சொல்கின்றார்கள்.

யாழ். பொது நூலகத்தில் நடைபெற்றது அடாவடித்தனம். இதற்கு யாழ்-மாநகரசபை மேயரும், டகள்ஸ் தேவானந்தாவும் சொன்னவைகளும்--விட்ட அறிக்கைகளும் பொறுப்பற்ற--பொறுக்கித்தன அரசியற் செயற்பாட்டின் வெளிப்பாடே! பொது நூலகத்தில் கடந்தமாதம் நடைபெற்ற சம்பவங்களை, தமிழ்த்தேசிய வாதிகள்--யாழ் ஊடகங்கள் பொறுப்பற்று வதந்திகளைப் பரப்பின, செய்திகள் வெளியிட்டன என அரசும் அதன் ஏவல்களும் ஊளையிட்டன.  அதற்கு தண்டனையாக யாழ் மாநகரசபை—பொது நூலகக் கூட்டங்களுக்கு யாழ் பத்திரிகை நிருபர்கள கூட அனுமதிக்கப்படவில்லை. அந்தளவிற்கான "பெரியதோர்"  பேரினவாதத் தண்டனை. உண்மைகளை தற்காலிகமாக உறங்க வைக்கலாம்!.  நீண்டகாலத்திற்கு சாத்தியமானதல்ல!. இதுதான் மகிந்த அரசியலில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

யாழ் பொது நூலகத்தில் என்ன நடைபெற்றதென அரச ஆணைக்குழுவே விசாரணை செய்துள்ளது.

"யாழ். பொது நூலகத்தில் நுழைந்து அசம்பாவிதத்தில் ஈடுபட்ட சிங்கள சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்காததற்கான காரணம் என்ன?"

இவ்வாறு ஜனாதிபதியால் அமைக் கப்பட்டுள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் தலைவர் சி.ஆர்.டி.சில்வா பொலிஸாரிடம் கேள்வி எழுப்பினார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினர் கடந்தமாதம் நான்கு தினங்களாக யாழ்.மாவட் டத்தில் பிரதேச செயலக பிரிவு ரீதியாக பொதுமக்களின் சாட்சியங்களை பதிவு செய்தனர்.

இந் நிலையில்  யாழ். பொது நூலகத்திற்கு விஜயம் செய்தனர். இதன் போது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவர் சி.ஆர். டி.சில்வாவுக்கு யாழ். பொது நூலக நூலகர் தனபாலசிங்கம் நூலகத் தகவல்களை எடுத்துக் கூறினார்.

அப்போது அண்மையில் யாழ். பொது நூலகத்தில் சிங்கள சுற்றுலா பயணிகள் அசம்பாவிதத்தில் ஈடுபட்டனரா என ஆணைக்குழுவின் தலைவர் நூலகரிடம் வினவினார். இதற்குப் பதிலளித்த நூலகர் தனபாலசிங்கம் சுற்றுலாப் பயணி கள் நூலகத்தைப் பார்வையிடு வதற்கு ஒரு நேர ஒழுங்கு பேணப்படுகின்றது எனினும் சம்பவம் நடைபெற்ற தினத்தில் நிகழ்வு ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தமையால் சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் சுற்றுலாப் பயணிகள் குழப்பத்தில் ஈடுபட்டனர். பின்னர் நூலகத்தை பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்ட போது இரவல் வழங்கும் பகுதியிலுள்ள நூல்களை தூக்கிவீசினர் என அவர் தெரிவித்தார்.

இவ்வாறு அசம்பாவிதத்தில் ஈடு பட்டவர்கள் மது போதையில் இருந்தனரா? அவர்களை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்தனரா? என ஆணைக்குழு வின் தலைவர் நூலகரிடம் கேட்டார். இவ்வாறு எதுவித சட்ட நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை என நூலகர் பதிலளித்தார். இதன்போது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் யாழ்ப்பாண விஜயத்தின் பாதுகாப்பிற்கு பொறுப் பாகவிருந்த யாழ்ப்பாண பொலிஸ் நிலைய உயர் அதிகாரியை அழைத்த ஆணைக்குழுவின் தலைவர் பொது நூல் நிலையத்தில் அசம்பாவிதத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என வினவினார். அதன் போது பொலிஸ் அதிகாரி மெளனம் சாதித்தார்.

சிங்கள மக்களின் நாவற்குழி குடியேற்றம்!

"சிங்கள மக்கள் நாவற்குழி அரச காணியில் பலாத்காரமாகவே குடியேறியுள்ளனர். அவர்களை அரசாங்கம் அங்கு குடியமர்த்தவில்லை என தெரிவித்தார் யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார்~~

சித்தங்கேணி மகளீர் அபிவிருத்தி நிலையத்தில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான தேசிய ஆணைக்குழுவின் இரண்டாம் நாள் அமர்வு இடம் பெற்றது. இதன் போது தெளிவுபடுத்துகையிலேயே யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் மேற்கண்டவாறு கூறினார்.

குடாநாட்டு அரச குண்டர்களின் தாக்குதலும், யாழ்-மக்கள் மீதான வீண்பழி சுமத்தலும்!

"அப்பாவி யாழ்ப்பாண மக்கள் மீது அரசு வீண்பழி சுமத்துகிறது"....சுனில் ஹந்துநெற்றி

தன் மீதான தாக்குதலை யாழ்ப்பாண மக்கள் மேற்கொண்டதாக அரசாங்கம் தெரிவித்த கருத்தை ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெற்றி நிராகரித்துள்ளார்.

“ சுனில் ஹந்துநெற்றி மீது அரசாங்கம் தாக்குதல் நடத்தவில்லை. ஆவேசம் கொண்ட யாழ்ப்பாண மக்கள் அவர் மீது தாக்குதல் நடத்தியிருக்கலாம்“ என்று சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கருத்து வெளியிட்டிருந்தார்.

இதுதொடர்பாக  நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சுனில் ஹந்துநெற்றி “இனவன்முறைகளைக் கொளுந்து விடச் செய்யும் வகையில் இப்படிக் கூறாதீர்கள்.தமிழ்மக்கள் வந்தே என்னை மீட்டார்கள். அவர்கள் வந்து உதவி செய்திருக்கா விட்டால் அந்தச் சம்பவத்தில் நான் இறந்திருப்பேன். இந்த நாடாளுமன்றக் கட்டத் தொகுதிக்கு நான் சவப்பெட்டியிலேயே கொண்டு வரப்பட்டிருப்பேன். இந்தத் தாக்குதல் சில அரசாங்க ஆதரவு பெற்ற குண்டர்களாலேயே மேற்கொள்ளப்பட்டது. இராணுவப் புலனாய்வுப் பிரிவின் ஆதரவுடனேயே இவர்கள் இயங்குகின்றனர். வடக்கில் இராணுவ ஆட்சி தான் நடக்கிறது என்பது தெளிவாகிறது. இராணுவப் புலனாய்வுப் பிரிவே அதைச் செய்கிறது“ என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே சுனில் ஹந்துநெற்றி நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில்,  “ யாழ்ப்பாணத்தில் உள்ள காவல்துறையினர் தம்மால் பாதுகாப்பு வழங்க முடியாதிருப்பதாகவும் அந்தப் பகுதியில் சில ஆயுதக்குழுக்கள் இயங்கி வருவதாகவும் என்னிடம் தெரிவித்தனர். கூடிய விரைவில் யாழ்ப்பாணத்தைவிட்டு வெளியேறுமாறும் காவல்துறையினர் கேட்டனர்.ஆனால் மருத்துவர்களோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக தங்கியிருக்க வேண்டும் என்று ஆலோசனை கூறினர்.எமது பாதுகாப்புக்கே ஆபத்து இருக்கும் போது எதிர்க்கட்சி அரசியல்வாதிகளின் பாதுகாப்பை எம்மால் உறுதிப்படுத்த முடியாது என்று காவல்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் வைத்து என்னிடம் கூறினர்.

புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் வடக்கில் இராணுவ ஆட்சியே நடக்கிறது.

"போர் முடிவுக்கு வந்துள்ள 18 மாதங்கள் ஆகியுள்ள போதும் வடக்கில் அரசாங்கம் உண்மையான அமைதியை ஏற்படுத்தத் தவறிவிட்டது“ எனறு அவர் மேலும் குற்றம்சாட்டினார்.

மேற்படி உண்மைகள் மகிந்தாவிற்காக--மகிந்தாவால் உருவாக்கப்பட்ட தேசிய ஆணைக்குழு முன் சொல்லப்பட்டவைகள். இவைகள் எல்லாம் கழுதைக்கு உபதேசம் போலவே! மகிந்தப் பேரினவாதம் ஓர் திட்மிட்ட ஒழுங்காற்றலில் செயற்பட்டுக் கொண்டிருக்கினறது. அது  சிறுபான்மை என்ற ஒன்றில்லை எல்லாம் பெரும்பான்மை  என்ற நோக்கிகிலிருந்தே!  இதற்கு நேற்று இரண்டாவது தடவையாகவும் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்!  அதுவும் எல்லோருக்கும் பால்ச்சோறு கொடுத்து!