Thu04252024

Last updateSun, 19 Apr 2020 8am

பரீசில் பரிதிமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்: புலிகளின் உள்ளக அதிகாரப் போராட்டம் (பகுதி-1)

பிரான்சிய புலிகளின் மூத்த தலைவரான பரிதியின் மீது ஒக்டோபர் 30ந் திகதி பாரீசில் வைத்து மேற்கொள்ளப்பட்ட இரவுநேரத் தாக்குதல், புலம்பெயர் ஸ்ரீலங்காத் தமிழர் அரசியலைத் தற்போது துன்புறுத்தும் ஒரு கொடிய நோயின் அறிகுறியாக உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுக் கட்டமைப்பானது தற்சமயம் இயக்கத்தின் பலம் பொருந்திய முன்னணி தலைவர்களிடையே ஏற்பட்டிருக்கும் ஒரு அதிகாரப் போராட்டத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. பாரீசில் பரிதிமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலும் இந்த உடன்பிறப்பு கொலைகளைப் புரியத்தூண்டிய கோஷ்டி மோதல்களின் விளைவே.

 

பரிதியும் மற்றும் அவரது உதவியாளர்கள் இருவரும் பாரீசில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்பு குழு (ரி.சீ.சீ.) அலுவலகத்தை விட்டு வெளியேறி வெளியே நிறுத்தப்பட்டிருந்த அவர்களது வாகனத்தை நோக்கிச் செல்லும்போது ஆறுபேரைக் கொண்ட குழுவொன்று அவர்களைச் சூழ்ந்து கொண்டது. அவர்களில் மூவர் மலையேறுபவர்கள் அணியும் கம்பளித் தொப்பி போல தலையை முற்றாக மூடி முகத்தின் பாகங்களில் கண்களையும் வாயையும் மட்டுமே வெளிக்காட்டும் துணியினால் செய்யப்பட்ட முகமூடியை அணிந்திருந்தனர். அவர்கள் கையில் ஆயுதங்களை வைத்திருந்ததுடன் அவற்றை உபயோகிக்கவும் தொடங்கினர்.

மற்ற மூவரும் வெறுமனே அதைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் இருவர் பாரீசில் இருந்த முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் என்று பரிதி அடையாளம் காட்டியுள்ளார். தாக்கியவர்களின் நோக்கம் பரிதியை கொல்வதில் இல்லாமல் அவரது உடலில் காயங்களை ஏற்படுத்துவதாகவே அமைந்திருந்தது.

பரிதியைத் தாக்கியவர்கள் இரும்பு பொல்லுகளை பாவித்தது மட்டுமல்லாது கட்டான எனப்படும் யப்பானிய சமுராய் வாளையும் பயன்படுத்தினார்கள். இந்த கட்டான எனப்படும் வாள் வட்டமான அல்லது சதுரமான தற்காப்பு  நிலையைக் கொண்டதும், இரண்டு கைகளாலும் பயன்படுத்தக் கூடியவாறு நீண்ட பிடியுடன் கூடியதும் மிதமான வளைவுடன் உள்ள மெல்லிய ஒற்றை முனைக் கத்தி. அதன் கூரான அலகின் நீளம் வழக்கமாக 60 சென்ரி மீட்டர் அல்லது 23.6 அங்குலமாகும்.

தாக்குதலாளிகள் சமுராய் வாளினால் பரிதியை வெட்டியதுடன் இரும்பு பொல்லுகளாலும் சில அடிகளை அடித்துள்ளனர். இவரது இரண்டு உதவியாளர்களையும் பொல்லுகளால் தாக்கியுள்ளனர். ஆனால் வாளினால் வெட்டவில்லை. பரிதி ஆழமான வெட்டுக்களைத் தாங்கியுள்ளதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 27 தையல்கள் போடப்பட்டுள்ளனர்.

பரிதிமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலானது மிகத் தீவிரமான முக்கியத்துவத்தைப் பெறுகிறது, ஏனெனில் அவர் எல்.ரீ.ரீ.ஈ அமைப்பில் ஒரு உயர்ந்த பதவித்தரத்தைக் கொண்;டவரும் பிரான்சிலுள்ள எல்.ரீ.ரீ.ஈ அமைப்புக்கு பல வருடங்களாக தலைமையேற்றிருந்தவரும் ஆவார். நடராஜா மதீந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட பரிதி, றீகன் என்ற பெயராலும் அழைக்கப் படுகிறார். இவரை பிரான்சிய அதிகாரிகள் கைதுசெய்து ஒரு குறிப்பிட்ட காலம்வரை சிறைத்தண்டனை பெற்றதால் இவர் தலைமைப் பதவியிலிருந்து வெளியேறவேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்.

தனக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ள பரிதி தற்போது பிணையில் வெளியே வந்துள்ளார். நீதிமன்றின் முன்னால் அவரது வழக்கு நிலுவையில் உள்ளதால், பரிதி பிரான்சின் சட்டரீதியான புலித்தலைவராக இருப்பதை பெயரளவில் நிறுத்திக் கொண்டார், இருந்தபோதிலும் அவர் தொடர்ந்து அரசியல் ரீதியாக சுறுசுறுப்பான செயற்பாட்டாளராக இயங்கியதால் பிரான்சில் எல்.ரீ.ரீ.ஈ யின் உண்மையான தலைவராக மதிக்கப்பட்டார்.

வெளிநாட்டு புலிகளின் உள்ளகப் போட்டியில் தாக்குதலுக்கு இலக்கான மிகவும் சிரேட்ட தலைவர் அவர்தான் என்பதால் பரிதிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னணியில் ஒரு தீவிர வளர்ச்சி இருக்கிறது. இதேபோன்ற பல தாக்குதல்கள் வேறுபல இடங்களில் நடைபெற்றிருக்கிறது ஆனால் பாதிக்கப்பட்டவருக்கு இயக்கத்தில் உள்ள சிரேஷ்ட தலைமைத்துவத்தை வைத்துப் பார்க்கும்போது பரிதி மீதான தாக்குதல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கணிக்கப் படுகிறது.

இந்தச் சம்பவத்தின் தன்மை மற்றும் நோக்கம் என்பன வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ யினரிடையே உள்ள அதிகாரப் போராட்டத்தை வெகு சிறப்பாக விளக்குகின்றன. இரண்டு மூத்த புலி செயற்பாட்டாளர்களுக்கு தமது விசுவாசத்தை உறுதிப்படுத்தும் இரண்டு பரந்த பிரிவுகள் அங்குள்ளன. ஒன்று நோர்வேயை தளமாகக் கொண்டியங்கும் பேரின்பநாதன் சிவபரன் என்கிற நெடியவன். மற்றது பிரான்சு மற்றும் ஜேர்மனியில் இருந்து இயங்கிவரும் சேகரம்பிள்ளை வினாயகமூர்த்தி அல்லது வினாயகம் என்பவர்.

தற்பொழுது புலம்பெயர் தமிழரிடையே இடம்பெறும் இந்த புலிகளின் உள்ளக அதிகாரப் போராட்டம் பற்றி விளங்கிக் கொள்ள ஸ்ரீலங்காவில் எல்.ரீ.ரீ.ஈயின் வீழ்ச்சிக்குப் பின் நடைபெற்ற நிகழ்ச்சிகளைப்பற்றிய சுருக்கமான ஒரு மறுபார்வை அவசியமாகிறது.

மே 2009ல் முல்லைத்தீவில் நடந்த இராணுவத் தோல்வியில் எல்.ரீ.ரீ.ஈ யின் பிரதான தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் மற்றும் அதிக எண்ணிக்கையிலான சிரேட்ட தளபதிகளும் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான இதர எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களும் மற்றும் ஆதரவாளர்களும் ஆயுதப்படையினரிடம் சரணடைந்தார்கள். இதன் விளைவாக ஸ்ரீலங்காவில் உள்ள எல்.ரீ.ரீ.ஈ யினரிடத்து உண்மையான அழிவு ஏற்பட்டது.

எப்படியாயினும் வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ கட்டமைப்பு மிகவும் உறுதியாகவே இருந்தது. எல்.ரீ.ரீ.ஈ யின் முன்னாள் ஆயுதக் கொள்வனவுப் பகுதியின் தலைவரான செல்வராசா பத்மநாதன் எல்.ரீ.ரீ.ஈ யின் சர்வதேச தொடர்புகளின் தலைவராக நியமிக்கப்பட்டது தலைமைப் பதவிக்கு கவசமிட்டது போலாயிற்று. தனது பணி மூப்பினை கணக்கில் கொண்டு வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ தலைவராக கேபி மேற்கொண்ட முயற்சியை புலம்பெயர் சமூகத்திலுள்ள ஒரு பகுதி வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ யினர் கடுமையாக எதிர்த்தனர்.

முன்பு வெளிநாட்டிலிருந்த எல்.ரீ.ரீ.ஈ யின் முன்னணி அமைப்புகளின் பல்வேறு கிளைகளையும் வன்னியைத் தளமாக கொண்டு இயங்கிவந்த வீரகத்தி மணிவண்ணன் என்ற கஸ்ட்ரோ தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தார். போர் வீரியமடைந்ததும் வன்னியிலுள்ள தலைமைச் செயலகத்துக்கும் வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ கட்டமைப்புக்கும் இடையேயான தொடர்பாடல்களை மேற்கொள்வது கடினமாகியது. இதனால் கஸ்ட்ரோ தனது பிரதிநிதியாக ஒஸ்லோவில் உள்ள நெடியவனை நியமித்தார். எல்.ரீ.ரீ.ஈயின் வெளிநாட்டு கட்டமைப்பு நெடியவனின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

கேபி ஒருகாலத்தில் புலிகளின் வெளிநாட்டுக் கிளைகளுக்கு தலைவராக பணியாற்றியிருந்தார். எனவே பிரபாகரனின் மறைவுக்குப் பின்னர் கேபி எல்.ரீ.ரீ.ஈயின் தலைமைப் பதவியை கைப்பற்ற முயற்சித்தார். இதனை நெடியவனும் அவரது சகாக்களும் கடுமையாக எதிர்த்தார்கள், ஏனெனில் அவர்கள் வெளிநாட்டுக் கட்டமைப்பின் கட்டுப்பாட்டை கைவிட விரும்பவில்லை. முக்கியமாக வெளிநாட்டில் நிலை கொண்டிருந்த எல்.ரீ.ரீ.ஈயின் புலனாய்வுப் பிரிவின் சில செல்வாக்குள்ள புலித் தலைவர்களின் தீவிர முயற்சியின் பயனாக பலத்த சண்டை சச்சரவுகளின் பின்னர் ஒரு தற்காலிக சமாதானம் உருவாயிற்று.

புதிய ஒழுங்கின்படி கேபி மீள்கட்டமைக்கப்பட்ட வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈயினரின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். ஸ்ரீலங்காவில் எல்.ரீ.ரீ.ஈ செயலற்றுப் போனதால், வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈயினர்தான் இப்போது தமிழீழ விடுதலைப் புலிகள் என்றழைக்கப் படலாயினர். புதிய தலைமை பல்வேறு திணைக்களங்களுக்கும் செயற்பாடுகளுக்கும் பொறுப்பான பல செயலாளர்களுக்கு தலைமையேற்றிருந்தது. தலைமைச் செயலகத்தின் தலைமைச் செயலாளராக கேபி இருந்தார். கட்டமைப்பு எனப்படும் எல்.ரீ.ரீ.ஈயின் கிளை வலையமைப்புகளின் நிருவாகத்தக்கு பொறுப்பான செயலராக நெடியவன் மாறினார்.

மீள் கட்டமைக்கப்பட்ட எல்.ரீ.ரீ.ஈக்குள் தனது தலைமைத்துவத்தை உறுதியாக நிலைநிறுத்திக் கொள்வதற்கு முன்பே, கேபி மலேசியாவில் கைது செய்யப்பட்டு ஸ்ரீலங்காவுக்கு கொண்டு செல்லப்பட்டார். இது நெடியவனுக்கு அதிர்ஷ்டம் அடித்தது போலாயிற்று. கேபி தனது வழியிலிருந்து அகன்றதும் எல்.ரீ.ரீ.ஈயின் வெளிநாட்டுக் கட்டமைப்புகளை தனது பிடிக்குள் மீண்டும் கொண்டுவருவது நெடியவனுக்கு எளிதாயிற்று. நெடியவன் கோஷ்டியினர் கேபியை இப்போது துரோகி எனப்பழித்து பல்வேறு போலிக் குற்றச்சாட்டுகளை அவர்மீது சுமத்தி அவருக்கு குழிபறிக்க முயற்சிக்கிறார்கள்.

எப்படியாயினும் அங்கு சில தடங்கல்கள் உருவாயின. அவர்களிடையே தலைவரான வினாயகம் ஐரோப்பாவில் வெளிப்படலானார். வினாயகம் என்றழைக்கப்படும் சேகரம்பிள்ளை வினாயகமூர்த்தி எல்.ரீ.ரீ.ஈயின் புலனாய்வுப் பிரிவில் ஒரு மூத்த தலைவர். முல்லைத்தீவு வீழ்ச்சி இடம்பெற்றபோது அவர் வன்னியில் இருக்கவில்லை. அதன்பிறகு வினாயகம் ஸ்ரீலங்காவிலிருந்து தப்பி சிறிதுகாலத்தை தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் கழித்துவிட்டு பிரான்சுக்குச் சென்று அங்கு அரசியல் தஞ்சத்துக்கு விண்ணப்பித்துள்ளார். அவர் இப்போது பிரான்சுக்கும் அயல்நாடான ஜேர்மனிக்கும் இடையே ஓடித்திரிகிறார்.

கேபிக்கும் நெடியவனுக்கும் இடையே தற்காலிகமான சமாதான ஒப்பந்தம் உருவாவதற்கும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈயின் வெளிநாட்டுக் கட்டமைப்புகளை மறுசீரமைப்பதற்கும் காரணமாக இருந்தவர்களில் வினாயகமும் ஒருவர். அவர் அப்போது கதிர்காமத்தம்பி அறிவழகன் என்றழைக்கப்படுபவரின் கீழ் இயங்கி வந்தார். வினாயகம் உலகம் முழுவதும் சிதறிக்கிடக்கும் எல்.ரீ.ரீ.ஈயின் புலனாய்வுப் பிரிவினருடன் தொடர்பு கொள்ள ஆரம்பித்து அவர்களை ஒருங்கிணைத்து ஒத்திசைவான குழுவொன்றை உருவாக்கியுள்ளார்.

ஆரம்பத்தில் வினாயகமும் மற்றும் நெடியவனும் ஒருமித்து பணியாற்றி வந்தார்கள் ஆனால் விரைவிலேயே இந்தக் கூட்டணி பிரிந்துவிட்டது. அதற்கான முக்கிய காரணம் நிதியமைப்புகள், வணிக அமைப்புகள், சொத்துக்கள் மற்றும் பணம் உருவாக்கும் நிறுவனங்கள் என்று அனைத்துமே நெடியவனின் பூரண கட்டுப்பாட்டுக்குள்; இருந்ததுதான், அதை வினாயகத்துடன் பங்கிடுவதற்கு நெடியவன் மறுத்துவிட்டார்.

வினாயகம் இப்போது கேபியின் தலைமையின் கீழ் மீள்கட்டமைக்கப்பட்ட எல்.ரீ.ரீ.ஈக்கு புத்துயிரூட்டியுள்ளார். அப்போது உருவாக்கப்பட்ட தலைமைச் செயலகம்தான் வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈயின் அங்கீகரிக்கப்பட்ட படிநிலையிலுள்ளது எனக் கோரியுள்ளார். அந்த நிலையிலிருந்து வினாயகமும் மற்றும் அவரது குழுவினரும் புலிகளின் வெளிநாட்டுக் கட்டமைப்புகள் அனைத்தின்மீதும் ஒரு பாரிய கட்டுப்பாட்டினை நிறுவுவதற்கு இப்போது தீவிரமாக முயற்சித்து வருகிறார்கள். நெடியவனும் அவரது விசுவாசிகளும் இதற்கு எதிர்ப்புக் காட்ட முயல்வது இயற்கைதானே.

இது பிறகு அதிகாரப் போராட்டத்தின் முக்கிய பிரச்சினையாக உருமாறியுள்ளது. பில் கிளின்டனின் பிரபலமான பிரச்சார சொற்றொடரான “ அது முட்டாள்தனமான பொருளாதாரம்” என்பதன் மாறுபாடான எல்.ரீ.ரீ.ஈயின் மறுபதிப்புதான் இந்த அதிகாரப் போராட்டம்.

புலிகளின் இந்த உள்ளக அதிகாரப் போராட்டத்தின் காரணமாக அநேக எல்.ரீ.ரீ.ஈ தலைவர்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் தாக்குதலுக்கு இலக்காகி வருகிறார்கள். இவற்றில் சில வெளிச்சத்துக்கு வந்தாலும் அநேகமானவை வெளிவராமலே போய்விடுகின்றன. பரிதிமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்தான் சமீபத்தில் நடந்தது என்பது மட்டுமல்ல, ஆனால் விவாதப்படி அதி நவீனமான தாக்குதலும் ஆகும்.

மற்றைய வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ தலைவர்களைப் போலல்லாது பரிதி தனக்குப் பின்னால் ஒரு வர்ணமயமான வரலாற்றுப் பின்னணியைக் கொண்டுள்ளார்.மேற்கில் பாதுகாப்பாக தங்களை மீள் இருத்திக் கொண்டபிறகு ஒரு புலிப் போர் வீரர் என்று தம்மை விளம்பரப் படுத்திக் கொள்பவர்களைப் போன்ற ஒருவரல்ல பரிதி. அவர் ஸ்ரீலங்கா யுத்தக் களங்களில் எல்.ரீ.ரீ.ஈ யின் முழு வீச்சிலான ஒரு உறுப்பினராகப் போராடி புலிகளின் ஒரு உருக்குக் கவசம்போலத் திகழ்ந்தவர்.

நடராஜா மதீந்திரன் யாழ்ப்பாணத்தின் கரையோரத் தீவகப் பகுதியான ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதிக்குள் வரும் நாரந்தனைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். அவர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் தனது கல்வியினைப் பயின்று க.பொ.த. உயர்தரம் வரை தேர்ச்சி பெற்றிருந்தாலும் பல்கலைக் கழகத்துக்கு தெரிவாகவில்லை. தமிழர் எதிர்ப்பு நிகழ்ச்சியான ஜூலை 1983, நடந்தபோது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தமிழ் இளைஞர்கள் உணர்ச்சியுடன் பொங்கியெழுந்து பல்வேறு தமிழ் போராளிக் குழுக்களிலும் இணைந்து கொண்டனர். மதீந்திரன் தன்னை எல்.ரீ.ரீ.ஈயில் இணைத்துக் கொண்டார். இந்தியாவில் இராணுவப் பயிற்சி மேற்கொண்ட எல்.ரீ.ரீ.ஈயின் இரண்டாவது தொகுதி அங்கத்தவர்களில் இவரும் ஒருவர்.வட இந்தியாவின் ஹிமாச்சால் பிரதேசத்தில் பயிற்சி பெற்ற பானு மற்றும் ஐடியா வாசு போன்ற பிரபலமான எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களுடன் இணைந்து மதீந்திரனும் பயிற்சி பெற்றவர்.

அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் றீகனை உத்தேசித்து மதீந்திரனுக்கு றீகன் எனும் இயக்கப் பெயர் சூட்டப்பட்டது. எப்படியாயினும் அவர் தன் பெயரை ஆங்கிலத்தில் உச்சரிக்கும்போது “ஏ” என்கிற ஒரு எழுத்தை தவிர்த்து வந்தார். ஒரு குறுகிய காலம் தமிழ்நாட்டில் கழித்த பின்னர் மதீந்திரன் என்கிற றீகன் ஸ்ரீலங்காவின் வடபகுதிக்கு திரும்பினார்.

றீகன் மன்னார் மாவட்டத் தளபதியான விக்டரின்கீழ் தனது பணியை பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் விக்டர் கொல்லப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த அடம்பன் போரிலும் பங்கு பற்றினார். அதில் எல்.ரீ.ரீ.ஈ இரண்டு ஸ்ரீலங்கா இராணுவ வீரர்களை உயிரோடு போர்க் கைதிகளாகப் பிடித்தது. விக்டரின் மரணத்துக்குப்பின் மன்னார் மாவட்டத் தளபதியாக ராதா பொறுப்பேற்றுக் கொண்டார். றீகன் அவருக்கு கீழும் பணியாற்றினார்.

1987ல் முன்னாள் யாழ் மாவட்ட எல்.ரீ.ரீ.ஈ தளபதியான கிட்டு எனப்படும் சதாசிவம்பிள்ளை கிருஷ்ணகுமார் ஒரு குண்டுவெடிப்பில் தனது ஒரு காலை இழந்தபோது, ராதா யாழ்ப்பாணத்துக்கு நகர்ந்தார். றீகனும் ராதாவுடன் கூட யாழ்ப்பாணம் சென்றார். 1987ல் வடமராட்சித் தாக்குதலின்போது நடந்த சண்டையில் றீகன் காயமடைந்தார்.

1987 ஜூலை 29ல் இந்திய லங்கா உடன்படிக்கை கையெழுத்தான பிறகு சமாதானம் நிலவத் தொடங்கியதும் றீகன் சிகிச்சைக்காக தமிழ்நாட்டுக்குச் சென்றார். அவரது முழங்காலுக்கு பின்புறமாக கெண்டைக்காலின் மேற்பகுதியில் ஏற்பட்ட காயஙகளினால் அவரின் பெரோனியல் நரம்பு பாதிக்கப்பட்டு சேதமானது. இதன் விளைவாக அவரது நிலமை “பாத இறக்கம்” எனும் நோயின் பாதிப்புக்கு உள்ளானது.

இந்த பாதிப்புக்கு உள்ளானவர் ஒரு பலவீனமான பாதத்தை கொண்டிருப்பதால் நடப்பதற்கு கடினமாகவும் நொண்டி நொண்டி நடக்கவேண்டியும் இருக்கும். இந்த பாத இறக்க நிலமைக்கு ஆளானவர்; தனது பாதத்தை கணுக்காலுக்கு மேல் உயர்த்தும் திறனை இழந்துவிடுகிறார். இந்தப் பாதிப்புக்கு ஆளானவரால் பாதிக்கப்பட்ட தனது பாதத்தை மேலே உயர்த்தி கால்விரல்களை தெளிவாக நிலத்தில் பதிக்க முடியாது.

றீகன் தமிழ்நாட்டில் இருந்த வேளைகளில் அவர் எல்.ரீ.ரீ.ஈயின் சென்னை அலுவலகத்துக்கு பொறுப்பாகவிருந்த கஸ்ட்ரோவுடன் தங்கியிருந்தார். அதனால் அவர்கள் நெருக்கமான நண்பர்களாயினர். இதற்கிடையில் எல்.ரீ.ரீ.ஈக்கும் இந்திய இராணுவத்துக்கும் இடையில் போர் வெடித்தது. 1989ல் இந்தியாவில் தங்கியிருந்த சகல எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களும் இந்திய அதிகாரிகளால் சுற்றி வளைக்கப்பட்டு ஸ்ரீலங்காவுக்கு கொண்டு வரப்பட்டார்கள். அவர்களில் 82 பேர் காங்கேசன்துறையில் தடுத்து வைக்கப்பட்டார்கள். றீகன் எனப்படும் மதீந்திரனும் அவர்களில் ஒருவர்.

1990ல் இந்திய இராணுவத்தினரின் முற்றான வெளியேற்றத்துக்குப்பின் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களும் விடுதலை செய்யப்பட்டார்கள். ரணசிங்க பிரேமதாஸவுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுக்கள் மூலமாக உருவான சமாதானம் குறுகிய காலமே உயிர்வாழ்ந்து, 1990 ஜூனில் கைவிடப்பட்டது. முழு அளவிலான யுத்தம் வெடித்தது.

(தொடரும்)

- டி.பி.எஸ்.ஜெயராஜ்

நன்றி:  தேனி.காம்