Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மூலத்திற்குள் காணியதிகாரம் இருக்காவென பிள்ளையான் பூதக்கண்ணாடி கொண்டு தேடுகின்றார்!

மூலத்திற்குள் காணியதிகாரம் இருக்காவென பிள்ளையான் பூதக்கண்ணாடி கொண்டு தேடுகின்றார்!

நகர- நாடு  திருத்தச் சட்டமூலத்தை முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்கிறது!

கடந்த வருடத்தின் சில மாதங்களில், மகிந்த சுபமுகூர்த்தங்கள், கூடிய வேளைகளில், அரசிற்கும்-கூட்டமைப்பிற்கும் இடையில் சுமூகமான பல பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இது வட-கிழக்கிற்கான காணி-பொலிஸ் அதிகாரத்திற்கு கிட்டவர, அது பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு உரித்தானதென எட்டிப்போயிற்று.

 

கிருஸ்னரின் தூது விடு விடயத்தின் போது இவைகளைக் கொடுப்பேனென அவருக்கு வாக்குறுதி கொடுக்கப்பட்டது. பின்பு பத்திரிகையாளர்கள் கேட்க, இது வாக்குறுதியல்ல, கலந்துரையாடல் எனப்பட்டது.

இப்போ இவையனைத்தும் இல்லாதாக்குவதற்கு  நகர-நாடு திட்டமிடலுக்கு, கட்டளைச் சட்டமாம்.

இதை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் “நாடு மற்றும் நகர திட்டமிடல் சட்ட மூலத்தை எதிர்ப்பது” என்ற தீர்மானத்தை ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டது.

பாரளுமன்ற தெரிவுக் குழு அமைக்கப்படவுள்ளதால் அவசர அவசமாக இச்சட்ட மூலம் கொண்டுவரப்பட வேண்டிய அவசியம் இல்லையென்றும் அக்கட்சி முடிவெடுத்துள்ளது.

 

கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில்  ஞாயிற்றுக்கிழமை கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாமில் காங்கிரஸின் அதியுயர் பீட கூட்டம் கூடியது. இதன் போதே நாடு நகர திட்டமிடல் சட்ட மூலத்தை எதிர்ப்பதாக தீர்மானிக்கப்பட்டது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் பாராளுமன்ற தெரிவுக் குழு அமைக்கப்படவுள்ளது. இதில் மத்திய அரசாங்கம் மற்றும் மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளது. இதன்போது இச்சட்ட மூலம் தொடர்பாக விவாதிக்க முடியும். அப்போது எமது கருத்துக்களையும் முன் வைப்போம். இதனை அரசாங்கம் ஆதரிப்பதால் பங்காளிக் கட்சியான நாமும் ஆதரிக்க வேண்டுமென்ற கடப்பாடு கிடையாது.

இச் சட்ட மூலமானது மாகாண சபைகளுக்கு உள்ள அதிகாரங்களை பறிப்பதாக அமைந்துள்ளது. சிறுபான்மை இன மக்கள் பாதிப்படையும் நிலை காணப்படுகிறது. எனவே எதிர்க்கின்றோம் என்கின்றது முஸ்லிம் காங்கிரஸ்  தவிரவும் இத் திருத்தச்சட்டமூலத்தில் – தாம் முன்வைத்துள்ள திருத்தங்களை மேற்கொண்டால், அதனை ஆதரிக்கப் போவதாக கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன் கூறியுள்ளார்.

மேல் மாகாணசபையில் இச்சட்டமூலத்தை ஆதரித்த முஸ்லிம் காங்கிரஸ், இப்போ இச்சட்டம் பாராளுமன்றத்திற்கு வந்தாலும் எதிர்ப்போம் என்கிறது. இச் சட்டமூலமானது மாகாண சபைகளுக்கு உள்ள அதிகாரங்களை பறிப்பதாக அமைந்துள்ளது. சிறுபான்மை இன மக்கள் பாதிப்படையும் நிலை காணப்படுகிறது என பகிரங்கமாகச் சொல்லியும், பிள்ளையான் தான் கேட்டவைகள் இம்மூலத்திற்குள் கிடக்காவென பூதக்கண்ணாடி கொண்டு தேடுகின்றார். இது அரசை ஆதரிக்கும் தொடர் முடிவிற்கான தேடலாகும்.

இதெல்லாம் இலங்கை அரசியலில், வடிவேலுவின் “வரும் ஆனால் வராது” எனும் றேஞ்சிற்குள் வைத்து, ஏனையவற்றிற்கும் “ம்-து”போன்று இன்னும் சில எழுத்துக்களை மாற்றினால் சாலப்பொருந்தும்.

சில மாதங்களுக்கு முன் சிவில் சமூகமென 71-பேர் கையெழுத்துப் போட்டு அறிககை விட,  தழிழ்மக்கள் மத்தியில், ஏதோ அரசியல் பிரளயம் ஏற்படப்போவதாக, சில ஊடகங்களில் பெரும் அதிரடி அறிக்கைகளும், அதற்கு பக்கபலம் கொண்ட பெரும் பின்னூட்ட விளாசல்களையும் பார்க்க முடிந்தது  கூட்டமைப்பு திருந்தாவிட்டால், அதற்கு மாற்றமைப்பு என்றார்கள்.

 

சென்றகிழமை இச்சிவில் சமூகக்காரர்கள் கூட்டமைப்பை கூப்பிட்டு, சமபந்தனிடம் என்னையா நாங்கள் கையெழுத்துப் போட்டதிற்கு எங்களுக்கோர் உண்மை தெரிந்தாகணும் எனக்கேட்டார்கள். சம்பந்தனும் வழமையாக சொல்வதுபோல் “நாம் தமிழ் மக்களைக் கைவிடமாட்டோம், தொடர்ந்தும் பேசப்போகின்றோம்” இது சத்தியம் என்றார்.

ஐயோ! உதுதான் என்றால், உதுதானே (இதை கையெழுத்தை போட்ட உடனே சொல்லியிருக்கலாமே? என்றிட, சொல்வதென்ன  பேசிக்கொண்டு இருக்கேக்கை தானே கேட்டனிங்கள் பிறகென்ன சொல்லுறது)  எங்கட நோக்கமும், இனிமேல் 71-பேர் கொண்ட எங்கள் சிவில் சமூகமும் உங்களுக்கு பக்கபலமாக இருக்கும் இது சத்தியம் என்றார்கள், தமிழ் மக்கள் மத்தியில் உள்ள இந்த மதிப்பிற்குரியவர்கள்.

இதை வடிவேலுவின் பாணியில, சிவில் சமூகக்காரர்களின் எதிர்பார்ப்பில், கூட்டமைப்பு “திருந்தவில்லை! ஆனால் திருந்திவிட்டது!” எனறும்  சொல்லாம்தானே!

எதிர்காலத்தில் இது போன்ற  (ம்-து) தடையான பல சங்கடப் படலைகளை-தட்டிகளை-கேற்றுகளை தமிழ்மக்கள் தட்டித்தான் திறப்பார்கள். தட்டியென சம்மாட்டி அடி கொடுத்து பிய்த்து-உடைத்தெறிவார்கள்.

அகிலன் 22/02/2012