Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

பசித்திருக்கும் மக்கள் கொதித்தால் பெரும்புயலாகும் அடக்குமுறை உடைந்து நொருங்கும்

இலங்கையில் எரிபொருட்களின் விலையை என்றுமில்லாதவாறு உயர்த்தி சாதனை படைத்துள்ளது இலங்கை அரசு. இதனைத் தொடர்ந்து இன்னும் சில தினங்களில் ஏனைய அத்தியாவசிய பொருட்களின் விலைகளையும் ஏற்றப்போகின்றது. இதன் மூலம் நாட்டின் சாதாரண மக்களிடமிருந்து பணத்தினை கொள்ளையிட்டு தானும் ஏகாதிபத்தியங்களும் பங்கு போடவுள்ளனர்.

 

இந்த அதிகரித்து வருகின்ற விலையேற்றங்களினால் இலங்கையில் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விலையேற்றத்தை எதிர்த்து போராடுபவர்களுக்கு மகிந்த பாசிச அரசு கொடுக்கும் பரிசு துப்பாக்கி சூடு மற்றும் படுகொலை. இப்படி செய்வதன் மூலம் மக்களின் போராட்ட எழுச்சியினை அடக்கி ஒடுக்கி விடலாம் என்று எண்ணுகின்றது சிங்கள இனவாத பௌத்த மதவாத மகிந்தாவின் அரசு.

எரிபொருள் விலை உயர்வால் பாதிக்கப்பட்டோர் பரவலாக போராட்டங்களை நடத்திவருகின்றனர். அவர்களின் போராட்டங்களை அடக்குவதற்க்காக இராணுவத்தினை ஏவிவிடுவதுடன்  மறுபுறம் மானியம் என்ற போர்வையில் எலும்புத்துண்டை எறிந்து போராட்டத்தை அடக்க முயற்சிக்கின்றது அரசு.

 

இன்று  ஓட்டு தொழிற்சாலை ஊழியர்கள் தமது ஊதிய உயர்விற்காக தொழிற்சாலையின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர், மலையக மக்கள் இந்த இலங்கை அரசின் மானியத்தில் கூட அவர்களுக்கு இடமில்லாது திண்டாடுகின்றனர்.

 

விலைவாசி உயரும் போது ஊதியமும் உயர்தல் வேண்டும் இல்லாவிடின் மக்கள் ஊதியத்தை உயர்த்தவென போராடுவார்கள். இப்போராட்டங்களை அரசு துப்பாக்கியை கொண்டு அச்சுறுத்தி நசுக்கிவிட முயற்சிக்கின்றது.

இலங்கையின் அனைத்து இனங்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும். அயல் வீட்டில் எரிகிறது என் வீடு தப்பித்து விட்டது என்று நினைக்காமல், நாளை என் வீடும் எரியும் என்று நினைத்து, எழுச்சி கொள்ளும் மக்கள் திரளுடன் சேர்ந்து போராடும் போது கடந்த காலங்களில் உள்ள ஜயப்பாடுகள் நீங்கி பரஸ்பரம் உறவுடனும், நம்பிக்கையுடனும் ஒரு இனத்தின் பிரச்சினையின் உண்மைத்தன்மை, நியாயங்களை மற்றைய இனம் புரிந்து கொண்டு அவற்றினை மதித்து ஜக்கியத்துடன் வாழ வழிசமைக்கும். இவ்வாறான ஜக்கியப்பட்ட மக்கள் திரளினால்தான், மக்களை அடக்கி ஒடுக்கி பிளவுபடுத்தி வைத்துக் கொண்டு ஒட்டச் சுரண்டும் எதிரிகளை ஓட ஓட ஆட்சியினை விட்டு தூக்கி எறிய முடியும்.

-சீலன் 22/02/2012