Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

தமிழ் தேசியத்தை சிதைக்கும் சம்பந்தன் குழுவினர்?

நீண்ட இடைவெளியின் பின்னர் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறும் வேதாள மதி!

இனி விசயத்திற்கு வருவோம்!

தமிழ்த்தசியக் கூட்டமைப்பின் அண்மைக்கால அமெரிக்க சுற்றுலா தமிழ் மக்களுக்கு சார்பாக ‘வெட்டிச் சரிக்கும்’ என எதிர்பார்த்தவர்களுக்கு மிகுந்த  ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எமாற்றகளையும் கடந்து துரோகத்தனம் தாண்டவமாடுவதை காணக்கூடியதாக இருப்பது கவலைக்குரியதாகும்.

 

யாரை நம்பவேண்டும் என்பதை தமிழ்மக்கள் நீண்டகாலமாக மனதில் நம்பிக்கொண்டிருந்தார்களோ அது இன்று சுக்கு நூறாகிவிட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த்தேசிய நலன் சாராத எவரினதோ கை(கூலி) பொம்மையாக மாறியிருந்ததை இந்த அமெரிக்க சுற்றுலா வெளிப்படுத்தியிருந்தது. அதாவது, கூட்டமைப்பினருக்கு அமெரிக்காவில் ஏற்றப்பட்ட போதை மருந்து இங்கிலாந்து மாநாட்டில் அரங்கேறியிருந்தது.

பல இடங்களில் வாழ்த்துக்கள் கிடைப்பதும் உண்டு. இவை எதையும் பொருட்படுத்தாது தமிழ்த்தேசியத்தின் நலனே அச்சாணி எனக்கொண்டு  எனது பணி தொடர்கிறது. விமர்சனங்களை மனதார ஏற்றுக்கொள்வேன். நியாயமற்ற வசைகளை சாக்கடையில் விடுவேன்.

சம்பந்தர் குழுவினரால் முன்வைக்கப்பட்ட துணுக்குகளிலிருந்து!

தமிழர் தாயகம் தமிழருக்கு இல்லை!

இலங்கைத்தமிழ் மக்களின் போரியல் வரலாற்றை ஒப்பு நோக்கும் பொது காலம் காலமாக எமது உரிமைத்துவத்துக்கு எதிராக போராடித் தோற்றதே வரலாறாகும். ‘தோற்பன தொடரேல்’ என்ற முது மொழி தெரிந்திருந்தும் ஈழத்தமிழ்மக்கள் தொடர்ந்தும், குறிப்பாக முள்ளிவாய்க்கால் பின்னடைவின் பின்னரும் யுத்த முனைப்போடு இன்றுவரை இருப்பதை அவர்களது இலட்சிய வேட்கையின் உறுதியை உணர்ந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது. இந்த அளவுக்கு முனைப்புக் கொண்டிருந்த தமிழ்மக்களின் உறுதியை சம்பந்தன் குழுவினர் தகர்த்தெறிய வேண்டுமென திட்டம் போட்டிருந்ததை காணக்கூடியதாக உள்ளது. காலம் காலமாக தமிழர் தாய் நிலத்திற்காக போராடி உயிர் நீத்த பூமியான வடகிழக்கு தாயகம், தற்பொழுது தமிழருக்கு சொந்தமில்லை என்ற நிலைப்பாட்டை தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே. பிரபாகரனால் அடையாளம் காட்டப்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் கூறும்பொழுது பிரபாகரனின் மதியூகம் பிழைத்துவிட்டதா என எண்ணத்தோன்றுகிறது. மாநாட்டின் போது சம்பந்தனால் ‘தமிழர் தாயகம் தமிழருக்கு சொந்தில்லை’ என்ற கூற்றை முவைக்கும் போது பக்கத்தில் இருந்த சுமந்திரன் ‘ஆமாம் சாமி’ போட்டது கண்முன் இன்னும் நிழலாடுகிறது.

இத்தனை காலமாக தாயக மீட்புப் போராட்டத்தில் உயிரையீந்த மாவீரர்களின் தியாகம் பயனற்றதா?

பாராளுமன்ற ஆசனங்களை கைப்பற்றுவதற்கு மாவீரர்களின் தியாகங்களின் மீது நின்று மக்களுக்கு கொடுத்த உறுதி மொழி யாவும் வெறும் பம்மாத்தா?

சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு இறுதியாக கைகொடுக்கும் பாராளுமன்ற வீரர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரா?

இந்தியாவிடம் குடும்பங்களும் தாங்களுமாக கையேந்தி நக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தியாவுக்கு வழங்கும் செஞ்சோற்றுக் கடனா?

தமிழருக்கு இலங்கையில் நிலமில்லை என்று கூறும்  அதிகாரத்தை வழங்கியது யார்?

உங்களையெல்லாம் பாராளுமன்ற கதிரையில் அமர வைத்த ஈழத்தமிழ் மக்களுக்கு நீங்கள் காட்டும் பாதை இதுதானா?

முதலீடுகள்

மாநாட்டின் போது சம்பந்தன் அவர்களால் முன் வைக்கப்பட்ட முக்கியமான விடயங்களில், தமிழ்ப்பகுதிகளில் புலம்பெயர்ந்த மக்கள் முதலீடுகளை செய்யவேண்டும் என்பதாகும். எந்த அளவிற்கு வடகிழக்கு தமிழர் தாயகத்தின் தமிழ்மக்கள் முதலீடு செய்வதற்கான பெளதீக நிலை உள்ளதென்பதை சம்பந்தன் அவர்கள் முதலில் வெளிப்படுத்தியிருக்க வேண்டும். காலநிலை இதுவரை தமிழருக்கு சாதமில்லாத நிலை தெரிந்திருந்தும், யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இன்றுவரை தமிழ்மக்களை சுதந்திரப்பிரஜைகளாக அங்கீகரிக்காத நிலையிலும், தமிழ்மக்கள் சுதந்திரமாக இயல்பு வாழ்க்கையை நடாத்த முடியாத நிலையிலும் தமிழர் தாயகம் குழம்பிய நிலையில் உள்ளபோது முதலீடுகளை செய்யச் சொல்லுவதை ஆழமாக நோக்கின் இலங்கை அரசின் நிகழ்ச்சித் திட்டங்களிற்கு சம்பந்தன் குழுவினர் துணை போகின்றார்கள் என்பது தெரியவரும்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் தமிழர் தாயக பிரதேசங்களில் முதலீடுகளை செய்வதால் இனியொரு ஆயுதப் போராட்டத்திற்கு நிதியுதவி வழங்கமாட்டார்கள், அப்படி வழங்கும் பட்சத்தில் தமிழர்களது முதலீடுகளே அழிக்கப்படும் அல்லது இனியொரு போராட்டம் எப்பொழுதுமே தொடங்கப்படக்கூடாது என்ற எண்ணத்தில் இந்த யோசனையை முன்வைத்திருக்கிறார்கள் என்பதை இலகுவில் புரிந்து கொள்ளலாம்.

இடப்பெயர்வுகள்

‘தமிழ்மக்கள் அடைந்த துன்பம் போதும் இனிமேலும் தொடரமுடியாது. சொந்த இடத்தில் குடியமர்த்தி இயல்பு வாழ்விற்கு திரும்பவேண்டும்’ லண்டன் மாநாட்டில் இரா சம்பந்தன் குழுவினரால் முன்வைக்கப்பட்ட அடுத்த முக்கிய வேண்டுகோள் ஆகும். இதில் என்ன நகைச்சுவை என்றால் இதே வாசகத்தை சொற்கள் மாறாமல் இலங்கை ஜனாதிபதி மகிந்த கொம்பனியும், ஏன் அமைச்சர் மேர்வின் சில்வாவும் கூட கூறியிருந்ததை யாவரும் அறிவர்.

வீடொன்றில் திருட்டுப் போனதற்கான புகார் கிடைத்த போலீசார், அதற்கான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் போது ‘களவு போனதற்குக் காரணம் திருடர்களே’  என கூறியது போலாகும். மீளக்குடியமர்த்தப் படவேண்டும் என்பதற்கு மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால் மார்க்கம் தான் வேண்டும். அதற்கான கட்டமைப்பை அறிவித்திருக்க வேண்டும். கூடவே புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பையும் வகைப்படுத்த வேண்டும்.  வெறுமனே கைத்தட்டலுக்காக நடாத்தப்பட்ட மாநாடாக போய்விட்டது  என்பதுதான் துக்கம். கைதட்டிய கூட்டம் இனியும் எதிர்காலத்தைப்பற்றி சிந்திப்பார்களா?

விரும்பியோ விரும்பாமலோ தமிழ்மக்களை ஏமாற்ற எண்ணும் சக்திகளுக்கு அவ்வப்போது சாட்டையடி கொடுத்து சந்திக்கு கொண்டுவர முயலும் எனக்கு சில இடங்களில் வசைமாரி பொழிவதும் உண்டு.

உண்மையைக் கண்டறிதல்

கடந்த முள்ளிவாய்க்கால் அனர்த்தம் வரையிலான தமிழ்மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்களுக்கான உண்மைகளை கண்டறிய வேண்டுமென இரா சம்பந்தன் சூளுரைத்தது கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியது. ‘உண்மையைக் கண்டறியவேண்டும்’ என மொட்டையாக கூறி முற்றுப்புக்கி வைத்ததை நினைவுக்கு கொண்டுவருவோம். வெறுமனே இதைக் கூறுவதால் உண்மை வெளிச்சத்துக்கு வரப்போவதில்லை. தமிழ்மக்களின் பிரதிநிதிகளாக இருப்பவர்கள் இதற்கான என்ன வேலைத்திட்டங்களை அவர்கள் மேற்கொண்டார்கள் எனவும், என்ன வேலைத்திட்டங்கள் கட்டமைக்கப்பட வேண்டுமெனவும், இதில் புலம்பெயர் மக்களின் பங்கு என்ன என்பதையும் வெளிப்படைத்தன்மையாக கூற வேண்டும்.

மறுவளமாக சற்று சிந்தித்தால், இந்த நிலை சிங்கள மக்களுக்கு ஏற்படும் பட்சத்தில் அவர்களது பாராளுமன்ற பிரதிநிதிகளின் இயங்குதளம் எப்படி அமைந்திருக்கும்? குறிப்பாக மேர்வின் சில்வா போன்றவர்களின் நிலைப்பாடு எப்படி அமைந்திருக்கும்?

தமிழ்தேசியக் கூட்டமைப்பினர் புதிதாக எதையும் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை. ‘தேர்தல் விஞ்ஞாபனம்’ அதுவே வெறும் ‘தேர்தலுக்கான விஞ்ஞாபனம்’ ஆகிவிடக்கூடாது. அதில் உள்ளவற்றை அமுல்ப்படுத்தினாலே தமிழ்மக்களுக்கான விமோசனமாகும்.

நிராகரிக்கப்படவேண்டிய சம்பந்தன் குழுவினர்

சொந்த தாயகத்தை விற்பவர்கள், சொந்த தாயை விற்பவர்களுக்கு சமனானவர்கள். வடகிழக்கு தமிழர்களிற்கு மட்டும் உரித்தானதல்ல என்று போராட்டம் அனைத்தையும் மழுங்கடிக்கும் இவர்களை விரட்டியடிக்க வேண்டியது தேசிய உணர்வுகொண்ட தமிழர்களின் கடமையாகும். எதிர்வரும் தேர்தல்கள் வரை காத்திராமல் இவர்களை நிராகரிக்க வேண்டும். தமிழ் உணர்வாளர்கள் சார்ந்து நடாத்தும் எந்த வைபவங்களிற்கும் இவர்களை அழைக்ககூடாது. திட்டமிட்டு இவர்களை ஒதுக்கி வைக்க வேண்டும். திட்டமிட்ட நிராகரிப்பை அவர்கள் உணரவேண்டும். எதிர்வரும் காலங்களில் தமிழ்மக்களின் வாக்குகள் பெறமுடியாத நிலையை இப்பொழுது இருந்தே உணரவைக்க வேண்டும். இதுவே தமிழ்மக்களின் தலையாய கடமையாகும்.

தமிழ்மக்கள் மத்தியில் இருந்து துரத்தப்படும் காட்சியை பார்க்ககாத்திருப்போம்.

-நாகலிங்கம் மதியழகன்-