Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

மன்னார் இராணுவ முகாமுக்கு பெண் அமைப்புக்கள் எதிர்ப்பு

மன்னார் புறநகர்ப்புறத்தில் எழுத்தூர் மக்கள் குடியிருப்பு பிரதேசத்தில் புதிதாக இராணுவ முகாம் ஒன்றை அமைப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்று அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்கள் அரசிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள்.

இங்குள்ள பல மகளிர் அமைப்புக்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் கையெழுத்திட்டு எழுத்து மூலமாக இந்தக் கோரிக்கையை முன்வைத்திருக்கின்றார்கள்.

குடியேற்றக் கிராமமாகிய ஜீவன்புரம் உட்பட ஒன்பது மீள்குடியேற்ற கிராமங்களுக்கு நடுவே தரவன்கோட்டைக்குச் செல்லும் வீதியில் இந்த இராணுவ முகாமை அமைப்பதற்குரிய காணி ஒதுக்கப்பட்டிருப்பதாக அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர்.

 

அத்துடன் தண்ணீர்ப் பற்றாக்குறை மிகுந்த இந்தப் பகுதி மக்களின் நலன்களைக் கருத்திற்கொண்டு ஐநாவின் அபிவிருத்தி நிறுவனம் (யுஎன்டிபி) அமைத்துக் கொடுத்துள்ள குளத்திற்கு அருகில் இந்த முகாம் வரவிருப்பது இப்பகுதி மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகின்றது.

பெண்களைத் தலைவிகளாகக் கொண்ட குடும்பங்களும் வளர்ந்த பெண்பிள்ளைகளை அதிகமாகக் கொண்ட குடும்பங்களும் இங்கு பெருமளவில் வசிப்பதாகவும், இதனால், இங்கு புதிதாக இராணுவத்தினர் நிலைகொள்வதன் மூலம் பல்வேறு பிரச்சினைகள் உருவாகக் கூடும் என்று, இந்தப் பெண்கள் அச்சம் வெளியிட்டிருக்கின்றனர்.

குளத்தில் குளிப்பது, துவைப்பது, கழிப்பறை வசதிகள் இல்லாமையினால் அருகில் உள்ள காட்டுப்புறத்திற்கு இயற்கைக் கடன்களைக் கழிப்பது, போன்ற விடயங்களில் தடங்கல்களும், பிரச்சினைகளும் எழக்கூடும் என்றும் அவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள்.

இராணுவ முகாம் அமையவுள்ள வீதியொன்றே இந்தப் பகுதி மக்களின் பொது போக்குவரத்திற்கு உரியதாக இருப்பதனால், வேலைக்குச் செல்லும் பெண்கள், மாலை நேர வகுப்புகளுக்குச் செல்லும் வளர்ந்த பெண்பிள்ளைகள் போன்றோரின் பாதுகாப்புக்கும் குந்தகம் ஏற்படும் என்பதால், இங்கு இராணுவ முகாம் அமைக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்று அவர்கள் கோரியிருக்கின்றார்கள்.

இந்த விடயம் குறித்து ஜனாதிபதியின் நேரடி கவனத்திற்குக் கொண்டு வந்திருப்பதாகத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மட்டுமல்லாமல், வடக்கு கிழக்கு என தமிழ்ப் பிரதேசம் எங்கும் பொதுமக்களின் குடியிருப்பு பகுதி காணிகளில் இராணுவத்தினர் முகாம்கள் அமைப்பதை ஒரு திட்டமாகவே அரசாங்கம் செயற்படுத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.