Tue04162024

Last updateSun, 19 Apr 2020 8am

பிரபல ஊடகவியலாளர் மேரி கொல்வின் சிரியாவில் கொலை

கொல்லப்பட்ட மேரி கோல்வின், ரெமி ஓச்லிக்

மேற்குலக நாடுகளைச் சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்கள் சிரியாவின் ஹோம்ஸ் நகரில் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அவர்கள் தங்கியிருந்த கட்டிடத்தின் மீது நடந்த ஷெல் தாக்குதலில் அவர்கள் கொல்லப்பட்டதாக அரச எதிர்ப்பு செயற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

 

சண்டே டைம்ஸ் பத்திரிகையின் மேரி கோல்வின் மற்றும் பிரஞ்சு புகைப்பட நிபுணர் ரெமி ஒச்லிக் ஆகிய இருவர் தான் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் என்று பிரஞ்சு அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

தாக்குதல்

ஹோம்ஸ் நகரின் பாபா அமர் பிரதேசத்தில் செயற்பட்டுவந்த தற்காலிக ஊடக மையத்தின் மீது ஷெல் தாக்குதல் நடந்தபோது மேலும் பலரும் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாபா அமர் என்கிற பகுதியில் இந்த இரண்டு ஊடகவியலாளர்கள் தங்கியிருந்த வீடு, அரச எதிர்ப்பாளர்களின் தற்காலிக ஊடக மையமாக செயற்பட்டுவந்தது. புதன் கிழமை காலை இந்த கட்டிடத்தின்மீது ஷெல் தாக்கியது. அதைத்தொடர்ந்து அந்த கட்டிடத்திலிருந்தவர்கள் வெளியே ஓடியபோது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் சடலங்களை காட்டும் காணொளி வெளியிடப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.

மேலும் குறைந்தது மூன்று வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் காயமடைந்திருப்பதாகவும் அரச எதிர்ப்பாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

கடந்த மார்ச் மாதம் சிரிய அதிபர் பஷர் அல் அசாத்த்துக்கு எதிரான கிளர்ச்சி ஆரம்பித்தது முதல் மேற்குலக செய்தியாளர்கள் சிரியாவுக்குள் பெரும்பாலும் அனுமதிக்கப்படுவதில்லை.

ஆனாலும் அரச எதிர்ப்பு செயற்பாட்டாளர்களின் துணையுடன் பெரும் ஆபத்துக்களுக்கு மத்தியில் செய்தியாளர்கள் அங்கே சென்றபடி இருக்கிறார்கள்.

பிரஞ்சு நாட்டின் தொலைக்காட்சி ஊடகவியலாளர் கில்லிஸ் ஜாக்குயர், சிரிய அரசு ஏற்பாடு செய்திருந்த பயணத்தில் ஹோம்ஸ் நகருக்கு சென்றபோது கடந்தமாதம் கொல்லப்பட்டார்.

இலங்கையில் கண்ணிழந்தவர்

சண்டே டைம்ஸ் பத்திரிகையின் புகழ்பெற்ற வெளிநாட்டு செய்தியாளரான மேரி கால்வின் அமெரிக்காவில் பிறந்தவர். பல ஆண்டுகளாக லண்டனில் வசித்து வந்தார்.

உலகின் மோதல் நடக்கும் பிரதேசங்களில் அவர் இதற்கு முன்னரும் செய்திசேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். கொசோவோ, செசென்யா மற்றும் பல அரபு நாடுகளிலும் அவர் செய்தி செகரிப்பில் ஈடுபட்டிருந்தார்.

2001 ஆம் ஆண்டு இலங்கையின் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் இருந்து அவர் செய்தி சேகரித்தபோது அவருக்கு ஏற்பட்ட காயத்தில் அவர் தனது ஒரு கண்ணை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரச எதிர்ப்பாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் மாவட்டங்களைச் சுற்றிவளைத்து பாதுகாப்புப்படையினர் கடந்த இரண்டு வாரகாலமாக தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

செவ்வாய்க்கிழமையன்று மட்டும் நாற்பது பேர் கொல்லப்பட்டதாக அரச எதிர்ப்பு ஆர்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். அப்படி கொல்லப்பட்டவர்களில் ஹோம்ஸ் நகரிலிருந்து நேரடி காணொளியை ஒலிபரப்பிவந்த ரமி அல் சயத் என்பவரும் அடக்கம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். அவாரது காணொளி காட்சிகளை தான் உலக ஊடக நிறுவனங்கள் பலவும் பயன்படுத்திவந்தன.

பாபா அம்ர் பகுதியில் நடந்த ஷெல் தாக்குதலில் சையீத் கொல்லப்பட்டதாக அவரது சகோதரர் தெரிவித்திருக்கிறார். தற்காலிக மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த சையீத்தின் சடலத்தை காட்டும் காணொளியையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.

தினமும் குறிப்பிட்ட நேர தாக்குதல் நிறுத்தத்திற்கு அரசும், எதிர்ப்பாளர்களும் உடன்படவேண்டும் என்று சர்வதேச செஞ்சிலுவை சங்கம் கோரிக்கை விடுத்திருக்கிறது. அந்த நேரத்தில் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அத்தியாவசிய மருந்துகளை கொண்டு செல்லவும், மோதலுக்கு மத்தியில் சிக்கியுள்ள பொதுமக்களை வெளியேற்றவும் அந்த நேரம் பயன்படும் என்றும் செஞ்சிலுவை சங்கம் கோருகிறது. ஆனால் இந்த யோசனைக்கு இருதரப்பும் உடன்படுவதற்கான சமிக்ஞைகள் இதுவரை காணப்படவில்லை.