Sat04202024

Last updateSun, 19 Apr 2020 8am

விலை கொடுத்த வீரமகிந்தன் தொடர் துடுப்பெடுத்தாட, விலை போனதுகள் பந்து வீசப்போகுதுகள்!

 

செய்தியும் செய்திக்கண்ணோட்டமும் 15-09-2010

 

விலை கொடுத்த வீரமகிந்தன்  தொடர் துடுப்பெடுத்தாட,

விலை போனதுகள் பந்து வீசப்போகுதுகள்!

ஆம்! கடந்தவாரம் மகிந்த குடும்பத்தினருக்கு, விலைபோன விபச்சார அரசியலாளர்கள், மகிந்தாவை ஓர் பாசிஸ்ட் வீரன் ஆக்கியுள்ளார்கள். இந்தவீரன்--இனி--மக்கள்மேல் (‘பாசிஸ-சர்வாதிகாரப்’) துடுப்பெடுத்தாட, இதுகள் பந்து வீசப்போகுதுகள்!.  இந்த பாசிஸ்ட்-- இவ்விபச்சார அரசியலாளர்களின் நடவடிக்கைகளால் திமிர் கொண்டெழுந்துள்ளான். இப்போ இலங்கையில் எனக்கு நிகரான எப்பலம் கொண்ட எவருமிலை என எக்காளமிட்டு என்னதான் சொல்கின்றான்.

 

"வலிமையான எதிர்க் கட்சி வேட்பாளரை நிறுத்தும் வரை நான் போட்டியிடுவேன்" - பத்திரிகை ஆசிரியர்களிடம் ஜனாதிபதி தெரிவிப்பு.

எதிர்க் கட்சியினர் வலிமையான வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் வரை எதிர்காலத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல்களிலும் தான் போட்டியிடவுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ச தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஆசிரியர்களுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

18-வது அரசியல் திருத்தத்தின் மூலம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க கூட, எதிர்காலத்தில் ஜனாதிபதியாக வரலாம். அவர் கூட பத்திரிகையாளர் சந்திப்பில என்னதான் சொன்னார்:

புதிய அரசியலமைப்பின் கீழ் ஜனாதிபதியின் பதவியினை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் ஜனாதிபதியாக போட்டியிடுவீர்களா? என அவரிடம் கேட்கப்பட்டபோது தாம் அதிகாரத்திற்கு ஆசைப்பட்டவள் அல்ல எனவும், மகிந்த ஆட்சியில் அந்நோக்கம் கொள்ளக்கூடாதெனவும் சொல்கின்றார்!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டு வருட ஆட்சி தொடர்பாக சந்திரிகாவிடம் கேட்டபோது, அது தொடர்பாக தாம் பதிலளிக்க விரும்பவில்லை என்றும் பதிலளித்தால் தமக்கு வெள்ளை வாகனம் அனுப்பப்பட்டு விடும் என குறிப்பிட்டுள்ளார்.

இது எதைத்தான் காட்டுகின்றது?.  இலங்கைச் சமூகம் போராட வக்கற்ற வலிமையற்ற சமூகமாகிவிட்டதா?.  புலிகள் ஓழிக்கப்பட்டபின் மகிந்த-ரசிகர்கள், அவரின் அடிமை-குடிமைகளான—ஜனநாயக நீரோட்டங்கள், இன்னும் இன்னோரன்ன தன்னார்வங்கள் போன்றதுகள், மகிந்தா—மகிந்த சிந்தனைபற்றி, கேள்வி-ஞானத்தில் இருந்து பற்பலதை கவிட்டுக் கொட்டினார்கள். பயங்கரவாதம் முடிந்தது!.  அடுத்தது அரசியல் தீர்வுடன் கூடிய, அசலான அபிவிருத்திகள் என்றார்கள். மகிந்தாவிடம் பேட்டி கூடக் கண்டார்கள். நான் ஒரு தரம் சொன்னால் நூறு தரம் சொன்னதற்கு சமன் எனச் சொல்ல வைத்தார்கள், ஆனால் மகிந்தப் பேரினவாதம் தன்னுள் ஓர் ஓழுங்காற்றலைக் கொண்டிருந்தது. அதைச் செயற்படுத்த ஓடு மீன் ஓடி உறுமீன் வருமளவும் காத்திருந்தது! அந்தக் ‘காத்திருந்தல்’ வீண்போகவில்லை. ஒன்றல்ல பல உறுமீன்கள் தூண்டில்-வலையின்றி தானாக வந்து சேர்ந்தன மகிந்தத்-தடாகத்தில்!.  இதன் விளைவு……?

இன்று இலங்கையில் வலுவுள்ள எதிர்க்கட்சி உள்ளதா? இல்லையா?. அப்போ அது வரை எமது குடும்பாட்சி தான் என்கின்றது. இவ் அரசப்பயங்கவாத ஆட்சி. பானையில் உள்ளது தான் அகப்பையில் வரும். ஒரு சமுதாயம் எந்நிலையில் உள்ளதோ, அதுவே கட்சிகளிலும் இருக்கும், வரும!.  அத்தோடு சமகால—சர்வதேச—தேசிய நிலவரங்களும் அதுதான் ஏகாதிபத்திய-முதலாளித்துவ சக்திகள் கடந்தகாலப் புரட்சிகள், சமுதாய மாற்றப் போராட்டஙகளில் படித்த பாடங்களை,  மூல—தந்திரோபாயங்கள் கொண்டு இவைகளை (புரட்சிகர வெகுஜனப் போராட்டம்) இல்லாமல் செய்ததில் பெரும்வெற்றி கண்டுள்ளது.

இது இலங்கையிலும் தொடரும் தொடராயே உள்ளது. கடந்த 3-தசாப்தங்களாக புலி—மகிந்த பாசிச ஆதரவு—எதிர்ப்புப் போரில், வாழ்வுண்ட எம் சமுதாயத்திற்கு, சமகால இலங்கையில் புரட்சிகரசக்திகள்--புரட்சிகர வெகுஜனப்போர் பற்றி தெரிந்து கொள்ள நியாயமில்லைத் தான்!  இதை விரைந்து செய்யவேண்டிய புரட்சிகரமுகாமென்பதும் முடங்கி-சுருங்கியேயுள்ளது!  இதற்கேற்ப அது நான்கு சுவர்களுக்குள்ளேயே தூங்குகின்றது. ஓர் அரச-எதிர்ப்புப் போஸ்ரலைக்கூட எப்படி ஓட்டுவதென்பதற்குக் கூட வகுப்பெடுக்கவேண்டும் போலுள்ளது!.  இது கிண்டல் அல்ல, இன்றைய வரலாற்றுச் சூழலில் இவர்கள் நிலை இது! இப்போக்கு உள்ளவரை மகிந்தா வலிமையானவன்தான்!

எனவே இது தற்காலிகமானதுதான். பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கேற்ப, சரியான சமுதாய இயங்கு சக்திகளுக்கு, சிவில் சமுதாய, புரட்சிகர வெகுஜனப்போராட்ட சக்திகளுக்கு, அமைப்புக்களுக்கு புதுஇரத்தம் பாய்ச்சப்படவேண்டும்! இதற்கூடாக வளரும்--புரட்சிகர-வெகுஜன சக்திகளே எதிர்கால—எம் சமூகத்திற்கான—சமூக மாற்றத்திறகான பலமான இயங்குசக்தி! இதை நோக்கி நகர்வது இன்றைய காலத்தின் கட்டாயம்!

மேலும் 18-வது திருத்தத்திற்கு எதிரான இடுக்கைகள்:-

இலங்கை ஜனநாயகத்தின் இறுதி கிரியைகள் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ளது ‐ விஜித ஹேரத

இலங்கை ஜனநாயகத்தின் இறுதி கிரியைகள் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ளதை தாம் மிகுந்த வேதனையுடன் மக்களுக்கு அறிய தருவதாக ஜனநாயக தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜே.வீ.பீயின் பிரசார செயலாளருமான விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார். ஜனநாயகத்தின் இறுதி ஊர்வலம் நடைபெறும் இன்றைய தினத்தில் இறுதி கிரியைகள் குடும்ப மயானத்தில் நடைபெறவுள்ளது. ஜனநாயகத்தை புதைக்கும் பாவத்தை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் இதனால், 18வது அரசியலமைப்புத் திருத்த யோசனைகளுக்கு எதிராக இன்று வாக்களிக்க போவதாகவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அரசியலமைப்புத் திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும் இது மக்களை பாதிக்கும் பிரச்சினை என்பதால், எதிர்காலத்தில் பாரிய அனர்த்தங்கள் நிகழக்கூடும். இன்னும் சிறிது காலத்தின் பின்னரே 18வது அரசியலமைப்புத் திருத்ததின் கெட்ட பலன்களை அனுபவிக்க வேண்டியேற்படும். மக்கள் அமைதியாக இருக்காது, சர்வாதிகார அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் சர்வாதிகார அரசாங்கத்தை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பி வைப்பதற்காக தலையீடுகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுப்பதாகவும் விஜித ஹேரத் கூறியுள்ளார்.

உத்தேச திருத்தச் சட்டமூலம் எதிர்பார்ப்புக்களை வெறுமனே தகர்த்து விடுவது மாத்திரமல்ல, பாரியளவிலான அச்சத்தைத் தோற்றுவிக்கவும் வழி வகுத்துள்ளது‐ சூர்யா விக்ரமசிங்
சுதந்திரத்திற்கப் பின்னரான முதல் அரசியல் யாப்பில் பாதுகாப்பளிக்கப்பட்டுள்ள ஜனநாயக விழுமியங்கள் அழிவடைந்து வருவதனை நாம் காண்கிறோம். ஆயுதப் பிணக்கின் முடிவானது நியாயமான சமாதானத்தை ஏற்படுத்தி ஜனநாயகம் மற்றும் அபிவிருத்திக்கு வலுவூட்டும் என்ற பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அரசியல் யாப்பிற்கான உத்தேச திருத்தச் சட்டமூலம் அவ்வெதிர்பார்ப்புக்களை வெறுமனே தகர்த்து விடுவது மாத்திரமல்ல, பாரியளவிலான அச்சத்தைத் தோற்றுவிக்கவும் அது வழிவகுத்துள்ளது என சிவில் உரிமைகள் இயக்கத்தின் கௌரவ செயலாளர் சூர்யா விக்ரமசிங்க விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: ஜனாதிபதியின் அதிகாரப்பரப்பில் ஏற்படுத்தப்பட்ட பாரிய மாற்றங்கள் "அவசரம் மிக்க தேசிய நலன்கருதியதாக" அவசரமாகக் கொண்டு வரப்பட்டுள்ளது. ஓகஸ்ட் 30ஆம் திகதி திங்கட்கிழமையன்று இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் இவ்வாலோசனைகள் அங்கீகரிக்கப்பட்டு உடனடியாக உச்ச நீதிமன்றிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது. இச்சட்டமூலத்தை "அவசரம் மிக்க தேசிய நலன்கருதியதாக" நாம் கருதவில்லை. இத்தகைய சான்றளிப்பானது உச்சநீதிமன்றம் தனது கருத்தைக் கூறுவதற்கு வெகு சொற்ப கால அவகாசத்தையே வழங்குகிறது. அத்துடன் இதில் பொதுமக்கள் எவரும் இடையீடு செய்து அவர்கள் சார்பில் பிரதிநிதித்துவம் செய்யப்படும் சந்தர்ப்பமும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச்சட்டமூலத்தின் மீதான விவாதம் செப்டம்பர் எட்டாம் திகதியன்று புதன்கிழமை அன்று முடிவுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பத்து நாட்களில் இடம் பெறுகின்றன. அரசியல் கட்சிகள் சிவில் சமூகக் குழுக்கள் அக்கறை கொண்ட பிரஜைகள் மற்றும் ஊடகங்கள் இச்சட்டமூலத்தின் ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடவும் அல்லது அதன் உள்ளடக்கம் மற்றும் எதிர்கால அரசாங்கம் பற்றி தமது அபிப்பிராயங்களை வெளியிடவும் போதுமான கால அவகாசத்தைக் கொண்டிருக்கவில்லை. இது குறித்து பகிரங்கக் கலந்துரையாடலை மேற்கொள்வது மக்களின் ஒரு அடிப்படையான உரிமையாகும். இதனை மறுப்பது பிரஜைகளின் உரிமையையும் பொது நலனையும் உதாசீனப்படுத்துவதையே குறிக்கிறது.

மசோதாவுக்கெதிரான பிரதான ஆட்சேபனைகள்

அ. நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து அரசியல் யாப்பு விதித்துள்ள வரையறையை இல்லாமல் செய்வதற்கு முயல்கிறது.

ஆ. உச்ச நீதிமன்றம்இ மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் சுதந்திரத் தேர்தல் பகிரங்க சேவை, அரசியல், நீதிச்சேவைகள் மற்றும் மனித உரிமைகள், ஆணைக்குழுக்கள் என்பவற்றுக்கு பொருத்தமான உறுப்பினர்களை நியமித்தல் அல்லது அங்கீகாரமளித்தல் என்பவற்றுக்குப் பொறுப்பான அரசியலமைப்புச் சபைகளின் பணிகளை இல்லாமற் செய்யுமளவிற்கு மட்டுப்படுத்தி அதன் அதிகாரத்தைச் செயலிழக்கச் செய்தல்.

1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்பில் நிறைவேற்றதிகாரமிக்க ஜனாதிபதி மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியாத வகையில், அவருக்கு விடுபாட்டு உரிமையுடன் ஏறக்குறைய முழுமையான அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன. இது சிறந்த ஆட்சிக்கு அவசியமான பிரதான விடயங்களில் அழிவு ஏற்படுவதற்குப் பங்களிப்புச் செய்துள்ளது. பொலிஸ் பொதுச் சேவை போன்ற சட்டத்தை அமுலாக்கும் நிறுவனங்களில் ஏற்படுத்தப்புடும் அரசியற் தலையிடு மற்றும் சட்ட நிர்ணய சபைக்கான தேர்தல்கள் நடைபெறும் விதம் என்பன இதற்கான நடைமுறை ரீதியான சான்றுகளாகன உள்ளன. இந்தக் காரணங்களுக்காக கடந்த பல வருடங்களாக பல அரசியற் கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் முறைமையை ஒழிப்பதற்கான செயற்பாடுகள் இடம்பெற்றிருந்தன. 2005ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மகிந்த சிந்தனையிலும் இது உள்ளடங்கியிருந்தது!

**********

18 ஆவது  அரசியல் சீர்திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து அக்குறணையில் பேரணி :

அக்குறணை பிரதேச சபை அங்கத்தவர்கள் 18ஆவது அரசியலமைப்பு திருத்தத்துக்கு ஆதரவளித்து அக்குறணை நகரில் இன்று பிற்பகல் பேரணியொன்றை நடாத்தினர்.

அக்குறணை பிரதேச சபையின் தலைவர் (ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்) ஏ.எம்.எம். சிம்சான் தலைமையில் இடம்பெற்ற இக்கவனயீர்ப்பு பேரணியில் பிரதேச சபையின் உறுப்பினர்கள் உற்பட பிரதேசவாசிகளும் கலந்து கொண்டனர். சுமார் 30 நிமிடங்கள் வரை இப்பேரணி இடப்பெற்றது.

மகிந்தாவிடம் பெற்றவற்றிற்கு இந்த 30-நிமிடப் பேரணி போதுமோ? எனிமேல் உங்களுக்குத் தானே தொடர் அதிஸ்டம்!.  18-ஆவதற்கு  பேருதவி செய்தவர்களுக்கு விஷேட கவனிப்புக்கள்--சலுகைகளாம்!. நீங்கள் இந்த தொடர் விஷேடத்தைப் பெற்றிட,  கிழக்கின் விடிவெள்ளிகள் வெருளப்போகின்றார்களே?.  முந்தி வந்த ‘கொம்பை’ சீ.!. செவியை பிந்திவந்த ‘கொம்புகள்’ மறைக்கின்றன என!.  அவர்களையல்ல உங்களை மறைப்பதற்கும் இன்னும் பல ‘கொம்புகள்’ வரவுள்ளன. காரணம் உங்களைவிட சோரம் போகின்ற அரசியலாளர்களும், அரசியலும் இனிமேல்தான் கொடி கட்டிப் பறக்கப்போகுது!

**************

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இடதுசாரி கட்சிகள் உழைக்கும் மக்களை ஏமாற்றியுள்ளது ‐ விக்ரமபாகு

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இடதுசாரி கட்சிகள் உழைக்கும் மக்களை ஏமாற்றியுள்ளதாக புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். 18வது அரசியலமைப்புத் திருத்ததிற்கு ஆதரவு வழங்கியதன் மூலம் இது உறுதியாகியுள்ளது.
அரசாங்கத்தில் உள்ள இடதுசாரிகள் அரசியலமைப்புத் திருத்தங்களுக்கு ஆதரவு வழங்கியுள்ளமையானது மறைமுகமாக சர்வதேச முதலாளிதுவ தரப்பினருக்கு ஆதரவு வழங்குவதாகும் எனவும் விக்ரமபாகு கூறியுள்ளார். கொழும்பில் நேற்று மக்களை தெளிவுப்படுத்தும் துண்டு பிரசுரங்களை விநியோகிக்கும் நிகழ்வில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இவர்கள், இலங்கை அரசியலில் காலாவதியாகிய—திரிபுவாதிகளாகி, அரை நூற்றாண்டாகி விட்டது!.  காலத்திற்கு காலம் பேரினவாதிகளிடம் மடிப்பிச்சை எடுப்பதே இவர்களின் ‘இடதுசாரித்’ தொழில். தற்போது ஓர் ‘இடதுசாரிக்’ கட்சியின் செயலாளர்--.அத்துடன் அவர் மகிந்த மந்திரிசபையில் ஓர் ‘மந்தி(ரி)’யும் கூட,  இவர் யாழ்ப்பாணத்தில்  272-மில்லியன் ருபா செலவில், 1000-பேரை சிறைவைக்கக்கூடிய புதிய சிறைச்சாலையொன்று அமைக்கப் போகின்றார். இத்தனைக்கும் இவர் புனர்வாழ்வு அமைச்சருமாம்!.  இப்போ இந்த “முற்போக்கு இடதுசாரித் தோழரின்” பிரதான வேலை புதுச் சிறைச்சாலை அமைத்து, அதில் யாழ் மக்களை சிறை பிடித்து வைத்து அழகு பார்ப்பதே!  இவரின் இந்தப் புனருத்தாரனத்தை—புனர்வாழ்வு அரசியலை என்னே என்பது! சிறைச்சாலை என்பது, மக்களை அடக்கி—ஒடுக்கும் அரசு இயந்திதத்தின் ஓர் அங்கம்! இவருக்குஅரசு--அரசு இயந்திரம் பற்றிய புரிதல் இருக்குமோ தெரியாது? குறைந்தது இவர்களுக்கு செக்கிற்கும் சிவலிங்கத்திற்குமாவது வித்தியாசம் தெரியுமா? தெரிந்தால் ஏன் இந்த இடர்பாடு!

**********

கே.பி யை செவ்வி காணஇ பிபிஸி விடுத்த கோரிக்கைக்கு கோத்தபாய மறுப்பு

கே.பி என அழைக்கப்படும் தம்பையா செல்வராஜா பத்மநாதனை செவ்வி காண பிபிசியின் சிங்கள சேவையான சந்தேசிய விடுத்த கோரிக்கையை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய  ராஜபக்ச நிராகரித்துள்ளார்.

23 கேள்விக்கொத்துக்களுடன் இந்த செவ்விக்கான கோரிக்கையை பிபிசி சந்தேசிய விடுத்திருந்தது.

எனினும் இலங்கை அரசாங்கத்திற்கு விரோதமான வானொலிக்கு செவ்வி வழங்க தாம் இணங்கப்போவதில்ல என கோத்தபாய தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏதோ உங்களின் உண்மையைக் கணடறியும் சபையோ—குழுவுக்கு முன்னால்  சாட்சியமளிக்க வருமாறு சர்வதேசத்தை அறைகூவி அழைக்கினறீர்கள்.  ஏன் உங்களின் பொக்கிஷமான உந்தக் கே.பி.யை ஓர் பேட்டிகாண விட்டால் என்ன? 23-கேள்விகளில் 4--5-கேள்விகளில் உங்கள் உண்மைகள் வெளிவந்துவிடும்! கே.பி.யின் அண்மைக்கால பேட்டிகளைத் தொகுத்து கூட்டிக்-கழித்தால் மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் கன சங்கதிகள் உண்டு. தன்னை முதன் முதலாக பார்த்தபோது (தான் என்னவோ நினைக்க)  நீங்கள் (சலூட் அடித்து) ராஜமரியாதை செய்தீர்களாம்?.  உங்களைச் சந்தித்த ராஜதந்திரிகளே ஆச்சரியப்படுகின்றார்கள், உங்கள் பொக்கிஷத்தின் பேட்டி கண்டு!.  மலிந்தால் எல்லாம் சந்தைக்கு வரும்தானே! தங்களின்  கொள்வனவில் ‘துர்நாற்றம்’ பிடிக்கப்போகும் சரக்குகள் எல்லாம் வெகு விரைவாக சந்தைக்கே வரும்!

*******

 

வந்திட்டான் ஐயா வந்திட்டான்!


கோமாளி திரும்பலும் வந்திட்டான் ஐயா வந்திட்டான்!

பொன்சேகாவிற்கு நடந்ததுதான் உங்களுக்கும் நடக்கும் என ஊடகங்களை மிரட்டுகின்றார் மேர்வின்.

சில ஊடகங்கள் என்னை விமர்சிப்பதையே தொழிலாக கொண்டுள்ளது. ஊடகவியலாளர்கள் மக்களுக்கு நல்ல செய்திகளை கொண்டு செல்லவேண்டிய புனிதப் பணிக்கு மாறான செயற்பாடுகளை செய்கின்றனர். இவ்வாறானவர்களுக்கு சரத் பொன்சேவிற்கு நடந்துள்ள விடயமே நடக்கும் என்பதை நான் மிக துணிவுடன் சொல்கின்றேன், என மிரட்டல் விடுத்துள்ளார்.

மகாராஜா பறையன். அவனுக்கு மீண்டுமொரு பாடம் புகட்டவுள்ளளேன். மேர்வின்.

சிரச தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் மகாராஜா ஓர் பறையன் எனவும் அவருக்கு மீண்டுமொருமுறை பாடம்புகட்டவுள்ளதாகவும் முன்னைநாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

தான் அமைச்சுப்பதவியிருந்து நீக்கப்பட்டதான செய்தியை சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக தொலை க்காட்சிகள் ஒளி பரப்பியதாகவும், அவற்றில் தான் ரூபவாகினி தொலை க்காட்சி ஊழியர்களிடம் அடிவாங்கிய காட்சிகளும் காண்பிக்கபட்டதாகவும் கூறிய அவர், அவற்றை தெரண போன்ற ஊடகங்கள் ஒளிபரப்பியமையே கவலை தருவதாகவும்,  மகாராஜாவின் நிறுவனங்கள் ஒளிபரப்பியதையிட்டு கவலை இல்லை எனவும் கூறியுள்ளார். அத்துடன் இவ்வூடகங்களுக்கு வேண்டுமானல் தான் சிறுவயதில் நிர்வாணமாக நின்ற படங்களும் உண்டெனவும் அவற்றையும் பிரசுரிக்குமாறும் மிரட்டுகின்றர்.

நேற்று 18ம் திருத்தச் சட்டம் பாராளுமன்றில் நிறைவேறிய பின்னர் அவரது பிரதியமைச்சர் பதவி மீண்டும் அளிக்கப்பட்டது. பிரதி அமைச்சுப் பதவி மீண்டும் கிடைத்ததை அடுத்து களனியப் பிரதேசத்தில் தனது ஆதரவாளர்களுடன் பால்சோறு பகிர்ந்துண்டு மகிழ்ந்தார் மேர்வின் சில்வா.

பின்னர் ஊடகவியலாளர்ளுடன் பேசிய அவர், சில ஊடகங்கள் என்னை விமர்சிப்பதையே தொழிலாக கொண்டுள்ளது. பத்திரிகை ஒன்று என்னுடை செய்திகளாலேயே விற்பனையாகின்றது. ஊடகவியலாளர்கள் மக்களுக்கு நல்ல செய்திகளை கொண்டு செல்லவேண்டிய புனிதப் பணிக்கு மாறான செயற்பாடுகளை செய்கின்றனர்.

இவ்வாறானவர்களுக்கு சரத் பொன்சேவிற்கு நடந்துள்ள விடயமே நடக்கும் என்பதை நான் மிக துணிவுடன் சொல்கின்றேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.

உயர்தரப் பரீட்சை எழுதாமல் கலாநிதியாகிய மேர்வின்  ---பௌத்த தேரர்

நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா, கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையில் சித்தியெய்தவில்லை. எனினும் அவர் கலாநிதி பட்டத்தை பெற்றுக்கொண்டார் என பௌத்த பிக்கு ஒருவர் தெரிவித்துள்ளார். மேர்வின் சில்வா எஸ்.எஸ்.சி. பரீட்சை எழுதிக்கொண்டிருந்தபோது அதனை விட்டுவிட்டு விண்வெளிக்கு சென்ற முதல் ரஷ்யர் யூரி ககாரின் வந்த ஹெலிகொப்டரை பார்க்கச் சென்றுவிட்டார்.  அதன் காரணமாக  பரீட்சையை எழுதாமல் சிறப்பான சித்தியை பெறத்தவறி விட்டார் என்றும்  தேரர் மேலும் குறிப்பிட்டார்.

**********

அரசமைப்புத் திருத்தத்திற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிப் பிரசாரம் - ஜே.வி.பி. உறுப்பினர்கள் இருவர் கைது

அரசமைப்பு திருத்த சட்ட மூலத்திற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிப் பிரசாரத் தில் ஈடுபட்ட ஜே.வி.பி. உறுப்பினர்கள் இரு வர் யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றுக் காலை 5.30 மணியளவில் இக் கைது இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன. ஒன்றாகப் போராடுவோம், அரசமைப்புத் திருத்தத்தை எதிர்ப்போம் என்கின்ற தலைப்புகளிலான சுவரொட்டிகளை பஸ் நிலையப் பகுதியில் இவர்கள் ஒட்டிக் கொண்டிருந்தபோதே யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையப் பொலிஸார் கைது செய்திருக்கின்றார்கள்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஜே. வி.பியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரான லலித் (வயது-29)எனத் தெரிவித்த பொலிஸார், மற்றைய நபரின் பெயரை வெளியிடமறுத்து விட்டனர். கைது செய்யப்பட்ட இருவரும் யாழ். நீதவான் நீதிமன்ற நீதிவான் கேசவன் முன்னிலையில் பொலிஸார் ஆஜர்படுத்தினர். இது குறித்து விசாரணை செய்த நீதிவான், அவர்களை விடுதலை செய்ததுடன் எதிர்வரும் 8 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறும் உத் தரவிட்டார்.

இதைத்தானே சொன்னேன். இதற்கும் அரசியல் வகுப்புத் தேவையென! அச்சடிப்பேன்? கைவண்ணம் கொண்டெழுதியதை, கர்ச்சிதமாக, செய்ய ‘றெயினிங்கும்’ தேவையென!

************

டிஆர் பாலு தமிழரோ… இந்தியரோ அல்ல… சிங்களவர்! – தாமரை

இலங்கை விஷயத்தில் இந்தியா போலீஸ்காரனாக நடந்து கொள்ள முடியாது என்று கூறியுள்ளார் திமுக எம்பி டி ஆர் பாலு.

இதற்கு பதிலடி தந்துள்ள கவிஞர் தாமரை, “இந்தியாவால் போலீஸ்காரனாக நடந்து கொள்ள முடியாது. ஆனால் கொலைகாரனாக மட்டும் நடந்து கொள்ள முடியுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.  “இலங்கையில் உள்ள தமிழர்களின் மறுவாழ்வுக்கு ஏற்கனவே இந்திய அரசு 500 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ள நிலையில், அங்கு எதிர்பார்த்த அளவிற்கு மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது வருத்தமளிக்கிறது.

இத்தகைய நிலையில் இலங்கை அரசு தமிழர் பகுதிகளில் மேற்கொண்ட மறுவாழ்வுப் பணிகளையும், பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள உண்மையான நிலைமையையும் கண்டறிய இந்திய அரசு சிறப்பு தூதரை இலங்கைக்கு அனுப்பி கண்காணிக்க வேண்டும்..”

-இப்படி ஒரு கோரிக்கையை வைத்து கடந்த ஜூலை 17-ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, கடிதம் எழுதினார் தமிழக முதல்வர் கலைஞர்.   இதன்பேரில் இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்த நிலையில்…கொழும்பிலிருந்து வெளியாகும் ஒரு தமிழ்ப் பத்திரிகைக்கு, தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு அளித்துள்ள பேட்டியில்:

“யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இந்தியா தனது உதவிகளைத் தொடரும். ஆனால், அந்த உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் போலீஸ்காரன் வேலையை இந்தியாவால் செய்ய முடியாது,” என தனது தலைவர் கருணாநிதிக்கே பதிலடி கொடுத்திருக்கிறார்.

ஆயிரக்கணக்கான கோடிகளை இந்திய மக்களின் வரிப்பணத்திலிருந்து இலங்கைக்கு வாரியிறைத்திருக்கும் நிலையில்…, ‘அந்த பணத்தை எப்படி வேண்டுமானாலும் சிங்களன் செலவழிக்கட்டும். அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை’ என்கிற ரீதியில் பாலு சொன்னது “ ஈழத் தமிழ் உணர்வாளர்களை” கொந்தளிக்க வைத்திருக்கிறது.


டிஆர் பாலு தமிழரா… இந்தியரா… சிங்களவரா?

டி.ஆர்.பாலுவின் இந்த பேட்டி பற்றி பேசிய கவிஞர் தாமரை  “தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தமிழரா, இந்தியரா என்ற குழப்பம் அவருக்கே இருக்கும். இதில் எந்தக் குழப்பமும் தேவையில்லை. அவர் தமிழரோ, இந்தியரோ அல்லர்,  அசல் சிங்களவர் என்பதைத்தான் அவர் அளித்துள்ள பேட்டி வெளிப்படுத்துகிறது.

போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு இந்தியா வழங்கும் உதவிகள் பாதிக்கப்பட்ட தமிழர்களைச் சென்றடைகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் போலீஸ்காரனாக இந்தியா செயல்பட முடியாது என்றும், வடக்கு-கிழக்கு மாகாணங்களில் சிங்கள இராணுவ குடியிருப்புகள் அமைப்பது தொடர்பாக ஆதாரமில்லாமல் குறைசொல்ல முடியாது என்றும் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்.

அவரது இந்த பேட்டி நமக்கு மட்டுமல்ல, அவர் சார்ந்திருக்கும் தி.மு.க. தலைமைக்கே வியப்பை அளித்திருக்கக் கூடும். அப்படி இல்லையென்றால் எல்லோரும் சேர்ந்து நாடகமாடுகிறார்கள் என்ற முடிவுக்குத்தான் வரவேண்டும். இந்திய உதவிகளை கண்காணிக்க சிறப்பு தூதரை அனுப்பவேண்டும் என தமிழக முதல்வர் வலியுறுத்துகிறார். ஆனால் இது போலீஸ்காரன் வேலை என டி.ஆர்.பாலு சொல்கிறார்.

வடக்கு கிழக்கு பகுதிகளில் இராணுவ குடியிருப்புக்கள் அமைக்கப்படுவதை நடுநிலையாளர்கள் பலரும் வெளிப்படுத்தி உள்ளனர். தமிழர் பகுதிகளில் புதிய புதிய இராணுவ பாசறைகள் அமைக்கப்பட்டு வருவதையோ, பழைய உயர் பாதுகாப்பு வலயங்கள் நீடித்து வருவதையோ சிங்கள அரசே மறுக்கவில்லை. ஆனால் டி.ஆர்.பாலு இதற்கு ஆதாரம் வேண்டுமென்று கேட்கிறார். இவரும் இவரது குழுவினரும் ராஜபக்சேவின் விருந்தாளிகளாக இலங்கை சென்றபோது போய்ப் பார்த்திருந்தால் ஆதாரங்கள் கிடைத்திருக்குமே?

இப்போதும் கூட சுயேச்சையான ஒரு ஊடகவியலாளர் குழுவை எவ்வித தடையும்இ தணிக்கையுமின்றி தமிழர் பகுதிகளை சுற்றிப் பார்க்க அனுமதி வாங்கித் தரட்டுமே… அப்படி அனுமதி வாங்கித் தந்தால், நானே நேரில் சென்று உண்மைகளைக் கண்டறிந்து மக்களுக்கு சொல்லத் தயாராக இருக்கிறேன். டி.ஆர்.பாலுவின் கூற்றுப்படி இந்தியாவால் போலீஸ்காரனாக செயல்பட முடியாது என்றால், கொலைகாரனாக மட்டும்தான் செயல்பட முடியுமா?” என்று காட்டமாகக் கேட்டார்.

‘பசில்தான் கிங்’

அதே பேட்டியில்இ டி.ஆர்.பாலு தெரிவித்திருக்கும் இன்னொரு கருத்து ஈழ உணர்வாளர்கள் மத்தியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

‘இலங்கை அமைச்சர் பசில் ராஜபக்சேவை சந்தித்துப் பேசினீர்களா?’ என்ற கேள்விக்கு

“ஆம். சந்தித்துப் பேசினோம். அவர்தானே இன்று ‘கிங்’ ஆக உள்ளார். அவருடன் பல விஷயங்கள் குறித்து கலந்துரையாடினோம். அது நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளது!” என கூறியிருக்கிறார்.

“ஈவிரக்கமின்றி தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவின் சகோதரர் பசிலை ‘கிங்’ என அழைக்கிறார் என்றால், டி.ஆர்.பாலுவின் உண்மையான மனநிலை என்ன என்பதை வெளிப்படையாக அறியமுடிகிறது. ஆக ராஜபக்சே குடும்பத்தினருடனும் அவர் நல்லுறவு கொண்டிருக்கிறார் என்பதையும் இந்த பதில் வெளிப்படுத்துகிறது!” என்கிறார்கள் தமிழுணர்வாளர்கள்!

ஆகா! சீறும் புயல்கள் சிறை சென்றாலும், செந்தாமரைகள் செந்தணல் கக்குகின்றனவே! தொப்புள் கொடி உறவுகளுக்கு தொந்தரவுகள் தொடர்ந்த வண்ணம் தான்! என்று தணியும் இந்த தொபபுள் கொடி மோகம்!

***********************

அமெரிக்க இரசாயன குண்டுகள் பலுஜா குழந்தைகளை ஊனமாக உருவாக்கிவருகின்றது: M.ரிஸ்னி முஹம்மட்

ஈராக்கின் பலுஜா போன்ற பயங்கர அமெரிக்க தாக்குதல்கள் நடைபெற்ற இடங்களில் உடல் ஊனத்துடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது  அமெரிக்க இராணுவத்திற்கும், இஸ்லாமிய போராளிகளுக்கும் இடையில்  மோதல்களின்போது அமெரிக்கா படு பயங்க இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளது  யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னரே பிறக்கும் குழந்தைகளில் அதிகமானது  உடற் குறைபாடுகளுடன் பிறப்பதாகத் ஈராக் மருத்துவ செய்திகள் கூறிவருகின்றது .

இந்த தாக்குதல்களில் பயங்கர இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியது அதன் பயங்க தாக்கங்களை, இன்று  பலுஜா மக்கள் அனுபவிகின்றார்கள். அன்பார், பலுஜா மற்றும் பல பிரதேசங்களில் வாழும் இளம் தம்பதியர்  பிள்ளைகளை பெற பயப்படுகின்றார்கள் இந்த பிரதேசங்களில் அமெரிக்க பயங்கரவாதம் பயன்படுத்திய இரசாயன ஆயுதங்களின் விளைவுகளை உடனடியாக அவர்களை கொன்று ஒழித்ததுடன் விட்டுவிடவில்லை தப்பியவர்களுக்கும் இவ்வாறான பயங்கர பாதிப்புகளை ஏற்படுத்திவருகின்றது  என்று குற்றசாட்டுகள் தொடர்ந்து தெரிவிக்க படுகின்றது.

******************

General James Mattis: ஆப்கானிஸ்தானில் மக்களை சுட்டு கொல்வது ஒரு மகிழ்ச்சி தரும் விளையாட்டு:

ஆப்கானிஸ்தான் அமெரிக்க படைகளுக்கு புதிய தளபதியாக ஒபாமாவினால் பெயர் குறிப்பிடபட்டுள்ள ஜெனரல் ஜேம்ஸ் மட்டிஸ்-General James Mattis- என்பவன் தெரிவித்ததாக இருதினங்களுக்கு முன்னர் -ஆப்கானிஸ்தானில் மக்களை சுட்டு கொல்வது ஒரு மகிழ்ச்சி தரும் விளையாட்டு- It’s fun to kill in Afghanistan- என்று தெரிவித்து தனது கொலை இரத்தவெறியை மிக சர்வசாதாரணமாக வெளிபடுத்தியுள்ளான்.

2004 ஆண்டு ஈராக் பலுஜா பிரதேசத்தின் மீது வெறித்தனமான தாக்குதல்கள் நடாத்தி பல ஆயிரம் உயிர்களை கொன்ற பலுஜா அமெரிக்க பயங்கரவாதப் படைக்கு தலைமை தாங்கியவந்தான் இந்த ஜெனரல் ஜேம்ஸ் மட்டிஸ். அன்று பலுஜா நகர் மீது இரசாயன குண்டுகள் வீசப்பட்டு பல ஆயிரம் முஸ்லிம்கள் மொடூரமான முறையில் அழித்தவன். இந்த ஜெனரல் ஜேம்ஸ் மட்டிஸ் அன்று பலுஜாவில் பல ஆயிரம் பேர் அழிக்கப்பட்டது குறித்தும் எத்தனை பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அன்றைய அமெரிக்க இராணுவ அமைச்சர் டோனால்டிடம் பத்திரிக்கைகாரர்கள் கேட்ட போது,  நாங்கள் பிணங்களை எண்ணுவதில்லை. என்று வெறித்தனமாக பதில் கூறி ஜெனரல் ஜேம்ஸ் மட்டிசை குற்றசாட்டுகளில் இருத்து பாதுகாத்தார் என்பதும் குறிபிட தக்கது. இன்று ஆப்கானிஸ்தான் அமெரிக்க படைகளுக்கு புதிய தளபதியாக ஒபாமா ஒபாமாவினால் பெயர் குறிப்பிட பட்டுள்ள இந்த பயங்கரவாதி ஜெனரல் ஜேம்ஸ் மட்டிஸ் ஆப்கானிஸ்தானில் எத்தனை கொடூரங்களை அரங்கேற்றபோகின்றான் என்பதைத் தான் முன்னோட்டமாக  கூறியுள்ளான். ஜெனரல் ஜேம்ஸ் மட்டிஸி கூற்றை, அவரின் ஆப்கானிஸ்தான் தளபதி நியமனத்தை பாதுகாக்கும் முகமாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ரொபேர்ட் கேட்ஸ் Robert Gates, இந்த கூற்று ஐந்து வருடங்களுக்கு முந்தியது என்று தெரிவித்து அமெரிக்க செனட் இவனின் நியமனத்தை நிராகரிப்பதில் இருந்தும் பாதுக்காக முற்பட்டுள்ளார்.

அகிலன்