Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

அமிர்தலிங்கம் குலரத்தினம் அவர்களிற்கான அஞ்சலி: உரை

அனைவருக்கும் வணக்கம். அமிர்தலிங்கம் குலரத்தினம் அவர்களது இறுதி நிகழ்விற்காக கூடியிருக்கிறோம். இது அவரின் உடலிற்கான இறுதி நிகழ்வு மட்டுமே. அவரின் பெளதிக தோற்றத்திற்கான பிரியாவிடை மட்டுமே. ஆனால் அவர் தனது சமத்துவ, பொதுவுடமை, சாதி மறுப்பு கொள்கைகளை அடுத்த தலைமுறைக்கு கொடுத்து சென்றதன் மூலம் வாழ்கிறார். அவரதும்,அவர் போன்ற ஆயிரம் ஆயிரம் தோழர்களினதும் போராட்டங்கள் நமது சமுதாயத்தில் ஏற்படுத்திய மாற்றங்களில் வாழ்கிறார்.

பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் மிகுந்த அந்தக் காலத்தில் அவர் தனது தங்கையாரை, தான் பங்கு கொண்ட எல்லா போராட்டங்களிலும் கலந்து கொள்ள வைத்தார். மற்றவர்களை போராடச் சொல்ல முதல் தானும், தன்னுடைய குடும்பத்தினரும் முதலில் பங்கு கொள்ள வேண்டும் என்ற உறுதி அவரிடம் இருந்தது.

இன்றைய நவீன காலத்திலும் தமிழ் சமுதாயத்தின் மிகக்கொடிய நோயாக இருக்கும் சாதிப்பிரச்சனை அந்தக்காலத்தில் எவ்வளவு கொடூரமாக இருந்திருக்கும். அவர் சாதிக்கொடுமைக்கு எதிராக சமுதாயத்திலும், தனது குடும்பத்திலும் போராடியிருக்கின்றார். தாழ்த்தப்பட்ட மக்களிற்கு சிரட்டையில் தண்ணீர் கொடுத்து வந்த காலம் அது. அவர் தனது நண்பனான ஒரு தாழ்த்தப்பட்ட சமுகத்தை சேர்ந்தவரை வீட்டிற்கு அழைத்து வந்து தனது தங்கையாரைக் கொண்டு வீட்டில் உள்ளவர்கள் தேனீர் குடிக்கும் கோப்பையிலேயே தேனீர் போட்டு அவறிற்கு கொடுத்தார். வந்தவர் போன பின்பு அவர் என்ன சாதி என்று தெரிய வந்து அவரது பெற்றோர்கள் கண்டித்த போது அவர்களை உறுதியோடு எதிர்த்து நின்றார்.

தமிழரசுக்கட்சி தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை என்பவற்றை பேச முதல் அவர் சார்ந்த இலங்கை கம்யுனிஸ்ட்டு கட்சியினரே தமிழ்மக்கள் ஒரு தேசத்தவர்கள் என்று பருத்தித்துறையில் நடந்த மாநாட்டில் பிரகடனம் செய்தனர் என்பதை அவருடன் பேசும் போது மிகுந்த பெருமையுடன் குறிப்பிட்டார்.

அவர் மிகுந்த நகைச்சுவை உணர்ச்சி கொண்டவர். ஒருமுறை பேசும் போது சொன்னார். மற்றவர்கள் தண்ணியடித்தால் சத்தி எடுப்பார்கள். ஆனால் எனக்கு சாப்பிட்டால் சத்தி வருகிறது. தண்ணியடித்தால் நன்றாக இருக்கிறது. இப்படி வாழ்வை கொண்டாடிய மனிதர் அவர். அவரை பாதுகாத்து கவனித்துக் கொண்ட அவரின் குடும்பத்தினருக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

இலங்கை மக்களிற்கு விடிவு என்பது இலங்கையின் ஒடுக்கப்படும் தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்களின் இணைந்த போராட்டங்களின் மூலமே சாத்தியம் என்பதில் அன்றில் இருந்து தனது இறுதிநாட்கள் வரை உறுதியாக நின்ற போராளிக்கு விடை கொடுப்போம். புதிய ஜனநாயக மக்கள் முன்ணணியின் செவ்வணக்கம் தோழரே, சென்று வாருங்கள்.