Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இலங்கையை பங்கு போடும் இந்திய மற்றும் சீனா

 

இலங்கை அரசை இன்று வரை காப்பாற்றி வருவது சீன, இந்திய அரசுகள் தான் என்ற செய்தியை படிக்கும் போது மிக  வேடிக்கையாக இருக்கின்றது. புலிகளை அழிப்பதற்கு முன்பிருந்தே, இந்த அரசுகள் தமது பிராந்திய விஸ்தரிப்பை மையமாகக் கொண்டு தமக்குள் கூட்டாக போட்டியிட்டு வந்தன. அதே வேளை மேற்கத்தைய நாடுகள் அதைத் தடுத்து தாம் ஆசியாவிற்குள்  நுழைய பல சதிகளை செய்தன. இலங்கையில் சிங்கள தேசியத்தை உயர்த்தி பிடித்தும், புலிகளுடன் சமாதானத்திற்கு இடமே இல்லை எனக் கூறியும், ஆட்சியை மகிந்தா, ஜே.வி.பி மற்றும் பௌத்த பிக்குகளின் கூட்டணி கைப்பற்றியது. எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி வலுவிழந்த கட்சியாகியது. தமிழர்களின் பிரதிநிதி என அழைக்கக் கூடிய கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழர் விடுதலைக் கூட்டனி என்பனவும் தமது இருப்பை நிலை நிறுத்துவதற்கான முயற்றியில் மட்டுமே கவனத்தை செலுத்தினர்.

 

மேலும் தமிழ் மக்களுக்கு சிங்கள பேரினவாத அரசிடம் இருந்து விடுதலை பெற்று தரப்புறப்பட்டு பின் அதே சிங்களப் பேரினவாதத்துடன் ஒன்றிணைந்து செயற்படும் இயக்கங்கள் மகிந்த அரசுக்கு உறுதுணையாக நின்றன. மகிந்த தான் நினைத்த அரசியலைச் சாதித்க முடியும் என வெளியுலகத்திற்கு காட்டியதன் விளைவாக பிராந்திய வல்லாதிக்கத்தை நோக்கமாகக் கொண்டு இயங்கும் சீனா, இந்திய போன்ற நாடுகள் மகிந்தவுடனான கூட்டமைத்தனர். தமது பிராந்திய விஸ்தரிப்பிற்கு அச்சுறுத்தலாக இலங்கையிலிருந்த புலிகளை (கடற்படை மற்றும் ஆகாயப்படை) பூண்டோடு அழிக்க அனைத்து ராணுவ உதவிகளையும் செய்தனர். இப்போது இலங்கையின் ழூலவழங்களையும், மனித உழைப்புகளையும் நீண்ட காலங்களிற்கு கொள்ளையடிக்கும் நோக்கோடு   இவ்விரு நாடுகளும் இலங்கைக்கு போட்டி போட்டு உதவி செய்து வருவதுடன், தமக்கு சார்பான ஒரு பாசிச இராணுவ ஆட்சியை மகிந்தா குடும்பத்தின் ழூலம் நிறுவியும் உள்ளனர். மகிந்தவோ தமது குடும்ப ஆட்சியை தொடர்வதற்காக வட பகுதியை இந்தியாவிடமும், தென் பகுதியை சீனாவிடமும் தாரைவார்த்துக் கொடுத்துள்ளார்.

சீன,  இந்திய அரசுகளின் நலன்களை பேண ஒரு திடமான அரசு ஆட்சியில் இருக்க வேண்டும். அது சிங்கள பௌத்த வாதத்தினை உயர்த்திப் பிடித்தால் தான் எமது நாட்டில் (இனவாதம் புரையோடிப் போயுள்ள தேசம்) ஸ்த்திரமாக ஆட்சியில் இருக்க முடியும்.

இந்த 18வது திருத்தச்சட்டம் சிறுபான்மை மக்களின் அனைத்து உரிமைகளையும் குழிதோண்டிப் புதைக்கின்றது. சிங்கள பெரும்பான்மை மக்களிற்கு இந்த நாட்டின் பொது எதிரியினை இனம் காணவிடாது திரை போட்டு மறைக்கின்றது. நாட்டை கொள்ளையிடுவோரையும், அதற்கு துணைபோபவர்களையும் காப்பாற்றுகின்றது.

இவ்வாறு தமது நலன் அடிப்படையில் இலங்கையை கூறு போட்டு விற்றுக் கொண்டிருக்கும் இந்த அரசிற்கு மக்களைப் பற்றிய கவலை இல்லை. மக்களைப் பற்றிய கவலை இன்றி செயற்படுவதானாலேயும், அதே வேளையில் சீன இந்திய அரசுகளுக்கு விசுவாசமாக உள்ளமையாலுமே, இவ்விரு அரசுகளும் இந்த அரசைக் காப்பாற்றி வருகின்றன.
தமது பொருளாதார நலன்களிற்காக இலங்கைத் தீவினிலே தமிழ் மக்களின் மீது மாபெரும் மனிதப் படுகொலை ஒன்றினை சத்தமின்றி முடித்துள்ளனர். இது இவர்களது ஒரு சிறு பரீட்சார்த்த ஆரம்பமே. இதனை தொடர அனுமதிக்கப் போகின்றோமா????