Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

எகிறும் விலையேற்றமும், வெறும் கண்துடைப்பு மானியம் வழங்கலும்

எரிபொருள் விலையேற்றத்தால் மின்சாரம் பாவிக்காத குடும்பம் ஒன்று மண்ணெண்ணையை 5 லீற்றர் கொள்வனவு செய்யுமாயின் மாதாந்தச் செலவு ரூ 175 அதிகரித்துள்ளது, தற்போது நாடுமுழுவதும் அண்ணளவாக 300000 குடுப்பங்கள் மின்சாரம் பாவிக்காமல் மண்ணெண்ணை விளக்குகளை பாவிக்கின்றன. இவர்களுக்கு மானியமாக  ரூ 200 வழங்கவுள்ளது என்றும், இதனால் அரசிற்கு ஒரு பில்லியன் ரூபா செலவு என்றும் பசில் ராஜபக்சே அண்மையில் தெரிவித்துள்ளார்.

 

இருந்தபோதும் “பெப்ரவரி 2012 எரிபொருள் விலையேற்றத்தின் மூலம் அரசாங்கத்துக்கு 6 பில்லியன் ரூபாய்கள் மேலதிக வருமானம் கிடைக்கின்றது. முன்மொழியப்பட்ட, எரிபொருள் மானியத்திட்டத்துக்கு (குறைந்த வருமான குடும்பங்கள், மீனவர்கள், முச்சக்கர வண்டி சாரதிகள், பாடசாலை வாகனங்கள்) ஒரு பில்லியன் ரூபாவே செலவாகும். ஆகவே அரசாங்கத்துக்கு இன்னும் 5 பில்லியன் ரூபாய்கள் இலாபமே என்றும் பசில் ராஜபக்சே அண்மைய கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார்.

இதிலிருந்து இந்த அரசின் உண்மை முகம் தெரிகின்றது. இந்த அரசாங்கம் இலாப நோக்கம் கருதி மக்களின் மீது தனது சுமையைச் செலுத்துகின்றது. இவ்வாறு மக்கள் மீது பொருளாதார ரீதியில் சுமகைளை செலுத்தி பெறப்படும் இலாபம் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றிடம் பெற்ற கடன்களை அடைப்பதற்கு பயன்படுத்தபடுகின்றது.

தமது சொந்த நாட்டு மக்களின் வாழ்க்கையில் பொருளாதாரச் சுமையை ஏற்றி சர்வதேச பெருமுதலாளிகளிற்கு சேவகம் செய்து வரும் இந்த இடைத்தரக அரசு ஒருபோதும் இலங்கை மக்களை சுதந்திரமாகவும், மனித நேயத்துடனும் வாழவிடாது. மாறாக தனது நலனின் அடிப்படையில்  நாட்டு மக்களையே கொள்ளையடித்து ஏகாதிபத்தியத்திற்கு சேவகம் செய்யும் இவ்வரசை, உழைக்கும் மக்களும் சுய உற்பத்தியில் ஈடுபடும் முதலாளிகளும் இணைந்து எதிர்ப்பு போராட்டங்களை நடத்துவதன் மூலமே ஒரு புதிய ஜனநாயக ஆட்சியை இலங்கையில் நிறுவ முடியும்.

-சீலன் 20/02/2012