Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

தமிழ்மக்கள் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும்!

தமிழ் மக்கள் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும்!

தென்னிலங்கையில் இராணுவத்தினர் தமிழ் மக்கள் போன்றே எங்களைப் பார்த்தனர்!

தமிழ்மக்களுடன் ஒற்றுமையாக வாழவே இங்கு வந்தோம்!

யாழ் வந்த சிங்கள மக்கள் சொல்கின்றார்கள்!

 

யாழ்ப்பாணத்தில் மீள் குடியேறு வதற்காக மேலும் 300 இற்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள் இன்றும் நாளையும் யாழ் நகருக்கு வருகை தரவுள்ளதாக யாழ்.புகையிரத நிலையத்தில் தங்கியுள்ள சிங்கள குடும்பஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.அத்துடன் கடந்த 1983 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்த 6 ஆயிரத்து 500இற் கும் மேற்பட்ட குடும்பங்கள் தென்னிலங்கையின் பல பகுதியிலும் வசித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பலாலியில் உள்ள இராணுவ முகாமொன்றில் கோப்ரல் தர பதவி யில் கடமையாற்றுவதாக தன்னை அறிமுகப்படுத்திய லதித் பிரியந்த விக்கிரமசிங்க என்ற குடும்பஸ்தரே மேற் கண்டவாறு தகவல் வழங் கினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:

1983 ஆம் ஆண்டிற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களிலும் பேக்கரி மேசன், வியாபாரம் உள்ளிட்ட தொழில்களில் நாங்கள் ஈடுபட்டு வந்தோம். 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் வாக்களித்தோம். அத்துடன் யாழ்.சிங்கள மகாவித்தியாலயம் மற்றும் தமிழ்ப் பாடசாலைகளில் கல்விகற்றோம். எனினும் 1983 ஆம்ஆண்டு ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக யாழ்ப்பாணத்திலிருந்து இடம் பெயர்ந்து சென்ற நாம் அனுராதபுரம் சேனபுர முகாமில் தங்கியிருந்தோம்.

இதன்போது கூலித்தொழில் வியாபாரம் உள்ளிட்ட தொழில்களுக்காக குருநாகல் மாத்தளை, மாத்தறை, காலி உட்பட பல மாவட்டங்களுக்குச் சென்றோம். கடந்த 27 வருடங்களாக படையினரும் பொலிசாரும் எங்களை யாழ்ப்பாணத்தவர் (தேசிய அடையாள அட் டையிலுள்ளவாறு ) எனக் குறிப்பிட்டு தமிழ் மக்களைப் போன்றே சந்தேகத்துடன் பார்த்தனர்.

கடந்த 21 வருடங்களாக இராணு வத்தில் கடமையாற்றும் என்னை இராணுவ உயர்மட்டம் சந்தேகத் துடனேயே பார்த்தது. இவ்வாறான பிரச்சினைகள் காரணமாகவே தமிழ் மக்களுடன் ஒற்றுமையாக எமது சொந்த மாவட்டத்தில் வாழ்வதற்காக நாம் இங்கு வருவதற்கு முடி வெடுத்தோம் என்றார்.

எனது தந்தையின் தகப்பனார் ஏ.எம்.அபயசேகர மாட்டீன் யாழ். புகையிரத நிலையத்திற்கு முன்பாக பேக்கரி நடத்தினார் என்கிறார் எச்.கே.செளந்தலா என்ற குடும்பப் பெண். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ஏ.எம். அபயசேகர மாட்டீனுக்கு 18 பிள்ளைகள் அதில் ஒருவர் எனது தந்தையார்.

நான் பிறந்தது யாழ்ப்பாணத்தில். கல்வி கற்றது யாழ்.சிங்கள மகா வித்தியாலயத்தில் நாங்கள் தென்னிலங்கைக்கு இடம்பெயர்ந்து சென்று பல கஷ்டங் களை அனுபவித்தோம். எனவே தான் தமிழ் மக்களுடன் இணைந்து ஒற்றுமையாக எமது சொந்த ஊரில் குடியமர்வதற்கு வந்துள்ளோம் என்றார்.

தமிழ் மக்களுக்கு முதலில் தீர்வு

யாழ் புகையிரத நிலையத்தில் தங்கி யுள்ள டபிள்யூ.ஏ.மல்காந்தி தெரிவிக்கையில் நாங்கள் யாழ்ப்பாணத்திற்கு கடந்த திங்கட்கிழமை வந்தோம். மூன்று தினங்களாகியும் இதுவரை ஒரு அரச அதிகாரியும் எமக்கு உதவி செய்யவில்லை. ஆனால் எமக்குத் தெரிந்தவர்கள் மற்றும் அருகிலுள்ள தமிழ் மக்களே மூன்று தினங்களும் சாப்பாடு தந்து உதவினார்கள்.

எனவேதான் நாம் அரசாங்கத்தைக் கேட்கிறோம் தமிழ் மக்கள் படும் கஷ்டங்களுக்கு முதலில் நிரந்தரத் தீர்வை வழங்குங்கள். அத்துடன் எங்களையும் யாழ்ப்பாணத்தில் எந்த இடத்திலாவது வாழ்வதற்கு இடம் தாருங்கள். எங்களுக்கு கே.கே.எஸ் வீதி நாச்சிமார் கோவிலடியில் சொந்த வீடு உள்ளது.  எனினும் அங்கு தமிழ் குடும்பங்கள் உள்ளன. எனவே அவர்களை இனி அங்கிருந்து அகற்ற வேண்டாம். எங்களுக்கு அரசகாணியை ஒதுக்கித் தாருங்கள் என அரசாங் கத்தை கேட்கிறோம் என்றார்.

சாதாரண  மக்களிடம் இனவாதிகள் பாடம் படிக்க வேண்டும். சொந்த வீடு இருந்தும், தாங்கள் வாழ்ந்த வீடு வேண்டாம். அதிலிருந்து தமிழ் குடும்பங்களை அகற்ற வேண்டாம். எங்களுக்கு வேறு இடம் தாருங்கள் என அரசைத்தான் கேட்கின்றது யாழ் வந்த அக்குடும்பம்.  யாழ்-முஸ்லிம் பகுதியில் புலிகளால் அம்மக்கள் விரட்டி அடிக்கப்பட்டனா. அச்சமயம் முஸ்லிம்களின் வீடுகளில் குடியேறிய சாதாரண தமிழ்மக்கள், முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு வசதியாக தாங்கள் வாழ்ந்த முஸ்லிம் மக்களின் வீடுகளில் இருந்து வெளியேறினர். வெளியேறும் போது இவர்களில் பலர் தம் சொந்த இடங்களுக்கே போக முடியா நிலை. தற்போது யாழ் வந்த சிங்களக் குடும்பங்களில் இரு குடும்பங்களுக்கு  கொழும்பில் உள்ள தமிழ் வர்த்தகர்கள் இருவர் தங்கள் யாழ்-வீட்டில் குடியமர்த்தியுள்ளார்கள். இக்குடும்பத்தின் பேரனார் 30-வருடங்களுக்ககு முன் யாழ்ப்பாணத்தில் இருந்து இணுவில் வரையுள்ள பெரும்பாலான கிராமங்களில்  துவிசக்கரவண்டியில் பாண் வியாபாரம் செய்தவர்.  70-ம் ஆண்டு சிறிமா அரசின் பாண் தட்டுப்பாட்டுக் காலத்தில் இவரின் பாணைத்தான் இவ்வர்த்தகர்கள் உட்பட எம் குடும்பங்களும் சாப்பிட்டது!  இவைகள் எதைத்தான் காட்டுகின்றது.  அடக்கி-ஒடுக்கப்படும் மக்களை, அதிகார வர்க்கம் எப்படித் தான் இன-மத-ரீதியாக பிரிக்க முற்பட்டாலும் அவர்களை வர்க்க ரீதியாகப் பிரிக்க முடியாது என்பதையே!  இவைகள் தற்காலிகமாக சாத்தியப்படலாம்!  ஆனால் நீண்ட காலநோக்கில்……