Wed04242024

Last updateSun, 19 Apr 2020 8am

கவுண்டமணி, செந்திலின் நகைச்சுவை போன்றதே இன்றைய இலங்கையின் அரசியல்

பொன்சேகாவின் மனைவி அழுத முகத்துடன் உள்ள படங்கள் இணையங்களில் ஆங்காங்கே வெளியாவதுடன்,  தீர்ப்பை மாற்றக் கோரி ஜே வி பியும் ஆர்பாட்டத்தை நடத்த ஆரம்பித்த வேளையில், மகிந்தவோ சரத் பொன்சேகா மன்னிப்பு கேட்டால் தீர்ப்பை மறு பரிசீலனை செய்யலாம் என்று அறிவித்த  செய்திகள் வெளியாகியுள்ளது.  இவற்றினை பார்க்கும் போது தமிழ் படங்களில் கவுண்டமணி; செந்திலின் நகைச்சுவை போனறு மிக வேடிக்கையாக இருக்கின்றன.

ஒரு வருடத்திற்கு முன் பல ஆயிரக்கணக்கான குழந்தைகள் முதியவர்கள் கற்பினிப் பெண்கள் என எந்த வித வேறுபாடும் இன்றி தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக கொன்று குவித்த இந்த மக்கள் விரோத சக்திகள்,  இன்று தமக்குள் மோதிக் கொள்கின்றனர். இன்று சாதாரண அடிப்படை வசதியின்றி வாழ்விழந்து வழி தெரியாமல் அனாதைகளாக முகாம்களிலும், சிறைச்சாலைகளிலும் நிற்கும் தமிழ் மக்களைப் பற்றி எந்த கண்ணீரும் இல்லை. தமது எதிர்காலம் பற்றிய கேள்வியுடன்  திகைக்கும் மக்களின் முதுகின் மேல் நின்று தான் சரத்தின் விடையம் முன் தள்ளப்படுகின்றது.

 

அண்மையில் 89000 ஆயிரத்துக்கு மேற்பட்ட விதவைகள் வடகிழக்கு மாகாணங்களில் உள்ளனர் என்னும் தகவலை இலங்கை அரசே வெளியிட்ட போதும் அவர்களுக்காக இந்த இனவாத அரசு என்ன உதவித் திட்டங்களையும் முன்வைக்கவில்லை. இதே போன்று இலங்கையில் நிலவுகின்ற பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கு இந்த அரசிடம் ஒரு திட்டமும் கிடையாது. பொன்சேகாவின் விடையத்தை முன் தள்ளி அரசின் முன்னாலுள்ள சகல முக்கிய பிரச்சினைகளில் இருந்தும்  திசை திருப்பி மககளை ஏமாற்ற முனைகின்றனர்.

அரசியல் தீர்வுக்கு எந்த சமிச்சையும் இல்லாது இயங்கும் இந்த அரசுக்கு வால்பிடித்து நிற்கும் பாரளுமன்ற அரசியல்வாதிகள் தமக்கான கார்களையும், பங்களாக்களையும், வெளிநாடு பறந்து வருவதற்கான வசதிகளையும் கவனத்தில் கொண்டு தமிழ் மக்களின் வாக்கில் தமது வயிற்றை வளர்க்கும் இந்த எஜமானர்கள் தமிழ் மக்களுக்காக இதுவரை என்ன தான் செய்தார்கள்.

மகிந்தா தனது அரசியலை மிகவும் சாதுரியமாக நகர்த்தும் இவ் வேளையில் பாதிக்கப்படுவது தமிழர்கள் அல்ல. இரணுவ முன்னரண்களில் தமது உயிரை இந்த அரசின் உத்தரவின் பெயரில் கொடுத்த அந்த இரணுவ வீரர்களின் குடும்பத்தினரும் தான். தமிழர்களில் 89000 ஆயிரம் விதவைகள் என்றால் சிங்கள மக்களிடையேயும் இதே தொகையினை எதிர்பார்க்கலாம். ஆனால் அதை இவர்கள் கூறமாட்டார்கள். அது இவர்களின் ஆட்சி கதிரையினை ஆட்டங் காண செய்துவிடும்.

நாம் இழந்ததை நாமாகவே பெற வேண்டும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதே இன்றைய நோக்கமாக எம்மிடையே உருவாக வேண்டும். பாராளுமன்ற அரசியல் ஒருபோதும் எமக்கு எதையும் தீர்வாக எக்காலத்திலும் பெற்றுத் தராது.