Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

இறுதி எச்சரிக்கை, உலகிலிருந்து விடுதலை பெற்றுவிடுவீர்கள் - யாழ் பல்கலைக்கழகத்தினுள் துண்டுப்பிரசுரம்

யாழ்.பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆசிரியர்கள் மாணவ தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு மீண்டும் அச்சுறுத்தல் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன என்று பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன் அந்த துண்டுப்பிரசுரங்களில் குடாநாட்டில் இருந்து வெளியாகும் பத்திரிகைகளின் பத்திரிகையாளர்கள் இருவரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக வாளாகத்தில் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலயத்தில் 20.05.2014 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் போது காலை முதல் மதியம் வரை சுமார் 15 புலனாய்வாளர்கள் ஆலயத்தின் உள்ளே காணப்பட்டனர் என்றும் என்ன காரணத்துக்காக பூசைகள் நடைபெறுகின்றன என்பது குறித்த விவரங்களை அவர்கள் சேகரித்துக் கொண்டிருந்தனர் என்றும் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

கும்பாபிஷேகம் முடிவடைந்த பின்னர் அவர்களும் வெளியேறினர். அதன்பின்னர் குறித்த துண்டுப்பிரசுரங்கள் குறித்துத் தெரிய வந்தது என்று பல்கலைக்கழகத் தரப்பு தெரிவித்துள்ளது.

இறுதி எச்சரிக்கை என்ற தலைப்பில் தேசம் காக்கும் படை வெளியிட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருக்கும் அந்த துண்டுப்பிரசுரத்தில்,

'யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பயங்கரவாதத்தை வளர்க்க முற்படுவோர் தண்டிக்கப்படவுள்ளனர். பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அந்தப் பயங்கரவாதத்தை யாழ்.பல்கலைக்கழகம் ஊடாக வளர்த்தெடுக்க முயற்சி செய்து வருகின்றனர்.

இவ்வாறு முயற்சி செய்யும் தேச விரோத சக்திகளை நாம் இனங்கண்டுள்ளோம். அவர்களில் யாழ்.பல்கலைக்கழக பேராசிரியர்கள், பீடாதிபதிகள், மாணவர்கள் ஆகியோர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களுடன் சேர்ந்து சில பத்திரிகையாளர்களும் செயற்பட்டு வருவதாக எமக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இவர்களுக்கு பலமுறை எச்சரிக்கை கூறியிருந்தும் அவர்கள் திருந்துவதாக இல்லை. தொடர்ந்தும் மாணவர்களுடனும் ஆசிரியர்களுடனும் சேர்ந்து பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது இவர்களுக்கு இறுதி எச்சரிக்கை ஆகும். இவர்கள் இனியும் திருந்தாவிட்டால் இறுதித் தீர்ப்பு மரணதண்டனையே. சிலருக்கு இறுதி நாளும் குறிக்கப்பட்டுவிட்டது. கடந்த எச்சரிக்கைகளைப் போல் இதனையும் சாதாரணமாகக் கருதிவிட வேண்டாம். உங்களுக்கு இவ்வுலகில் இருந்து விடுதலை நிச்சயம்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் துண்டுப்பிரசுரங்களால் பல்கலைக்கழகத்தின் இயல்புநிலை மாறியுள்ளது என்றும் மாணவர்கள் மத்தியில் அச்சநிலை காணப்படுகின்றது என்றும் கூறப்படுகின்றது.