Sat04202024

Last updateSun, 19 Apr 2020 8am

கூட்டமைப்பின் மீது அமெரிக்க புலம்பெயர் தமிழ் சமூகம் அழுத்தங்களை பிரயோகிக்குமா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அமெரிக்காவிற்கு செல்வது தொடர்பான செய்திகள் ஏலவே வெளியாகியிருந்தாலும் அவர்களது அமெரிக்க நிகழ்சிநிரல் தொடர்பான செய்திகள் ஏதும் இதுவரை கசியவில்லை. அறியமுடிந்த தகவல்களின்படி, கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்மந்தன் மற்றும் தேசியப்பட்டியல் உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஹில்லறி கிளின்டனை சந்திப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.


(பிந்திய தவல்களின்படி ஹில்லறியை சந்திப்பதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவென்றே அறிய முடிகிறது) இவர்களுடன் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோரும் அமெரிக்க விருந்தினர் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். செல்வம் அடைக்கலநாதன் பட்டியலில் இடம்பெற வேண்டிய ஒருவராக இருந்தபோதும் அவரால் பயணத்தில் இணைந்து கொள்ள முடியாமல் போய்விட்டது. செல்வம் ஏன் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்பதற்கு சொல்லப்படும் பதிலை இந்தக் கட்டுரை நாகரீகம் கருதி தவிர்த்துக்கொள்ள விரும்புகிறது.

இலங்கை அரசுக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுக்கள் சர்வதேச மட்டத்தில் அதிகரித்து வருகின்ற சூழலில் கூட்டமைப்பின் அமெரிக்க பயணம் முக்கியத்துவம் வாய்ந்தவொன்றாக நோக்கப்படுகிறது. பொதுவாகவே ஈழத் தமிழர் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது சற்று ஆச்சரியத்தால் நமது விழிகள் அகலத் திறப்பதுண்டு. இது நமது தமிழ் மத்தியதரவர்க்கத்தில் நிலவிவரும் மேற்கத்தைய மோகத்தின் விளைவாகவும் இருக்கலாம். நமது ஆச்சரியத்திற்கு பால்வார்ப்பது போன்று, இலங்கையின் இலட்சிய இனவாதிகளில் ஒருவரான தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர, த.தே.கூட்டமைப்பு அமெரிக்காவுடன் அரசியல் தீர்வு குறித்துப் பேசுவது தேசத் துரோக செயலாகும், எமது நாட்டின் பரம எதிரிகளுடன் உள்நாட்டு விடயங்கள் தொடர்பில் பேசுவதானது எங்களது நாட்டுக்கெதிரான சூழ்ச்சிகரமான திட்டமாகும் என்றுவேறு குறிப்பிட்டிருக்கின்றார். இந்தக் கருத்தை வைத்துக்கொண்டு கொஞ்சக் காலத்தை ஓட்டலாம் போல் தெரிகிறது.

இதே அமரதாச புலிகள் வலுவாக இருந்த காலத்தில் பிரபாகரன்தான் எம்மைக் காத்துநிற்கும் கடவுள், பிரபாகரன் மட்டும் இல்லாதிருந்தால் நாம் எப்போதோ சர்வதேச சதிக்குப் பலியாகியிருப்போம் என்று குறிப்பிட்டிருந்தார் என்பது வேறு கதை. ஒரு வகையில் குணதாச அமரசேகர சொல்லுவது போன்று, பிரபாகரன் தமிழர் அரசியல் சர்வதேச நிகழ்சிநிரலுக்குள் செல்வதை தடுத்துநிறுத்தியிருந்தார் என்பது உண்மைதான். அந்தவகையில் பிரபாகரனின் இறுக்கமான நிலைப்பாடு தங்களுக்கே அதிக நன்மையைச் செய்தது என்பது அமரதாசவின் கணிப்பு. பிரபாகரன் தமிழ் மக்களுக்குச் சாதமான ஒன்றாகப் பார்த்த விடயத்தை, ஒரு சிங்களவாதச் செயற்பாட்டாளரோ தங்களுக்குச் சாதமானதாகப் பார்த்திருக்கிறார்.

ஆனால் அமரதாசவின் முன்னைய கணிப்பில் உண்மையில்லாமலில்லை. ஒருவேளை பிரபாகரன் சர்வதேச நிகழ்சிநிரலுடன் ஒத்துப் போயிருந்தால் இன்று தமிழ் மக்கள் பிறிதொரு சூழலை அனுபவித்திருக்க முடியும். ஆனால் இப்போதோ நிலைமை தலைகீழாகிவிட்டது. பிரபாகரனது அரசியலின் தலைகீழ் வடிவமாக இருக்கிறது இன்றைய தமிழ்த் தேசிய தலைமையெனப்படும் கூட்டமைப்பு. த.தே.கூட்டமைப்பால் செய்யக் கூடிய ஒரேயொரு விடயமே சர்வதேச சமூகத்திடம் தமது பிரச்சனைகளைச் சொல்வது மட்டும்தான். இதன் ஒரு பகுதியாகத்தான் கூட்டமைப்பின் அமெரிக்க விஜயமும் இடம்பெறுகிறது. நமது மக்கள் இருக்கும் நிலையில் இதைத் தவிர வேறு எந்தவொரு வழியும் இல்லை என்பதும் உண்மைதான். அமரதாச போன்ற இனவாதிகள் இன்றும் சிந்திக்க மறுத்துவரும் விடயம் – இலங்கைக்குள் இந்தப் பிரச்சனைகளைச் தீர்த்திருந்தால் ஏன் கூட்டமைப்பு அமெரிக்காவிற்குச் செல்லப் போகின்றது. எனவே பிரச்சனை ஆட்சியாளர்களின் பக்கம் இருக்கிறதேயன்றி கூட்டமைப்பின் பக்கம் இல்லை.

அமெரிக்க அழைப்பின் பின்னணி என்னவாக இருக்க முடியும்? சர்வதேச சூழலில், இலங்கைக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுக்கள் அதிகரித்துவரும் நிலையில், அமெரிக்க உயர்மட்டச் சந்திப்பு எந்தளவு முக்கியத்துவமுடையதாக அமையக் கூடும். இப்படியாகப் பல்வேறு கேள்விகள் நம்மத்தியில் எழுந்துள்ளன. சிங்கள இனவாதிகள் மிகைப்படுத்துவது போன்றும், நமது ஆய்வாளர்கள் சிலர் சொல்லிவருவது போன்றும் அப்படியெதுவும் பெரிதாக நடந்துவிடப் போவதில்லை. வெளியில் கசிந்த தகவல்களின்படி போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விடயங்களை விட்டுவிட்டு, பிரச்சனைக்கான தீர்வில் கரிசனை கொள்ளுமாறு கூட்டமைப்பிடம் அமெரிக்கா சொல்லக் கூடுமென்றே கருதப்படுகிறது. சமீபகாலமாக, இலங்கைக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தனது தீவிர அக்கறையை வெளிப்படுத்திவரும் அமெரிக்கா ஏன் அவ்வாறு கூற வேண்டுமென்று ஒருவர் கேட்கலாம்.

போர்க்குற்றச்சாட்டுக்கள் என்பது ஒரு சர்வதேசப் பிரச்சனை. அதனை சர்வதேசம் பார்த்துக் கொள்ளும் என்பதுதான் இதற்குப் பின்னாலுள்ள வாதம். எனவே த.தே.கூட்டமைப்பின் பொறுப்பு கிடைத்திருக்கும் வாய்ப்புக்களைப் பயன்படுத்தி, பிரச்சனைக்கான நிரந்தரத் தீர்வொன்றைக் காணும் வகையில் அமைந்திருக்க வேண்டும் என்பது இன்னொரு வாதம். உண்மையில் த.தே.கூட்டமைப்பின் எதிர்பார்ப்பு இந்தியாவேயொழிய அமெரிக்கா அல்ல. கூட்டமைப்பு, இந்திய ஆலோசனையில்லாமல் அமெரிக்காவிற்குச் செல்லவுமில்லை, செல்லவும் முடியாது. கொழும்பின் மீது அதிக அழுத்தங்களை பிரயோகிக்கக் கூடிய நிலையில் இந்தியா இல்லை. அவ்வாறு அழுத்தங்களை பிரயோகிக்க முற்பட்டால், அதுவே கொழும்பு சீனாவுடன் அதிகம் நெருங்குவதற்கான வாய்ப்பாகவும் அமைந்துவிடும். எனவே இந்தப் பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டுதான் தற்போது இந்தியாவின் இடத்தை அமெரிக்கா எடுத்துக் கொண்டுள்ளது. ஆனால் அனைத்தும் இந்தியாவின் மேற்பார்வையில்தான் அரங்கேறிவருகின்றது. வாதமெல்லாம் சரிதான் ஆனால் கூட்டமைப்பால் நிலைமைகளைச் சாதகமாகக் கையாள முடியுமா? கூட்டமைப்போ தள்ளாடிக் கொண்டிருக்கிறது!

இந்தப் பின்புலத்தில் அமெரிக்கா நோக்கிச் செல்லும் த.தே.கூட்டமைப்பின் மீது, அமெரிக்க புலம்பெயர் சமூகம் உருப்படியான அழுத்தங்கள் எதனையும் கொடுக்குமா, என்ற கேள்வி எழுகிறது. இந்தக் கட்டுரை ‘உருப்படியான அழுத்தம்’ என்று குறிப்பிடுவதன் பின்னால் ஒரு அவதானம் இருக்கிறது. புலம்பெயர் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் சக்திகள் எவையும் இலங்கையின் பிரச்சனைக்கு ஒரு நிரந்தரமான தீர்வு கிடைக்க வேண்டுமென்பதில் பெரியளவில் அக்கறை கொண்டிருக்கவில்லை, மாறாக போர்க்குற்றச்சாட்டு தொடர்பிலேயே அக்கறை கொண்டிருக்கின்றனர் என்றவாறான குற்றச்சாட்டொன்று நிலவுகிறது. 2009இற்கு பின்னரான புலம்பெயர் அரசியல் செயற்பாடுகளை அவதானித்துவரும் ஒருவர் இத்தகைய குற்றச்சாட்டொன்றை முன்வைப்பாராயின் அதில் நியாயமுண்டு. புலம்பெயர் சக்திகளின் பிரச்சனையை ஒரு வரியில் சொல்வதானால் – கேக் கிடைக்கும் வரைக்கும் பாணைச் சாப்பிடாதீர்கள் – என்னும் நிலையில் அது இருக்கிறது.

ஆனால் இலங்கையில் வாழ்ந்துகொண்டிருக்கும், ஈழத் தமிழ் மக்களின் பிரச்சனையோ வேறாக இருக்கிறது. அந்த மக்களின் ஆதரவில் தலைமை அரியாசனத்தைப் பெற்றிருக்கும் த.தே.கூட்டமைப்பின் கடப்பாடோ வேறாக இருக்கிறது. இந்த நிலைமைகளை சரியாக விளங்கக் கொண்டு அமெரிக்க புலம்பெயர் சமூகம் கூட்டமைப்பின் மீது அவசியம் கருதிய அழுத்தமொன்றை பிரயோகிக்குமா? அமெரிக்க புலம்பெயர் சமூகம் ஏனைய நாடுகளில் இயங்கும் குழுக்கள் போலல்லாது நிலைமைகளை அறிவுபூர்வமாக அணுகக்கூடிய சமூகம் என்றே சொல்லப்படுகிறது. புவிசார் அரசியல் நியாயங்களுக்கு முன்னால் போர்க் குற்றச்சாட்டுக்கள், மனிதவுரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் அனைத்துக்கும் என்ன நடக்கும் என்பதை அறிந்துகொள்ளக் கூடியதொரு சமூகமாகவும் அமெரிக்க புலம்பெயர் சமூகம் இருக்கிறது என்ற நம்பிக்கையும் இந்தக் கட்டுரையாளரிடம் ஓரளவில் உண்டு. எனவே இந்தப்பின்ணியில் அமெரிக்க புலம்பெயர் சமூகம் எத்தகையதொரு அழுத்தத்தை கூட்டமைப்பின் மீது பிரயோகிப்பது பொருத்தமாக அமையலாம்?

2009இற்கு பின்னரான ஈழத்துச் சூழலானது, கூட்டு அரசியல் தலைமைத்துவமொன்றிற்கான தேவைப்பாட்டையே கொண்டிருக்கிறது. தனிக்கட்சி வாதங்கள் எந்தவகையிலும் பொருத்தமற்றது என்பதுடன் அது நிலைமைகளை மேலும் பலவீனப்படுத்துவதற்கே வழிவகுக்கும். இந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது இன்றைய சூழலின் தேவையை நிவர்த்திசெய்யக் கூடியதொரு பொருத்தமான அரசியல் வடிவமாக இருக்கிறது. ஆனால் அது வடிவமாக இருக்கிறதே தவிர, ஒரு அரசியல் கட்டமைப்பாக இல்லை. எனவே இதற்கான ஆலோசனைகளை, அழுத்தங்களை அமெரிக்க புலம்பெயர் சமூகம் கொடுக்க முடியும். ஆனால் கொடுக்குமா?

அமெரிக்க புலம்பெயர் தமிழர்கள் பற்றி நன்கறிந்த நண்பர் ஒருவரிடம் இதுபற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போது அவரோ பிறிதொரு விடயத்தைச் சொல்லுகிறார் – அப்படியான அழுத்தங்களையெல்லாம் அங்கிருந்து எதிர்பார்க்க முடியாது. வேண்டுமானால் அவர்கள் கூட்டமைப்பினருக்கு நல்ல அன்பளிப்புக்களைக் கொடுக்கக் கூடும். புலம்பெயர் சூழலில் சுயாதீனமாகச் சிந்திப்பவர்கள் சில விடயங்களை ஆழமாகச் சுட்டிக் காட்டுகின்றனர் – புலம்பெயர் சூழலில் வாழும் தமிழர்கள் எதிர்பார்த்த விடுதலை அவர்களுக்குக் கிடைத்துவிட்டது. இப்படியொரு வாழ்க்கையே, பெரும்பாலான தமிழ் மத்தியதர வர்க்கத்தினரின் எதிர்பார்ப்பாகவும் இருந்தது.

எனவே இலங்கையில் வாழவேண்டிய நிலையில் இருக்கும் மக்களின் தேவைகள் குறித்து இங்கிருப்போர் பெரிதாக அலட்டிக் கொள்ளப் போவதில்லை. 2009இற்கு பின்னர் ஏற்பட்ட அசாதாரண சூழலின்போது புலம்பெயர் தமிழ்ச் சமூகங்களின் அரசியல் வெளிப்பாடுகளை உற்றுநோக்கும் ஒருவர் இத்தகையதொரு முடிவுக்குவருவது ஆச்சரியமான ஒன்றல்லதான். நிலைமைகள் எதுவாக இருப்பினும் மீண்டும் மீண்டும் தன் நியாயத்தைச் சொல்வதில் சலிக்காத விக்கிரமாதித்திய மனோநிலையில், சில விடயங்களை இந்தக் கட்டுரை தொட்டுக்காட்ட முற்பட்டிருக்கிறது.

-யதீந்திரா

பிரதி மூலம் மறுஆய்வு