Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

சிங்கள மக்களின் யாழ் மீள் குடியேற்றம்

 

மக்கள் தமது சொந்த ஆதாரங்கள் அனைத்தினையும் இழந்து, அவர்களது பூர்வீக இடங்களில் இருந்து சுயவிருப்பின்றி இடம் பெயர்ந்து வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தினை இந்த உள் நாட்டு யுத்தம் ஏற்படுத்தியதன் விளைவாக அநேகமானோர் சொல்லொனாத் துயரங்களிற்கும் துன்பங்களிற்கும் உள்ளாகிப் போயுள்ளனர். இந்த கொடிய இனவாத யுத்தம் ஆரம்பமாவதற்கு முதலே சில சிங்கள கிராமங்களிலும், அவற்றிற்கு அருகாமையிலும் வாழ்ந்த தமிழ் மக்களும், தமிழர்கள் பெரும்பாண்மையாக வாழும் யாழ் மாவட்டத்தில் வாழ்ந்த சிங்கள மக்களும், அவர்களது பாதுகாப்பினை கருத்தில் கொண்டு இடத்பெயர்ந்து வாழ நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். மேலும் புலிகளின் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையின் மூலம் யாழ்பாணத்தில் வாழ்ந்த முஸ்லீம் மக்களும் அவர்கள் பூர்வீகமாக வாழ்ந்த பகுதிகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். இதன்பின்னர் 1995 ம் ஆண்டு இடப் பெயர்வு அதற்கு பிற்பாடு தற்போது இறுதி யுத்த இடப்பெயர்வு என பல காலமாக பல கட்டங்களில்  இத்துயரம் எமது தேசத்தில் இடம்பெற்றது.

 

இதில் இறுதி யுத்ததினால் ஏற்பட்ட இடப்பெயர்வு என்பது மிகவும் பயங்கரமானதும் கொடுரமானதும் கூட. இந்த மக்களை மீள் குடியேற்றுகின்றோம் என இலங்கை அரசு கூறுகின்ற போதிலும் அதை செழுமையாகவே அல்லது முறையாகவோ செய்யவில்லை. இது இன்று எல்லோராலும் அறியப்பட்ட விடையமும் கூட.

புலிகளினால் வலுக்கட்டாயமாக துரத்தி அடிக்கப்பட்ட முஸ்லீம் மக்கள் கூட இன்றுவரை தமது சொந்த இடங்களில் குடியேற்றப்படவில்லை. அரசும், முஸ்லீம் கட்சிகளும் இந்த மீள்குடியேற்றத்தினை தமது அரசியலுக்கு பாவிக்கின்றனரே ஒழிய அம்மக்களின் மீள் குடியேற்றத்தில் உண்மையான அக்கறை கொண்டவர்களாக தெரியவில்லை. தொடர்ந்தும் அவர்களை அகதிகளாக வைத்திருப்பதன் மூலம் தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களுக்குமான முரண்பாட்டை தமது நலனின் நோக்கில் நீடித்து வைத்திருக்கவே விரும்புகின்றனர்.

யாழ்நகரில் இருந்து இடம் பெயர்ந்த சிங்கள மக்களின் யாழ் வருகை இன்று பிரதான செய்தியாகியுள்ளது.  இதனை இரண்டு விதத்தில் நாம் நோக்கலாம்.

1.    இந்த மக்கள் தாம் சுயமாக வந்து தமது முன்னைய இடங்களில் குடியேறி வாழ விரும்புவது. 2.    சிங்கள இனவாத அரசு தமிழ் மக்களின் தேசிய இன அடையாளத்தினை இல்லாதொழிக்கும் நோக்கில் திட்டமிட்டு சிங்கள மக்களை கூட்டி வந்து தமிழ் மக்களின் காணிகளில் அத்துமீறி குடியேற்றுவது.இதில் முதலாவதாக கூறப்பட்ட விடையத்தை கவனத்தில் கொள்வோமாயின், இந்த மக்கள் சுயமாக வந்து குடியேறி வாழ விரும்பினால்; அதற்கு அவர்களுக்கு முழுச் சுதந்திரமும் உண்டு.  எவ்வாறு தமிழர்கள் தாம் இருந்த இடங்களில் இருந்து குடிபெயர்ந்து மீண்டும் குடியேற விரும்புகின்றனறோ அதே போன்றதே இதுவும். எற்கனவே 1977 ஆண்டு முன் யாழ்பானத்தில் கணிசமான சிங்கள மக்கள் வாழ்ந்து வந்ததும், 1983 முன்பு வரை சிங்கள மகாவித்தியாலையம் யாழ்நகரில் இயங்கியதும், அதில் பல தமிழ் சிறார்கள் சிங்கள மூலம் கல்வி கற்றதும் உண்டு.

அத்தோடு தமிழர்கள் இலங்கையில் மற்றைய பாகங்களில் எவ்வாறு குடியேறி வாழ உரிமை உண்டோ, அதே போன்று இம் மக்களுக்கும் யாழ்நகரில் குடியேறி வாழ உரிமை உண்டு. பல சிங்கள மக்கள் வடமாகாணத்தின் முக்கிய நகரங்களில் பாண் பேக்கரிகரிகளை வைத்திருந்தனர். பலர் தமிழர்களின் மர ஆலைகளில் மரம் அரியும் கூலிகளாகவும், மரத்தளவாடங்களை செய்யும் கூலித் தொழிலாளர்களாகவும் முன்னர் இருந்தனர். அத்தோடு பல பாடசாலைகளில் சமையல் ஆட்களாகவும் இருந்தனர். பொதுவாக யாழ் பிரதேசத்தில் அன்று வாழ்ந்த சிங்கள மக்கள் வறியவர்களாகவே பெரிதும் இருந்தனர்.

இவ்வாறு வருபவர்களை தமிழர்கள் அரவணைத்து, அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக உதவி புரிவது மிகவும் அவசியமானது. கடந்த காலத்திலும் இன்றும் சிங்கள் தேசிய இனவெறியும், தமிழ் தேசியமும் சாதாரண மக்களிடையே சிதைத்து வைத்துள்ள அடிப்படையான மனித நேயத்தையும், பரஸ்பர புரிந்துணர்வையும், நம்பிக்கையையும் மீள கட்டியமைக்க உதவும்.

இரண்டாவது விடையமான இனவெறி அரசு சிங்கள மக்களை யாழ்நகரில் குடியேற முனைவது என்பது தமிழ் மக்கள் மீதான இன ஒடுக்கு முறையின் மிகவும் மோசமான அம்சமாகும்.  பல லட்சக்கணக்கான தமிழர்கள் இன்னமும் தமது செந்த இடங்களில் குடியேற முடியாது திறந்த சிறைச்சாலைகளில் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில்,  சிங்கள் மக்களை யாழ் நகரில் குடியேற்றுவது கடைத்தெடுத்த  இனவாதமே. இது சிங்கள அரசின் இனவாத, பௌத்த மதவாத கோர முகத்தினை அப்பட்டமாக காட்டி நிற்பதுடன், தமிழ் மக்களை இந்த அரசு ஒரு பொருட்டாகவே கருதாது அவர்களின் தேசிய இன அடையாளத்தினை அழித்தொழிக்கும் முனைப்புடன் செயல்படுவதினை உறுதியாக்கின்றது. திருமலையில் எவ்வாறு திட்டமிட்டு சிங்களவர்களை குடியேற்றி இன்று தமிழர்களை இரண்டாந்தர பிரஜையாக மாற்றியுள்ளனரோ  அதே போன்ற ஒரு நடவடிக்கையாகவே இதையும் பார்க்க வேண்டும்.