Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

புத்தகவாத இடதுசாரிகளின் புலம்பல்கள்

இலங்கை அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் வெளியே சென்றுவிடாமல் இருக்க மேற்குலகம் போர்க் குற்ற விசாரணை, மனித உரிமை மீறல் போன்ற விடயங்களைக் காட்டி இலங்கையை மிரட்டி வருகின்றது. ஆயுதப் போராட்டம் அழிக்கப்பட்ட நிலையில் இந்த நிலைமையை பாவித்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சில ராஜதந்திர முயற்சிகளை மேற்கொள்வதில் என்ன தவறு இருக்க முடியும்.

 

புத்தகங்களில் காணப்படும் மேன்மையான தத்துவங்களை யதார்த்த நிலைமைகளுக்கேற்ற வகையில் அவற்றில் ஏற்படும் அடிப்படைக்கு ஊறுவிளைவிக்காத வகையில் ஏற்படும் வளர்ச்சிகளைக் கணக்கில் எடுக்காமல் அவற்றைத் திரும்பத்திரும்ப கூறிக் கொண்டு இருப்பதை மாமேதை லெனின் புத்தக வழிபாடு எனவும் அப்படிச் செய்பவர்களை வெறும் புத்தகவாதிகள் எனவும் கண்டனம் செய்திருக்கிறார்.

முதலாளித்துவம் தோற்றம் பெற்று எழுச்சியடைந்து வலிமையாக விளங்கிய காலத்தில் அதன் தோற்றம், வளர்ச்சி என்பனவற்றை விஞ்ஞான பூர்வமாக ஆராய்ந்து, சமூக வளர்ச்சியின் அடுத்த கட்டம் தொடர்பாகக் கணக்கிட்டு உழைக்கும் மக்களின் விடுதலை தொடர்பாக மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகியோர் முன்வைத்த அரிய தத்துவம் தான் மார்க்ஸ்ஸிசம்.

முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாகி போர்களாலும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளாலும் உலகம் முழுவதும் பரவிய நேரத்தில் மாமேதை லெனின் அவர்கள் மாக்ஸியத் தத்துவத்தை இன்னொரு கட்டத்துக்கு வளர்த்து எடுத்து அதை  மாக்ஸிசம் லெனினிசம் என்ற கட்டத்திற்கு வளர்த்தெடுத்தார்.

அதன் அடிப்படையில் சோவியத் புரட்சியைத் தலைமையேற்று நடத்தி உலகின் முதல் உழைக்கும் மக்களின் ஆட்சியதிகாரம் கொண்ட சோவியத் யூனியனை நிறுவினார். அவர் மாக்ஸிச தத்துவத்தை வளர்ச்சிக்கு உட்படாத வேதங்களாகக் கருதியவர்களுக்கு எதிராகவும், திரிபுபடுத்தியவர்களுக்கு எதிராகவும் அதிதீவிர ஒரு முனைப்போக்கு கொண்ட வர்களுக்கும் எதிராக நடத்திய தத்துவார்த்தப் போராட்டங்களே மாக்ஸிசம் லெனினிசம் என்ற ஒப்பற்ற உழைக்கும் மக்களின் தத்துவங்களாக வளர்ந்தன.

அதேபோன்று கைத்தொழில் வளர்ச்சி பெறாத ஓர் அரைக்குடியேற்ற, அரை நிலப்பிரபுத்துவ நாட்டில் உழைக்கும் மக்களின் தலைமையிலான ஒரு விவசாயப் புரட்சி மூலம் விடுதலையை எட்டுவது தொடர்பாக மாஓசேதுங் அவர்கள் மாக்ஸிசம், லெனினிசம் என்ற தத்துவத்தை மாஓசேதுங் சிந்தனை என்ற கட்டத்துக்கு வளர்த்தெ டுத்தார். அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சியே மாபெரும் சீன தேசத்தை விடுதலை செய்து உழைக்கும் மக்களின் அரசியல் அதிகாரத்தை உருவாக்கியது.

அதாவது சமூக மாற்றங்களுக்கு அமைய உழைக்கும் மக்களின் விடுதலைக்கான தத்துவமாகிய மாக்ஸிசமும், லெனினிசமும், மாஓசேதுங் சிந்தனை என வளர்ச்சி பெற்று வந்துள்ளன. முதலாளித்துவம் தனக்குள்ளேயே கொண்டிருக்கும் முரண்பாடுகள் காரணமாக ஏற்படும் நெருக்கடிகளால் ஏகாதிபத்தியம், நவீன உலகமயமாக்கல் என வெவ்வேறு வடிவங்களை எடுக்கிறது. எனவே தான் உழைக்கும் மக்களின் தத்துவங்களும் காலத்துக்கேற்ப வளர்ச்சியடைகின்றன.

ஆனால் புத்தகவாதிகளோ ஏதோ ஒரு காலகட்டத்தின் தத்துவங்களை இறுகப்பற்றிக்கொண்டு நியாயபூர்வமான போராட்டங்களைக் கொச்சைப்படுத்தும் வகை யிலும் பலவீனப்படுத்தும் வகையிலும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இலங்கையின் இடதுசாரிகளின் ஒரு பகுதியினர் தேசிய வாதிகளுடன் இணைந்து அவர்களுக்குள் கரைந்து போய்விட இன்னும் ஒரு பகுதியினர் ஒதுங்கியிருந்து மாக்ஸியக் கோட்பாடுகளின் பெயரால் நியாயமான போராட்டங்களைக் கீழ்மைப்படுத்தும் வகையிலும், இடையூறு செய்யும் வகையிலும் விமர்சனங்களை மேற் கொண்டு வருகின்றனர். வெறும் புத்தகவாதிகளாக விளங்கும் இவர்களால் மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்த மட்டுமே முடிகிறது. இவர்கள் தாங்களே சரியான திசைமார்க்கத்தைச் சுட்டிக்காட்டுபவர்களாகவும், ஏனையோர் பிற்போக்குத்தனமான சிந்தனைப் போக்குகளை கொண்டவர்களாகவும் சில தேசிய ஊடகங்களைப் பயன்படுத்தி தம்மைச் சித்திரித்து வருகின்றனர்.

1953 ஆம் ஆண்டு இடதுசாரிகளின் தலைமையில் இடம்பெற்ற ஹர்த்தால் போராட்டம் ஐக்கிய தேசியக் கட்சி அரசையே ஈடாட வைத்தது. அமைச்சரவைக் கூட்டத்தையே துறைமுகத்தில் நின்ற பிரிட்டிஷ் கப்பலில் நடத்துமளவுக்கும், டட்லி சேனநாயக்கா பிரதமர் பதவியை ராஜினாமாச் செய்யுமளவுக்கும் அப் போராட்டம் வலிமை பெற்றிருந்தது. ஆனால் அது பின்பு கொடிய இராணுவ நடவடிக்கைகள் மூலம் முறியடிக்கப்பட்டது.

ஆனால் அப்படியான ஒரு நிலைமை ஏற்படுமளவுக்கு இந்நாட்டில் அன்று இடதுசாரிகள் பலம் பெற்றிருந்தனர் என்பதை எவரும் மறுத்துவிட முடியாது. அதேவேளையில் இன்று இடதுசாரிகளைத் தேடிக்கண்டு பிடிக்க வேண்டிய அளவுக்கு அவர்கள் அரசியல் அரங்கில் பலவீனப்பட்டுவிட்டனர் என்பதும் உண்மையிலும் உண்மை.

1944 ஆம் ஆண்டிலேயே இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி இலங்கையில் இரு இனங்களுக்குமிடையே தொடர்ந்து ஐக்கியம் நிலவ வேண்டுமெனில் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயாட்சிக்கு தமிழ் மக்கள் உரியவர்கள் என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் எனப் பிரகடனம் செய்தது. 1952 இல் வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில் இனப்பிரச்சினைத் தீர்வாக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய பிரதேச சுயாட்சி என்ற கொள்கை முன்வைக்கப்பட்டது.

 ஆனால் தமிழரசுக் கட்சி சமஷ்டிக் கோரிக்கையை முன் வைத்துப் போராடியபோது அதனுடன் இடது சாரிகள் ஐக்கியத்தைக் கட்டியெழுப்பத் தவறியது மட்டுமின்றி அதற்கான ஆதரவுச் சூழ் நிலையை தென்னிலங்கை திரட்டவும் தவறினர். இதன் விளைவு மெல்ல மெல்ல இடதுசாரிகள் தமிழ் மக்கள் மத்தியிலிருந்து ஒதுக்கப்படவும், தென்னிலங்கை தேசிய சக்திகளுக்குள் கரைந்து போகவும் வேண்டிய நிலை ஏற்பட்டது. அது மட்டுமன்றி இன ஒடுக்கு முறை நடவடிக்கைகளிலும் தேசிய சக்திகளுக்குத் துணைபோகும் நிலையும் தோன்றியது.

தமிழரசுக்கட்சியின் போராட்டங்கள் குறுந்தேசிய வாதம் என இடது சாரிகளால் குற்றம் சுமத்தப்பட்டது. ஆனால் பெருந்தேசியவாதம் இன அடிப்படையிலான ஒடுக்கு முறைகளைக் கட்டவிழ்த்து விடும்போது குறுந்தேசிய வாதம் என்பது தவிர்க்க முடியாததும், இனத்தின் பாதுகாப்புக்கு அவசியமானதும் என்பதையும் இடது சாரிகள் உணரத்தவறிவிட்டனர். ஆனால் தமிழரசுக் கட்சியின் சமஷ்டிக் கோரிக்கைக்கு ஆதரவாக தென்னிலங்கையின் உழைக்கும் மக்களை இடதுசாரிகள் அணி திரட் டியிருந்தால், குறுந்தேசிய வாதம் உருவாவதைத் தடுத்திருக்கலாம் என்பது மட்டுமன்றித் தமிழரசுக் கட்சியின் மேற்குலக சார்பையும் பலவீனப்படுத்தியிருக்கலாம்.

அதுமட்டுமன்றி பண்டா செல்வா ஒப்பந்தத்துக்கு எதிராக ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவால் நாடு பரந்த போராட்டங்கள் நடத்தப்பட்ட போது ஆதரவாக இடதுசாரிகள் போராட்டங்களை நடத்தி எஸ்.டபிள்யூ. ஆர்.டி.பண்டாரநாயக்காவுக்கு துணை நின்றிருந்தால் சில சமயம் பண்டாசெல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டதைத் தவிர்த்திருக்கலாம்.

இப்படியாக இலங்கையின் வரலாற்றில் இடதுசாரிகள் இனப்பிரச்சினை தொடர்பாகச் சரியான கொள்கைகளைப் பிரகடனம் செய்த போதும் நடைமுறையில் நேரெதிராகவே செயற்பட்டு வந்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையில் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் முனைப்புப் பெற்ற வேளையிலும் இவர்கள் அதற்கு எதிராக வசைபாடவும், கொச்சைப்படுத்தவும் தயங்கவில்லை.

இன்றைய உலகமயமாக்கல் சந்தைப் பொருளாதாரத்தின் பிரதான இலக்கு உலக மக்கள் அனைவரையுமே பல்தேசிய நிறுவனங்களின் நுகர்வோராகவும், அவர்களுக்கு மனித உழைப்பை விற்பவர்களாகவும் ஆக்குவதே. எனவே தேசிய இனங்களின் உணவு, உடை, பாரம்பரிய பழக்க வழக்கங்கள், கலைகலாசாரம், விளையாட்டு, சுயதேவைப் பூர்த்திப் பொருளாதாரம் ஆகிய தனித்துவங்களைச் சிதைப்பதேயாகும். அந்த வகையில் இடம்பெறும் போர்கள் முதற்கொண்டு ஒப்பந்தங்கள், உதவிகள் என அனைத்து அம்சங்களும் தேசங்களினதும், தேசிய இனங்களினதும் தனித்துவங்களைச் சிதைக்கும் வகையிலேயே வகுக்கப்படுகின்றன. இவை காலத்துக்கும் இடத்துக்கும் ஏற்ப வெவ்வேறு வடிவங்களில் அமையும்.

அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே நிலவி வந்த இன முரண்பாடுகளைக் கையாண்டு தமிழினத்தின் தேசிய தனித்துவத்தை அழிக்கப் பேரினவாத சக்திகள் முன்னிறுத்தப்பட்டன. அதன் பின்னணியில் மேற்கு நாடுகள் நேரடியதாவும் மறைமுகமாகவும் துணை நின்றதை நாமறிவோம்.

எனவே தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் தமிழ் மக்களின் தேசிய தனித்துவத்துக்கும், சுதந்திரத் தன்மைக்குமான போராட்டமாக விளங்கியது. எனவே முற்போக்கானதும், தவிர்க்க முடியாத வரலாற்று நியதியாகவும், உலக வல்லாதிக்கத்துக்கு எதிரானதுமாக அமைந்தது. இன்னும் சொல்லப் போனால் மாக்ஸிய அடிப்படையில் இது ஒரு விஞ்ஞான பூர்வமான நகர்வு.

இந்த முற்போக்கான அம்சத்தை புத்தகவாத இடதுசாரிகள் பிடிவாதமாகக் கண்டு கொள்ள மறுத்தனர். விடுதலைப்புலிகளின் தவறுகளை விமர்சனம் செய்வதிலும், அவர்களைப் பயங்கரவாதிகளாகக் காட்டுவதிலுமே கூடுதல் அக்கறை செலுத்தினர்.  அத்தனைக்கும் விடுதலைப் புலிகள் தவறே செய்யவில்லை என நாம் சத்தியம் செய்ய வரவில்லை. ஆனால் எந்த ஒர் அமைப்புக்குள்ளும் தவறுக்கும், சரிக்குமிடையேயான போராட்டம் தவிர்க்க முடியாதது.

அப்படியான நிலையில் சரிகளில் தங்கி நின்று தவறுகளைக் களைந்து முன்செல்வதே விஞ்ஞானபூர்வமான அணுகுமுறையாகும். ஆனால் இந்தப் புத்தகவாத இடதுசாரிகளோ தவறுகளையே தூக்கிப் பிடித்து விடுதலைப் புலிகள் கொஞ்சம் கூட நல்ல அம்சம் இல்லாத பிற்போக்குச் சக்திகள் எனக் கணக்கிட்டனர்.

இன்று உலகபிற்போக்கு சக்திகள் அனைத்தும் ஒன்று திரண்டு விடுதலைப் புலிகளைத் தோற்கடித்துவிட்டனர். அனுபவங்களிலிருந்து கற்றுக் கொள்ளத்தவறியமையும்,  எதிரியின் பலத்தையும் தமது பலத்தையும் சரியாகக் கணக்கிடாமையும் எதிரிகளுக்கிடையேயுள்ள முரண்பாடுகளைச் சரியாகக் கையாளாமையும் இலங்கை ஆட்சிப் பீடத்தினருக்கு இந்த வாய்ப்பை வழங்கியது என்பதையும் மறந்துவிட முடியாது.

இந்த அம்சங்களை விமர்சித்திருந்தால் அது பயனுள்ள வகையில் அமைந் திருக்கும். அதை அவர்கள் செய்யவில்லை என்பது நான் இங்கு குறிப்பிடத்தக்கது.

இப்போது இந்தப் புத்தகவாதிகள் தங்கள் கறைகளைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது வீசத்தொடங்கி விட்டனர். அவர்கள் மேற்குலக விசுவாசிகள் என விமர்சிக்கவும் ஆரம்பித்துவிட்டனர்.

இன்று இலங்கை அரசு தனது கட்டுப்பாட்டுக்கு வெளியே சென்றுவிடாமல் இருக்க மேற்குலகம் போர்க்குற்ற விசாரணை, மனித உரிமை மீறல் போன்ற விடயங்களைக் காட்டி இலங்கையை மிரட்டி வருகிறது. ஆயுதப் போராட்டம் அழிக்கப்பட்ட நிலையில் இந்நிலைமையை பாவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு சில ராஜதந்திர முயற்சிகளை மேற்கொள்ளுவதில் என்ன தவறு இருக்க முடியும்.

அப்படியானால் தமிழினம் தமது உரிமையைப் பெற எதுதான் வழி? அவர்கள் லண்டனிலும் கொழும்பிலும் இருந்து கொண்டு வெகுஜன எழுச்சிகளை உருவாக்க வேண்டுமென ஆலோசனை சொல்கின்றனர். ஆயுதப் போராட்டத்தையே விமர்சித்தவர்கள் வெகுஜனப் போராட்டங்கள் பற்றி வழிகாட்டுகிறார்கள்! வியப்புத்தான்! இத்தகைய புத்தகவாதிகள் வெள்ளையாடை கசங்காமல் தொலைதூரங்களில் நின்று விமர்சிப்பதை விட மக்கள் நீரைப் போன்றவர்கள், கம்யூனிஸ்டுகள் மீனைப் போன்றவர்கள் என மாஓசேதுங் அவர்கள் கூறியதை எற்றுக் கொண்டு ஏதாவது பயனுள்ள காரியங்களில் ஈடுபடுவது நல்லது. 

உதயன் பேப்பர்