Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

த.தே.கூ.அமைப்பினர் சரியானவர்களா? என்ற கேள்விக்கு முன், நாம் சரியான அரசியலை வெளிப்படுத்துகின்றோமா ???

தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் அமெரிக்க, கனடிய, ஐரோப்பிய விஜயம் குறித்து இன்று பல்வேறுபட்ட வாதப் பிரதிவாதங்கள் நடைபெறுகின்றன. இவைகளில் முக்கியமாக சில கட்டுரைகள், இவர்களுடைய விஜயத்தை எதிர்த்தும் மற்றும் சில ஆதரித்தும் ஊடகங்களில் விவாதிக்கப்படுகின்றன. ஆனால் எவரும் விசைய ஞானத்தோடு அணுகியதாகக் கருதமுடியவில்லை.

 

த.தே.கூ அமைப்பினர் தமிழர்களின் ஏகபிரதிநிதிகளல்ல என்ற வாதமும் முன் வைக்கப்படுகின்றது. இந்தவாதம் எந்த அளவுக்கு அர்த்தமுள்ளது என்று என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை? தமிழ் மக்கள் அனைவரும் இவர்களுக்கு வாக்களிக்கவில்லை என்பது உண்மையே. பெரும்பான்மையான தமிழ் மக்கள் த.தே.கூ. அமைப்பினருக்கே வாக்களித்துள்ளனர். மஹிந்த அரசுக்கு இலங்கை மக்கள் அனைவரும் வாக்களிக்கவில்லை. ஆனால் பாராளுமன்ற தேர்தல் முறையின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற கட்சி என்ற அடிப்படையில் ஆட்சிப் பொறுப்பில் மஹிந்த உள்ளார். தமிழ் மக்கள் இந்த அரசுக்கு அங்கீகாரம் வழங்கவேயில்லை. இருந்தும் இந்த ஆட்சிக்குட்பட்டவர்களாகவே தமிழ் மக்கள் உள்ளனர். இவைகளை விளங்கிக் கொண்டு விடயத்துக்கு வரலாம் என நினைக்கின்றேன்.

த.தே.கூ அமைப்பினரை, மேற்கத்தைய அரசுகள் ஏன் அழைத்தார்கள்? என்ன பேசினார்கள் என்ற எதையும் த.தே.கூ.அமைப்பினர் வெளியிடாத போதும், என்ன பேசியிருப்பார்கள் என்பது மஹிந்த உட்பட  அரசியல் தெரிந்த அனைவருக்கும் தெரிந்த விடையம் தான். அதனால் தான் அரசு இவ்விடையத்தையிட்டு பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஒரு அர்த்தமுள்ள அரசியல் அதிகார அலகை வழங்கும்படி இலங்கையை எந்தவொரு நாடும் நிர்ப்பந்தம் செய்யவும் முடியாது. செய்யவும் மாட்டார்கள். அதற்கான சர்வதேச முக்கியத்துவம் பெற்ற இடமாக இலங்கையின் தமிழர் பிரதேசம் இன்றைய சுழலில் இல்லை. ஒருவகையில் சர்வதேச முக்கியத்துவம்  பெற்ற பகுதியாக அல்லது சர்வதேசத்துக்கு (சர்வதேசம் என்பது ஏகாதிப்பதியங்களையே குறிக்கின்றது. அது தவிர வேறில்லை)  தேவையான பகுதியாக அது இருந்திருந்தால் யாரும் அழைக்காமலே வந்து சீரளித்திருப்பார்கள் என்பது வேறுவிடையம். அரசின் சீன சர்புக்கொள்கைக்காக மேற்குலகம் போர்குற்ற விசாரணைக்குள் அரசை மாட்டிவுடுமோ என்ற ஒரே பயம் மாத்திரமே அவர்களுக்கு உண்டு. அது தவிர த.தே.கூ அமைப்பினர் போர்குற்ற விசாரணைக்காக வெளிநாடுகளிடம் எவ்வித கோரிக்கையும் வைக்கமாட்டார்கள் என்பது நமக்கும்,  அரசுக்கும் நன்கு தெரிந்த விடையம். அவர்கள் வன்னி படுகொலை பற்றி இது வரை எதுவித அர்த்தமுள்ள வகையிலும் பாராளுமன்றத்தில் பதிவு செய்ததோ, கண்டன உரை நிகழ்த்தியதோ இல்லை.  குறிப்பாக சொல்வதாயின்  த.தே.கூ அமைப்பினர் போர்குற்ற விசாரணைக்காக ஒரு சிறு துரும்பைக் கூட நகர்த்தியதில்லை.

இவைகள் எல்லாம் உண்மை தான். த.தே.கூ அமைப்பினர் போர்குற்ற விசாரணையை கோராமலிருப்பது, மேற்கு நாடுகளுக்கான பயணம் போன்ற அனைத்து நாடகங்களும் இந்தியாவின் மேற்பார்வையிலேயே நடந்து வருகின்றன என்பது புலத்தில் உள்ள  தமிழ் ஈழ கனவாளர்கள் மற்றும் நாடு கடந்த த.ஈ.பா. மன்றவாதிகளையும் தவிர ஏனையோருக்கு நன்கு விளங்கும். கடந்த காலங்களில் இலங்கையின் அனைத்து அரசுகளும், தமிழர் தரப்போடு செய்து கொண்ட ஒப்பந்தங்களை மீறியோ? அல்லது கிளித்தேறிந்தோ தான் ஊதாசீனம் செய்தது என்பதை உலகம் அறியும். அதன் பின்னர் தான் உலக நாடுகளிடம் முறையிடும் அரசியல் தொடங்கியது. சர்வதேச அளவில் பிரச்சாரம் செய்வதும், உலக நாடுகளால் ஒதுக்கப்பட்ட பிரச்சனையாக தமிழர் பிரச்சனை இருப்பதும் உலகுக்கு மீண்டும் சுட்டி காட்டப்படவேண்டிய  தேவை இன்னும் அற்றுபோகவில்லை.  ஆனால் நமது நாட்டு அரசியலில், நமது பிரச்சனையில் நாமே தீர்மான சக்தியாக இருக்க வேண்டும். வேறு எந்த நாடும் நமது பிரச்சனையை தங்கள் தேவைக்கு பயன்படுத்தாத அரசியலை கடைப்பிடிக்க வேண்டும். ஏகாதிபத்தியங்கள் நம்மை கற்பழிக்க நாமே ஆடை கழட்டி அளைப்பதுபோலில்லாமல், அர்த்தம் உள்ள அரசியலை த.தே.கூ அமைப்பினர் செய்ய வேண்டும். அது தவிர நாம் அவர்களிடமிருந்து எந்தவித பொதுவுடைமை அரசியலையும் எதிர்பார்க்கவில்லை. சோகம் என்னவனில் இந்த இடத்தில் தான்  த.தே.கூ அமைப்பினரிடம் அரசியல் வெற்றிடம் தெரிகின்றது. இந்த வெற்றுத்தன்மை தமிழர்களை அரசியல் அநாதைகளாக்கும் என்பதில் எனக்கு எவ்வித மாற்றுகருத்துமில்லை.

 பெரு, பொலிவியா, நேபாளம் போன்ற நாடுகளின் மாவோயிஸ்ட்டுக்களும்; மத்தியக்கிழக்கின் P.L.O. ஏனைய ஆபிரிக்க தேசிய விடுதலை அமைப்புகளையும், இஸ்லாமிய மத அடிப்படைவாத பிருவினரும் ஐரோப்பாவில் தங்கள் கருத்தியல் சார்ந்த அமைப்புகளோடு தொடர்புகளை ஏற்படுத்தியும், பொது சனமட்டத்தில் பிரச்சாரத்தையும் செய்கின்றனர். இது இன்றைய தொலைத் தொடர்பு உலகமைப்பின் தவிர்க்க முடியாத ஒரு அம்சம். இதில் வேறுபாடு என்னவெனில் நான் குறிப்பிட்ட வலதுசாரி, இடதுசாரி அமைப்புகளுக்கு அவர்களுடைய நாட்டில் செயல்திறன் மிக்க அரசியலில் ஊன்றிதடம் பதித்து செயல்படுகின்றார்கள். அது த.தே.கூ அமைப்பினரிடம் இல்லை. இதை தமிழ் மக்கள் மிக விரைவாக உணர்ந்து இவர்களை நிராகரிப்பார்கள். தற்போது கூட தமிழ் மக்கள் அரசின் மீதுள்ள வெறுப்பை காட்டவே த.தே.கூ அமைப்புக்கு வாக்களிக்கின்றனர். மாறாக விரும்பி அல்ல என்பதை நாம் உணர வேண்டும்.

இன்றைய யதார்த்த நிலைமைகளில் த.தே.கூ அமைப்பினருக்கு மாற்று யார்? ஏன் அதற்கான மாற்று அரசியல் சக்தி மக்களிடம் இருந்து உருவாகவில்லை? (யுத்தம் முடிந்து கிட்டதட்ட மூன்று வருடங்களாகின்றன) இதற்கு புலிகள் ஒரு முக்கிய காரணம் என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். அதே வேளை அது மாத்திரமே ஒரு முழுமையான காரணியாகிவிடாது. டக்ளஸ், கருணா, பிள்ளையான்,  அல்லது K.P.யா?  த.தே.கூ அமைப்புக்கு மாற்று? தமிழ் நாட்டு தமிழர்கள் தங்கள் தலைவர்களை சினிமா கொட்டகைகளில் தேர்ந்தெடுக்கிறார்கள். நமது மக்கள் கருணா, பிள்ளையான், டக்ளஸ், த.தே.கூ இவர்களுக்குள் இருந்து தானே தேர்வு செய்யும் துர்ப்பாக்கிய  நிலைக்குள் இருக்கின்றனர். அந்த வகையில் தமிழர்களின் தெரிவில் என்ன தவறு ? இருப்பதற்குள் ஒன்றைத்தானே தேர்வு செய்ய முடியும். அந்த வகையில் தமிழர்களின் தெரிவில் என்ன தவறு? இது போன்ற விவாதங்களுக்கான கருவை இந்த பொறுப்பற்ற கட்டுரையாளர்கள் தானே தருகின்றனர்.

அமெரிக்கா அழைத்தால் நாம் அதை நிராகரிப்பது தான் புரட்சிகரமானதா? நீங்கள் ஏகாதிபத்தியம் நாங்கள் பேசவரமாட்டோம் என்று சொல்வதா? அமெரிக்கா அழைப்பதிநூடாக நமது பிரச்சனை உலக அளவில் ஒரு பொதுமட்டத்தில் தீர்க்கப்படாத பிரச்சனை என்பது விளங்க்கிக் கொள்ளப்படுகின்றதே? நமது அரசியலிலும், குறிக்கோளிலும் கவனமாக இருந்து கொண்டு நாம் யாரோடும் பேசலாம் என்பது என் எண்ணம். அமெரிக்காவோடு நாம் பேசினால் அவர்களது கைப்பாவையாக இருந்து தான் ஆக வேண்டும் என்பது பொருளா? த.தே.கூ.அமைப்பினர் அமெரிக்காவின் நோக்கத்தை விளங்கிக் கொள்ளக் கூடிய அரசியல் ஆளுமை உள்ளவர்களை உள்வாங்கிக் கொண்ட கட்சியல்ல என்பது, எவ்வித அரசியல் சாரமுமற்ற அவர்களது அறிக்கையில் இருந்து புரிந்து கொள்ள முடிகின்றது என்பது வேறு விடயம். இது தான் இங்கே விமர்சனத்துக்குரியது.

ஹமாஸ் இஸ்ரேலோடு மாத்திரமல்லாமல் அமெரிக்கப் பிரதிநிதிகளோடும்  பேச்சுக்கள் நடத்தினார்கள். அதனால் தான் அவர்களால் ஒரு இஸ்ரேல் ராணுவக்கைதியை பணயமாக வைத்துப் பேரம்பேசி , 1027 பாலஸ்த்தீனக் கைதிகளை விடுதலை செய்ய முடிகின்றது. எனது கேள்விகளுக்குப் பொருள் த.தே.கூ. அமைப்பினர் சரியான அரசியல் சக்திகள் என்பதல்ல. அரசியலே இல்லாத, சைவ வேளாளசித்தாந்த தமிழ்த் தேசிய பிற்போக்குவாதிகள் என்பது என் கருத்து. சமகாலத்தில் பலகட்டுரைகள் அமெரிக்காவோடு பேசுவதே தவறு என்ற கருத்தோடு வெளிவந்து கொண்டிருக்கின்றன! இந்தப் பேச்சுவார்த்தையில் த.தே.கூ.அமைப்பினர் எந்த நிலை எடுக்க வேண்டும். எப்படி நாம் இதை அணுகவேண்டும் என்ற புரிதலோடு யாரும் எழுதவில்லை. இப்படி நாம் எழுதிக் கொண்டிருந்தால், யதார்த்த அரசியலை நிலைமைகளின் தன்மைக்கேற்ப சித்தாந்தத்தோடினைத்து புரட்சிகரமாக மாற்ற முடியாத வெறும் சித்தாந்தத் தூய்மையாளர்கள் மாத்திரமே! வேறில்லை.

“புரட்சிக்கான கரு கூர்மையான சமூக முரண்பாட்டிலிருந்தே உருப்பெறுகின்றது. இதை யாரும் நிர்ணயம் செய்யவோ, தீர்மானிக்கவோ முடியாது. அதே போன்று எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்தி விடவும் முடியாது. சமூக நிலமைகளைக் கணித்து புரட்சிகர மாக்சிச, லெனினிச, மாவோயிஸ்ட்டுக்கள் முன்னணியில் இருந்து வளி நடத்த வேண்டும். தவறினால் பிற்போக்குசக்திகள் சூழ்நிலையை சரியாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்.” 

அது தான் இன்று நடந்து கொண்டிருக்கின்றது. ஒரு பிற்போக்கு சக்தியின் அழிவில், இன்னுமோர் பிற்போக்கு சக்தி உத்வேகம்  பெற்றிருக்கின்றது. பாராளுமன்றப்பாதையில் பிரயோசனமில்லை, என்ற கருத்துக்களும் அவ்வப்போது எட்டிப்பார்க்கின்றன. இவைகளெல்லாம் அரசியல் முதிர்ச்சியற்ற எழுத்துக்களாகவே வெளிப்படுகின்றன. பாராளுமன்றம் தமிழ் மக்களின் அரசியலுக்காக பயன் படுத்தப்படுகின்றதா? என்றால் இல்லை. அது த.தே.கூ.அமைப்பினரின் சுக போகங்களுக்காகவும், அவர்களது சமூக அந்தஸ்த்தை உயர்த்தி பிரபுக்களாக வலம் வரவுமே உதவுகின்றது. அதை விமர்சியுங்கள், இக்காலகட்டத்தில் பாராளுமன்றத்தை எப்படி பயன் படுத்த வேண்டும் என்பதை எழுதுங்கள்.

குட்டி பூர்சுவாக்களின் கோரிக்கைகள் என்று தளத்தில் இருந்து ஒதுங்குவது  பிற்போக்கானது. நீங்களும் உங்கள் கோசத்தோடு செயற்படுங்கள். மக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்போவதில்லை. புரிந்து கொண்டு ஏற்றுக்கொள்வார்கள். அல்லது மாக்சிசத்தில் இருந்து ஒரு கடும் சொல்லை எடுத்து எனக்கு முத்திரை குத்திவிடுங்கள்.

இலக்கியா

07/11/2011