Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

மக்களுக்காக—மக்களால்---மக்களுடையதாம்---ஜனநாயகம்!

செய்தியும் செய்திக்கண்ணோட்டமும் 22-09-2010

மக்களுக்காக—மக்களால்---மக்களுடைடயதாம்---ஜனநாயகம்!

நம்நாட்டில் அது மகிந்தாவிடம் மண்டியிட்டுள்ளது!

செப்டெம்பர் 15ஆம் திகதியை சர்வதேச ஜனநாயக தினமாக அனுஷ்டிக்கும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபை 2007 நவம்பர் 8 ஆம் திகதி பொதுச் சபையில் நிறைவேற்றியிருந்தது.

இதேவேளை சர்வதேச ஜனநாயக தினம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை விடுத்துள்ள அறிக்கையில், ஜனநாயகம் என்பது மக்கள் தமது அரசியல் பொருளாதாரம் சமூக மற்றும் கலாசார நடைமுறைகளை தீர்மானிப்பதுடன் தங்களது வாழ்க்கையின் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவை பயன்படுத்தப்படுவதை சுதந்திரமாக வெளிப்படுத்துவதை மையமாகக் கொண்ட உலகளாவிய நடைமுறை என்பது பரந்துபட்ட அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று என்று கூறியுள்ளது.

இந்த கருத்தை ஐக்கிய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் 192 நாடுகளும் 2005ஆம் ஆண்டு ஜனநாயகம் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது அதனை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.!

 

உலகில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஓர் விஷேட தினமாகத்தான் இருக்கும். அந்தவகையில் கடந்த செப்டெபம்பர் 15-சர்வதேச ஜனநாயக தினமாம்! சமகால உலகின் ஏகப்பெரும்பான்மையான மக்கள் சுதந்திரக் காற்றை, சுவாசித்து--உயிர் வாழமுடியாமைக்கு மிகப்பெரும் தடையாகவுள்ளது ஜனநாயகமின்மையே! மனிதன்  ஏற்றத்தாழ்வான சமூகமாகியதிலிருந்து, இன்றைவரையான இவ் வரலாற்றுப் பொருள்முதல்வாத உலகப்  பரப்பில், எப்போதும் (ஏகப்பெரும்பான்மையான மக்கள்) ஜனநாயகமற்றவனாகவே வாழ்ந்து வருகின்றான்! அடக்கலும்---அடக்கி—ஓடுக்கலும் உள்ளவரை, ஐ.நா.சபையும், ஏனைய இன்னோரன்ன அறம் சார்ந்தவைகளும் சொல்லும் ஜனநாயகம் அதிகாரத்திற்கும், அதற்கொத்தாசை புரியும் அரசு இயந்திரத்திற்கும் துணை போவனவே!

இப்போ நம்நாட்டு ஜனநாயகம் மகிந்த—குடும்பத்திடம் மண்டியிட்டுள்ளது! அது தன்னை மக்களுக்குரியதாக்கு என மன்றாட்டம் போடுகிறது! எனக்கு புத்தி சொல்ல நீ யாரென அதன் கழுத்திற்கு தூக்குக்கயிறே மாட்டப்பட்டுள்ளது! எனக்கு வாழ்வா? சாவா? என்னை மரணத்தின் பிடியிலிருந்து மீட்டெடுத்து உங்களுடையதாக்குங்கள்! என அது மக்களிடம் மடிப்பிச்சை கேட்கின்றது! இக்கோரிக்கையை நிறைவேற்ற நாடும், மக்களும் போராட்ட சக்திகளும் உள்ளனவா? இல்லை என்பதே யதார்த்தம்!  கடந்த ஓரிருவாரங்களிலான மகிந்த--“மக்கள் ஜனநாயக” செயற்பாடுகளாவன:

மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் உரைகல் எனும் வாராந்தப் பத்திரிகை அலுவலகம் அரசியல் பின்புலமுள்ள காடையர் குழுவொன்றினால் தாக்கப்பட்டுள் இச்சம்பவம் 13ஆம் திகதி நள்ளிரவு இடம் பெற்றுள்ளது. மட்டக்களப்பு காத்தான்குடியில் அமைந்துள்ளது இப்பத்திரிகை அலுவலகம்.

ஆளும் கட்சியின் பிரதி அமைச்சர் ஒருவரே இத்தாக்குதலுக்குப் பின்னால் உள்ளதாக பத்திரிகையின் ஆசிரியர் ரஹ்மத்துல்லா தெரிவித்துள்ளார். கூட்டுறவு அமைப்பில் நடைபெற்ற ஊழல் தொடர்பான தகவல்களை வெளியிட்டதாலேயே தனது பத்தரிகை அலுவலகம் தாக்கப்பட்டுள்ளதாக விகல்ப என்ற இணையத்தளத்திற்கு அதன் ஆசிரியர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே 2009ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி ரஹ்மத்துல்லாவின் வீட்டை உடைத்து அவரைத் தாக்கிய ஆயுததாரிகள் அவரைக் கொலை செய்யப் போவதாக அச்சுறுத்தி இருந்தனர். பொலிஸில் அவர் முறைப்பாடு செய்திருந்தும் பொலிஸார் அது குறித்து எதுவித நடவடிக்கைகயும் எடுத்திருக்கவில்லை என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. தற்போது மீளவும் அவர் அரசியல் பின்புலமுள்ள காடையர் கூட்டத்தின் தாக்குதலை எதிர்கொண்டுள்ளார்.

ஏற்கெனவே நடைபெற்ற தாக்குதல் குறித்து பொலிஸில் முறையிட்ட போதும் பொலிஸார் எதுவித நடவடிக்கையையும் எடுக்காத காரணத்தால் இம்முறை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து ரஹ்மத்துல்லா பொலிஸில் முறையிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

********

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாட்டை கிளிநொச்சியில் பதிவு செய்ய பிபிசி இற்கு அனுமதி மறுப்பு

ஜனாதிபதி மஹிந்தவினால் நியமிக்கப்பட்டுள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினரால் இன்று கிளிநொச்சியில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்படுகின்றன. ஆணைக்குழுவின் செயற்பாட்டை பதிவு செய்வதற்காக உள்ளூர் ஊடகங்களுக்கே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிபிசி போன்ற அனைத்துலக ஊடகங்களை அனுமதிக்கவில்லை.

பி.பி.சி இன்று கிளிநொச்சியில் நடைபெறும் நல்லிணக்க ஆணைக்குழுவில் முன் பொதுமக்கள் சாட்சியமளிக்கும் நிகழ்வில் ஊடக சார்பிலாக கலந்துகொள்வதற்காக, இலங்கை பாதுகாப்பு அமைச்சிடம் வழங்கிய விண்ணம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளிட்டுள்ளது.

மேலும் அச் செய்தியில் தாம் கிளிநொச்சியில் நடைபெறவிருக்கும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் பொதுமக்கள் சாட்சியமளிக்கும் தினத்தில் ஊடகத்தின் சார்பாக தாம் கலந்துகொள்ளவென விண்ணப்பித்த போது பாதுகாப்பு அமைச்சின் உயரதிகாரி ஒருவர் அதனை நிராகரித்ததாகவும், அதற்கான காரணம் குறிப்பிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.!

சரத் பொன்சேகா குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது ‐ மூன்று வருட சிறைத்தண்டனை‐

இலங்கையின் முன்னாள் இராணுவதத்தளபதி சரத் பொன்சேகாவுக்கு இரண்டாவது இராணுவ நீதிமன்றம் இன்று மூன்று வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.

ஏற்கனவே  முதலாவது நீதிமன்றம் சரத் பொன்சேகாவிற்கான ஓய்வூதியக் கொடுப்பனவுகளை ரத்து செய்யுமாறும், அவரது பதவிகளை ரத்து செய்யுமாறும் உத்தரவு பிறப்பித்திருந்தது.
.

இராணுவ நீதிமன்றின் தீர்ப்புக்களில் நம்பிக்கை கிடையாதுசரத் பொன்சேகா

இராணுவ நீதிமன்றத்தினால் விதிக்கப்படும் தீர்ப்புக்களில் தமக்கு நம்பிக்கை கிடையாது என ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சாட்சியங்கள் தொடர்பில் கருத்து வெளியிடுவதில் அர்த்தமில்லை என சரத் பொன்சேகா சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
இராணுவ நீதிமன்ற விசாரணைகளில் நம்பிக்கை இல்லை எனவும், இறுதியில் தமக்கு தண்டனை வழங்கப்படப் போவது உறுதி எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகா சார்பில் ஆஜரான சட்டத்தரணி ரியன்சி அரசகுலரட்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார் ஆயுதக் கொள்வனவின் போது சரத் பொன்சேகா ஊழல் மோசடிகளில் ஈடுபட்டார் என்பதனை நிரூபிப்பதற்கு எவ்வித ஆதாரங்களும் முன்வைக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கு ஆதரவளித்தமையை எண்ணி வருந்துவதாக கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்:கடந்த காலங்களில் அரசாங்கத்திற்கு ஆதரவளித்தமையை எண்ணி வருந்துவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்னர் அரசாங்கத்திற்கு ஆதரவளித்தமை தற்போது கவலையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்காக அரசாங்கத்திற்கு தாம் ஆதரவளித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். படைவீரர்களுக்கு ஆதரவளித்தமையை எண்ணி பெருமிதம் அடையும் அதேவேளை, அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகள் அதிருப்தி அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

18 ஆவது திருத்தச் சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் நாட்டின் ஜனநாயகத்திற்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதாக சூளுரைத்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கெ கொண்ட பல தலைவர்கள், பதவியை ஏற்றதன் பின்னர் தமது நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்ட அரசியல் சாசனத் திருத்தங்களின் மூலம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வாழ்நாள் முழுவதிலும் ஜனாதிபதியாக ஆட்சி செய்யக் கூடிய சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசியாவின் பழமையான ஜனநாயகத்தை கொண்ட நாடு என்ற பெருமையை கொண்ட இலங்கையில் ஜனநயாகம் இல்லாதொழிக்கப்படுவதற்கு அனுமதிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்வதில் அனுகூலமுண்டோ? குறுங்கால நிறைவேற்று அதிகாரப் பதவிப்--பாசாங்குளால் வந்தவினை! நீங்கள் பலமாகும்வரை தானே பலசாலி என்கின்றார்!

இது உங்கள் பரிணாமத்தில் வடலி வளர்த்து கள்ளுக் குடித்த கதையாகுமோ?

***********************

இறுதிப் போரின்போது செய்தியாளர்களை தடுத்தது தவறே! ---மூத்த பத்திரிகையாளர்:

இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் செய்தியாளர்களை களத்துக்குச் செல்வதில் இருந்து பெரும்பாலும் தவிர்த்ததன் மூலம் இலங்கை அரசாங்கமும், இராணுவமும் தவறிழைத்திருக்கின்றன என்று போரின் இறுதி நாட்கள் குறித்து விசாரணை செய்யும் ஆணைக் குழுவின் முன்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போரில் யார் தவறிழைத்தார்கள் என்பதைக் கண்டறிந்து பழிவாங்கும் நடவடிக்கைகள் கூடாது என்றும் இந்த ஆணையத்தின் முன்பாக சாட்சியமளித்த மிகவும் மூத்த செய்தி ஆசிரியரான சண்டே ஐலண்ட் செய்திப் பத்திரிகையின் மனிக் டி சில்வா கூறியுள்ளார்.

இந்தப் போர்க் காலத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டார்கள் என்று வெளிநாட்டு மற்றும் உள்ளூர் செய்தியாளர்கள் மீது அவ்வப்போது இலங்கை அரசாங்கம் குற்றஞ்சாட்டி வந்துள்ளது.

"சில அரசாங்க ஊடகங்களின் செய்தியாளர்களைத் தவிர, ஏனைய செய்தியாளர்களை அதிகாரிகள் போர்ப் பகுதிக்கு அருகே செல்ல அனுமதிக்காததால், தாம் கேள்விப்பட்டதை மாத்திரம் வைத்துக்கொண்டே பல செய்திகள் வந்தன. அதனால்தான் போரில் செய்தி ஊடகங்கள் ஆக்கப்பூர்வ பங்காற்றவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது" என பத்திரிகையாளர் மனிக் டி சில்வா தெரிவித்துள்ளார்.

முன்னதாக விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருக்கும் செய்தியாளர்களின் நிலைமையை விடுதலைப் புலிகளும் கடுமையாக்கியிருந்தனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். போரின் போது யார் என்ன செய்தார்கள் என்பதை வைத்து பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் எந்தப் பலனும் கிடையாது என்றும் சில்வா கூறினார்.

அதற்குப் பதிலாக அனைவரது மனக்காயங்களும் ஆற்றப்பட வேண்டும் என்பதை நாடு அங்கீகரிக்க வேண்டும் என்றும், அனைத்து மக்களும் சமமாக நடத்தப்படுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களினதும், இராணுவத்தினதும் வாழ்க்கையை வழமைக்கு திரும்பச் செய்யும் நடவடிக்கைக்கு உதவும் நிதிக்காக இலங்கையர் ஒவ்வொருவரும் ஒரு வரியைச் செலுத்த வேண்டும் என்றும் ஒரு புதுமையான கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.

இதை மேலும் அர்த்தபுஸ்டியுடன் அழுத்திச் சொலகின்றார்: ----சிங்கள இராஜதந்தரி:

பல பிரபாகரன்கள் தோன்றுவதற்கு வழி செய்துவிடும்: சிங்கள இராஜதந்திரி நந்தா கொடகே சாட்சியம்

"தமிழ் இளைஞர்களை நீதித்துறை கைவிட்டுவிட்டது"

இலங்கையில் விசாரணை இன்றி பல ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் இளைஞர்களை நீதித்துறை கைவிட்டு விட்டதாக இலங்கையின் மூத்த இராஜதந்திரியான நந்தா கொடகே படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் முன்பாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

இலங்கையில் எந்தவிதமான குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாமல், பல்லாயிரக் கணக்கான சிறுபான்மைத் தமிழ் இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக, இலங்கையின் ஓய்வு பெற்ற மூத்த இராஜதந்திரியான நந்தா கொடகே தெரிவித்திருக்கிறார்.

இவர்களில் பலர், பல ஆண்டுகளாக இவ்வாறு அகப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இலங்கைப் போரின் இறுதி நாட்கள் குறித்து ஆராயும், படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கத்துக்கான இலங்கை ஜனாதிபதியின் ஆணைக்குழுவின் முன்பாக சாட்சியமளிக்கும் போது அவர் இவ்வாறு கூறினார். இத்தகைய போர் ஒன்று இலங்கையில் மீண்டும் ஏற்படாமல் தடுப்பதற்கான வழிவகைகளையும் இந்த ஆணைக்குழு ஆராய்கிறது.

விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் குறைந்தது இரண்டாயிரம் தமிழ் இளைஞர்களாவது இவ்வாறு பல ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று, ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கையின் முன்னாள் தூதரான நந்தா கொடகே அந்த ஆணைக்குழுவின் முன்பாக கூறினார்.

இவர்களைவிட பல்லாயிரக்கணக்கானவர்கள், கடந்த ஆண்டு போர் முடிந்தது முதல் முகாம்களிலும் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். நீதித்துறை அவர்களை கைவிட்டு விட்டது என்று அவர் குற்றஞ்சாட்டினார். இவர்களை இந்த மாதிரி தொடர்ந்து தடுத்து வைத்திருந்தால், பல பிரபாகரன்கள் தோன்றுவதற்கு அது வழி செய்துவிடும் என்றும் அவர் கூறியுள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் மாத்திரம், சுமார் 500 இளைஞர்கள் கொழும்பு வெலிக்கட சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து தான் மிகுந்த ''ஆத்திரம்'' கொண்டுள்ளதாகவும் அவர் பிபிசியிடம் கூறினார்.

நாட்டின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்று அவர் ஒப்புக்கொள்கிற போதிலும், அந்த இளைஞர்களுக்கு எதிராக ஆதாரங்கள் எதுவும் இல்லாதபட்சத்தில் அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் நந்தா கொடகே கூறினார்.

தான் பிரிட்டனில் இருக்கும் போது விடுதலைப்புலிகளுக்கு பணம் கொடுத்ததாக பொலிஸாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கிய ஒரு தமிழ் பொறியியலாளர் தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்த விடயத்தை அவர் சுட்டிக்காட்டினார்.

வெளிநாடுகளில் இருக்கும் பலர் இவ்வாறு விடுதலைப்புலிகளுக்கு பணம் கொடுக்க நிர்ப்பந்திக்கப்படுவது குறித்து அவர் பல தடவைகள் வலியுறுத்தியும், ஒரு வருடத்துக்கும் மேலாக அவர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக நந்தா கொடகே கூறினார்.

சில உயர் அதிகாரிகள் இந்த கைதிகள் குறித்து அனுதாபத்துடன் இருக்கின்ற போதிலும், சிக்கலான அதிகாரவர்க்கக் கட்டமைப்பு காரணமாக அந்தக் கைதிகள் மறக்கப்பட்டு விடுகிறார்கள் என்றும் அந்த ஓய்வுபெற்ற இராஜதந்திரி கூறினார்.

முன்னாள் விடுதலைப்புலி அமைப்பு உறுப்பினர்கள் அல்லது சந்தேக நபர்கள் எல்லாரும் ஒரே மாதிரியாக நடத்தப்படுவதில்லை. மிகவும் மூத்த உறுப்பினரான கேபி என்று அழைக்கப்படுபவர், பெயரளவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தாலும், வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுடன் தொடர்பை ஏற்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்துடன் ஒத்துழைக்கிறார்.

மற்றுமொரு மூத்த உறுப்பினரான தயா மாஸ்டர்- தற்போது நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். ஒரு தொலைக்காட்சி நிலையத்தை நடத்துவதற்கு தான் உதவிக்கொண்டிருப்பதாக அவர் பிபிசியிடம் தெரிவித்திருந்தார்.

உந்த உண்மை கண்டறியும்  நல்லிணக்க குழுக்களுக்கு முன்னால், இந்தப் பொறுப்புள்ளவர்கள்  சொல்வதெல்லாம், அரசிற்கு கழுதைக்கு உபதேசம் செய்வது போலாகும்!

சாதாரண சிங்கள மக்களை சென்றடையவேண்டும்! சென்றடைந்தால் அது தேசிய இனப்பிரச்சினைப் புரிதலுக்கான மைல் கல்லாகும்! கடந்தால சிங்களப் பேரினவாதத்தின் திட்டமிட்ட செயற்பாடுகளை கற்றுக் கொள்வார்கள்!

************************

போப்பாண்டவர் முன்னிலையில் சிவந்தன் கோரிக்கை!

போப்பாண்டவர் பெனடிக் நாளை ஸ்காட்லாந்து(Scotland) செல்லவுள்ள நிலையில் அங்கே சுமார் 1 லட்சம் கத்தோலிக்கர்கள் கூடும் நிகழ்ச்சி, நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் கால்நடைப் பயணம் மேற்கொண்ட சிவந்தன் தனது கோரிக்கைகளை முன்வைத்து துண்டுப்பிரசு போராட்டத்தை நடத்தவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்ட கத்தோலிக்கர்களுக்காக நீதி கேட்டு சிவந்தன் துண்டுப் பிரசுரங்களையும் வினியோகிக்கவுள்ளார். யாழ் நவாலி கத்தோலிக்க தலம் மீது இலங்கை இராணுவம் தாக்குதல் நடாத்தி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதையும் நினைவுகூரும் விதமாக இது அமைந்துள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்!

இலங்கையில் தொடர்ச்சியாக பல கிறிஸ்தவ தேவாலங்களும் மற்றும் குறிப்பாக கத்தோலிக்க தேவாலயங்களும் தொடர்ச்சியாக தாக்குதலுக்கு உள்ளாகி வந்துள்ளன. சிங்கள இராணுவம், சிங்கள மக்கள், உட்பட பௌத்த பிக்குகள் கூட தேவாலயங்களை அடித்து நொருக்கியுள்ளனர்.

இவற்றை ஆதாரபூர்வமாக போப்பாண்டவர் முன்னிலையில் வெளிப்படுத்த சிவந்தன் எடுத்துள்ள முயற்சியை இணையம் பாராட்டுகிறது. அதி தீவிர பற்றுக்கொண்ட கத்தோலிக்கர்களைக் கொண்ட ஸ்காட்லாந்தில், இவ்வாறானதொரு பிரச்சாரம் மிகுந்த பலன் தரவல்லதோடு, தமிழர்களின் நியாயங்களை கத்தோலிக்கர்கள் உணரவும் இது ஏதுவாக அமையும்.

துண்டுப் பிரசுரங்களை வழங்கி கத்தோலிக்கர்களுக்கு தமிழர்களின் நிலையை எடுத்துரைக்கக்கூடிய அனைத்து இளையோர்களும், சிவந்தனின் கரங்களைப் பலப்படுத்த ஸ்காட்லாந்து விரையுங்கள் என கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

தமிழர்கள் அதிகம் வாழாத ஸ்காட்லாந்துக்குச் சென்று அங்கு எமது இன விடிவிற்காய் போராடும் அனைவருக்கும், லண்டன் வாழ் இளையோர்கள் உதவவேண்டும் என பதிவு இணையம் வேண்டி நிற்கிறது.

போப்பாண்டவருக்கே ஏகப்பட்ட பிரச்சினை! றோமன் கத்தோலிக்கத்தை எப்படி தக்கவைப்பது என்பதில்! அவருக்கு கூட பலத் எதிர் நடவடிக்கைகள்!

இதற்குள் அவரின் சர்வதேச திருச்சபைக்குள் ஏகப்பட்ட ‘சாயிபாபா—நித்தியானந்தாக்கள்’!

சாயிபாபாப் பாணியில் திருச்சபை போதகர்கள் சின்னஞ் சிறிசுகளுடன் பாலியல் பலாத்காரம்!  இதற்காக அண்மையில் ஸ்கொட்லாந்து துறவிகளையே விசாரித்து எச்சரித்தவர் பப்பா! இந்நிலையில் பப்பா சிவந்தன் ‘சிரார்த்தங்களை’ சிரம்மேற் கொள்வாரா? சம்பிரதாயத்திற்காக சிவந்தனை திருப்திப்படுத்த சில வாக்குறுதிகள் வழங்கலாம்! இருந்தும் இலங்கையின் இராவண இராட்சத ஆட்சியை, பப்பா அறியாதவரோ?

************************
மலையக மக்கள் இனியும் தோட்டக் கம்பனிகளில் வாழமுடியாது!

மலையகப் பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்தினுடையது என்றும், இனியும் அவர்கள் பெருந்தோட்டக் கம்பனிகளில் தங்கி வாழ முடியாது என்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

மலையக மக்கள் எவருக்கும் கட்டுப்பட்டு வாழ வேண்டியதில்லை என்றும் அவர்கள் தோட்டத் தொழில் தளத்தில் இருந்து வீடு திரும்பினால் இந்த நாட்டின் பிரஜைகள் என்றும் குறிப்பிட்ட பிரதியமைச்சர் சிவலிங்கம், தொழிலாளர்கள் தொடர்பான பொறுப்பு அரசா ங்க த்தினுடையது என்றும் சுட்டிக்காட்டினார்.

தொழிலாளர் களின் லயன் குடியிருப்புகளை இல்லாதொழிப்பதற்கு 225,000 தனி வீடுகள் நிர்மாணிக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு அரசாங்கமே உதவ வேண்டும் என்றும் குறிப்பிட்ட பிரதியமைச்சர் சிவலிங்கம், வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் பொறுப்பு கம்பனிகளினது அல்லவென்றும் ஏனெனில், தொழிலாளர்கள் குடியிருக்கும் வீடுகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொழிலாளர்களுக்கே சொந்தமானது என்று தெரிவித்தார். அவற்றைத் திருத்தியமைப்பதற்கும் மாற்றியமைப்பதற்கும் தொழிலாளர்களுக்கே உரிமை உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு முன்னிலையில் நேற்று சாட்சியம் அளித்த பிரதியமைச்சர் சிவலிங்கம் ஆணைக்குழு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் பதில் அளித்தார். காங்கிரஸின் செயலாளர் நாயகம் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் சாட்சியம் அளிப்பார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அவருக்குப் பதிலாகப் பிரதியமைச்சர் சிவலிங்கம் நேற்று சாட்சியம் அளித்தார். அவர் தொடர்ந்து சாட்சியமளிக் கையில் :;

புலிகளுடன் ஏற்படுத்திக்கொண்ட போர் நிறுத்த உடன்படிக்கையின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சமா தான முன்னெடுப்பில் மலையகத் தில் வாழும் தமிழர்கள் அந்நியப் படுத்தப்பட்டார்கள் என்று குறிப் பிட்டார். அமரர் செளமியமூர்த்தி தொண்டமான் இனப் பிரச்சினை யைத் தீர்ப்பதற்குப் பெரும் முயற்சி எடுத்தார் என்றும் ஆனால் புலிகள் எந்தவித உள்ளகத் தீர்வுக்கும் உடன் படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

யுத்தம் முடிவுக்கு வந்துள்ள போதிலும் இந்திய வம்சாவளியினர் இன்னமும் முகாம்களில் தடுத்து வைத்திருப்பதைப் பற்றி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கவலை யடைகிறது என்று குறிப்பிட்ட பிரதியமைச்சர் சிவலிங்கம், யுத்தம் இல்லாத நிலையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இளைஞ ர்கள் இன்னும் தடுத்து வைக்கப் பட்டிருப்பது நியாயமற்றதென்று தெரிவித்தார்.

தோட்டங்களை நிர்வகிக்கும் முகாமைத்துவ கம்பனிகள்தானே தொழிலாளர்களின் நலன்களைக் கவனிக்க வேண்டும்? என்று ஆணை க்குழு உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த பிரதிய மைச்சர், “இல்லை, தொழில் ரீதியான பொறுப்பு மட்டுமே கம்பனிகளுக்கு உண்டு, நாங்கள் யாரையும் இனித் தங்கி வாழ முடியாது. நாட்டில் உள்ள ஏனைய ஊழியர்களைப் போலவேதான் நாங் களும் பெருந்தோட்டங்களில் தொழில் புரிகிறோம். எங்கள் வீடுகளில் வாழ்கிறோம். தொழில் புரியும் நேரத் தைத் தவிர நாங்கள் கம்பனிகளின் கீழ் வாழ்பவர்கள் அல்லர். அரசாங் கமே எமக்குப் பொறுப்பு என்றார்.

அரசாங்க நிறுவனங்களில் தமிழை அமுல்படுத்துவதற்கு எவ்வளவு காலம் தேவை எனக் கருதுகிaர்கள்? என்ற கேள்விக்குப் பதில் அளித்த பிரதியமைச்சர் சிவலிங்கம்; நாங்கள் தேவைக்கு அதிகமாகவே காத்தி ருந்துவிட்டோம். இனியும் காத்தி ருக்க முடியாது. எங்கள் மத்தியில் படித்தவர்கள் இருக்கிறார்கள். 500 அனுசரணையாளர்களை நியமிக்க விண்ணப்பம் கோரப்பட்டபோது 12 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந் தார்கள். அனைவரும் படித்தவர்கள். அவர்களைக் கொண்டே இந்த மொழிப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் என்று பதில் அளித்தார்.

18-ம் நூற்றாண்டுக் கோரிக்கைகளுக்கு, 21-ம் நூற்றாணடில் சாட்சியம் அளிக்கின்றார் இந்த முழுமுதற் கடவுள்.  இவர்களின் அரசியல் தாத்தா முதல் கொள்ளுப்பாட்டன் வரை மந்திரிகளாகவே நீடிக்கும்!

காலத்திற்கு காலம் சிங்களப் பேரினவாத அடிவருடிகளாகி தம் அரசியல் வாழ்வை எப்படியும் அரங்கேற்றியே விடுவார்கள்!

இவர்களின் வாழ்வோ மன்னாதி-மன்னர் வாழ்வு? மலையக மக்கள் வாழ்வோ?..... மலையக மக்கள் இவர்களிடமும், இவர்களின் பேரினவாத எஜமானர்களிடமும் கற்றுக்கொண்ட பாடங்கள் ஏராளம்! பொதுவாக ‘காங்கிரஸ்’ என்றால் அரசியலில் சோரம் போவதில் எப்போதும் முன்னணிப்பாத்திரம்தான் வகிப்பார்கள்.! பெரும்பாலும் கொப்பிழந்துதான் பாய்வார்கள், பாய்கின்றார்கள்!

இது இந்திய காங்கிரசுகளுக்கும் பொருந்தும.!

இடதுசாரி கட்சிகளின் கொள்கை குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளது ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டார்.

 

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து கொண்டு 18.வது அரசியல் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பபடும் என அக்கட்சி அறிவித்துள்ளது.இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் பராளுமன்ற உறுப்பினர்கள் முன்னதாகவே கொடுத்த இராஜினான கடிதங்களையும் பயன்படுத்தக்கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 18.வது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதன் மூலம் பேராசிரியர் திஸ்ஸவிதாரன,டி.யூ குணசேகர,வாசுதேவ நாணயக்கார,தினேஸ் குணவர்தன ஆகிய இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் தமது கொள்கைகளைக் குழித்தோண்டி புதைத்துள்ளதாவும், அரசாங்கத்திற்கு தமது ஆட்சியின் மீதே நம்பிக்கை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஆட்சியின் இடைநடுவில் மக்களின் செல்வாக்கை இழந்து விடுவோமோ என்ற அச்சத்தினாலேயே மூன்றாவது தடவையான ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து யோசிக்கின்றது. அத்துடன் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கும் வகையிலான புதிய திருத்தத்திற்கு ஆதரவளித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் திஸ்ஸ அத்தநாயக்க கூறினார்.

இடதுசாரிகளுக்கு யூ.என்.பி. என்பது ‘சிம்மசொற்பமே’! தற்போது அது நேரெதிராகி இடதுசாரிகளை கிண்டலடிக்கிறது. இந்நிலைக்கு காரணம் இவர்களின் கடந்தகால மக்கள்-விரோத நடவடிக்கைகளும், அரசியல் சந்தர்ப்பவாதமுமே!

இது மக்கள் மத்தியிலிருந்து அன்னியப்பட்டதால் ஏற்பட்ட வினை!

இது உந்த புரட்சி முகாம்காரர்களுக்கும் பொருந்தும். இவர்கள் கடந்த தேர்தலில் (அகில இலங்கையில்) வெறும் 900-வாக்குகள் எடுக்க பட்டபாடு!

இதில் மகாசபை பரவாயில்லை! இணையதளங்கள்தான் இப்போ இவர்களின் ‘புரட்சிகரத் தளம்’ அரசிற்கு எதிராக ஓர் பத்து போஸ்ரல் ஒட்டத் தெரியாதவர்கள், இணைய தளங்களில் பின்னூட்டங்கள் அல்லவா வெட்டி ஒட்டுகிறார்கள்!

இதில் மத்தியகுழுக் கூட்டத்தையும் அல்லவா நடாத்தி விடுகின்றார்கள்!

சரி இதிலாவது நடக்கட்டும் புதிய ஜனநாயகப் புரட்சி!’

அகிலன்