Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

புலம்பெயர் 16 அமைப்புகளுக்கும், 424 பேருக்கும் இலங்கை அரசாங்கம் தடை!

ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் உரிமைப்போர் சரியான திசை நோக்கின் தடைகள் தானாகத் தகரும்!!

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்துடன் பதினைந்து மேலதிக இயக்கங்களும் தடை செய்யப்பட்டுள்ளதுடன், இந்த அமைப்புக்களுடன் தொடர்வுள்ளவர்கள் என நம்பப்படுகின்ற 424 பேருக்கு இலங்கைக்கு வருவதற்க்கான தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கையிலிருந்து இந்த இயக்கங்களுடன் தொடர்பு வைத்து கொள்பவர்களும் அவற்றின் நிதி உதவிகளை பெறுவோரும் குற்றவாளிகளாக காணப்படுவார்கள்.

அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டை கோபுரத் தாக்குதலின் பின்னர் ஐக்கிய நாடுகள் பாதுக்காப்புச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 1373இன் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் இந்த அமைப்புக்களை வெளிநாட்டுப் பயங்கரவாதிகள் எனத் தடைசெய்கின்றது.

ஐ.நாவில் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட 1373 தீர்மானத்தின் அடிப்படையில் பயங்கரவாதத்தை அழிப்பதற்காக ஒரு நாடு மற்றதற்கு உதவி புரிய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.!

இரட்டை கோபுரங்களில் தாக்குதலை அடுத்து ஐ.நா பாதுகாப்பு சபையில் அமெரிக்கா சமர்ப்பித்த இந்தப் பிரேரணை வெளிநாடுகளில் இருந்து இயங்கும் தீவிரவாத அமைப்புக்களை தடை செய்யும் அதிகாரம் கொண்டது. இதன் அடிப்படையில் இருந்து இலங்கை அரசாங்கம் அமெரிக்கா உட்பட கனடா, பிரித்தானியா, நோர்வே, இத்தாலி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து இயங்கும் விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கங்களையும், அதன் செயறபாடுகளையும் தடை செய்யும் நோக்கிலுள்ளது.!

இப்படியானதொரு "இக்கட்டம்" இவ்வடிவில் வந்துதீருமென புலம்பெயர் தமிழ்த் தேசியத்தின் இயங்கு சக்தி கனவில் கூட நினைத்து பார்த்திருக்கமாட்டார்கள். எம் தமிழ்ஈழப் போராட்டம் சமூக-விஞ்ஞானப் பார்வையின் பாற்பட்டதல்ல, புறநானூற்று மறவர்களின் வழி-வழி வந்த அசல் தமிழ்த்தேசியத்தின் பாற்பட்டது…. பார் அதை…. தரணிக்கே முன்மாதிரியாக எங்கும் எதிலும் தடையின்றி செல்கின்றதெனக் குதூகலித்த வேளையில், இரட்டை கோபுரத் தாக்குதலின் பின்னான அமெரிக்கப் பயங்கரவாதத்தின் எதிர்கால ஆபத்துக்கள் பற்றி பல தேசிய-சர்வதேச சமூக-விஞ்ஞான முற்போக்கு சக்திகள் எச்சரித்த வேளை, இவையெல்லாம் எங்களுக்கில்லை எனும் எள்ளி நகையாடல்களுக்கு ஊடாக பயணித்ததன் பலன்களை முள்ளிவாய்காலுக் கூடாக பட்டறிந்துள்ளோம்.

சமூக விஞ்ஞானம் சொல்கின்றதெல்லாம் தமிழத் தேசியத்திற்கும், தமிழ் ஈழத்திற்கும் ஓத்துவராது, எங்கள் வழி தனி, ஈழத் தனிவழி என்போர்கள் எல்லோரும், தேசியம், சுயநிர்ணயம், சுயநிர்ணய உரிமையுடன் கூடியதான சகல பிற்போக்கு-முற்போக்கு தேசிய விடுதலைப் போராட்டங்கள், எல்லாம், ஏதோ அண்ணா-கருணாநிதி நெடுமாறன், வை.கோ. சீமான்களால் நடாத்தப்பட்ட சீறும் திராவிடப் "புரச்சிகளுக்கு" ஊடாக உருவான கலைச்சொற்களென நம்பி வாசிப்பும் செய்கின்றார்கள். சுயநிர்ணய உரிமை என்றால் அது பிரிவினைதான், தமிழ்ஈழம் தான் என முழங்குபவர்களுக்கு அதன் சமூக-விஞ்ஞான உள்ளடக்கம் எதுவெனத் தெரியாது.

இப்புரிதலற்ற நிலை கொண்ட கிணற்றுத் தவளை அரசியலால் ஆனதுதான் நாடு கடந்த தமிழ்-ஈழ-தமிழத்தேசிய அரசியலும், அதன் செயற்பாட்டுத் தன்மைகளும் ஆகும். சுயநிர்ணய உரிமை என்றால் பிரிவினை இல்லை எனும் எளிய உண்மை மகிந்தாவிற்கும், விமல் வீரவன்சவிற்கும் பொதுபலசேனவிற்கும் தெரியும். ஆனால் இவ் எளிய உண்மை எம் தமிழ்த்தேசிய விஞ்ஞானத்திற்கும் விஞ்ஞானிகளுக்கும் தெரியாது.

ஏன் சிங்களப் பேரினவாதிகளுக்கு தெரிந்த இவ் அரிய உண்மையை தடைகளுக்குள்ளாகும் நாடு கடந்த தமிழ்த் தேசியங்கள் பதினாறும் புலம்பெயர் அரசியல் பிரச்சாரமாக்கி தொடர் வெகுஜனப் போராட்டங்களாக்கி மகிந்தாவின் தடையை உடைத்தெறிய முடியாது?

தமிழக உணர்வாளர்கள் தமிழ்ஈழக் கோசத்தையும், புலிக்கொடியையும், தங்கள் அரசியல் பிழைப்பின் லாபத்திற்காக முதலீடாக்கியுள்ளார்கள் என்றால், அதையே அதேபாணியல் கொப்பியடித்து புலம்பெயர் தமிழத்தேசியமும் புலம்பெயர் போராட்டங்கள் சகலவற்றின் சடங்குகளாக்கின்றது. இந்நிலையை மாற்றி இன்றைய சர்வதேசியத்தின் நடப்பில் வல்லாதிக்கவாதிகளின் மக்கள் விரோதத்தையும், அவர்கள் தங்கள் இருப்பிறகாக உலகை அழிக்க முற்படும், போக்கையும் கணிப்பரசியலாக்கி எமக்கென ஓர் பொறிமுறையை உருவாக்க வேண்டும்.

தமிழ் மக்களின் உரிமைப்போர், பிரிவினைக்கான போரல்ல, ஒடுக்கும் தேசியங்களின் பாற்றபட்ட அனைத்து நாடுகளுக்கும், அதன் மக்கள் கூட்டத்திற்கும் உள்ளதுபோல், எம்மக்களுக்கும் தம் தலைவிதியை தாங்களே தீர்மானிக்கும் உரிமை உண்டு எனும் யதார்த்த நிலைகொண்டுதான் உள்ளது எனும் பரிமாணம் கொண்டு, தமிழ்த்தேசியத்தை குறுகிய நோக்கின் அடிப்படையில் நகர்த்தாது, சர்வதேசிய முற்போக்கு இயக்கங்களின் துணை கொண்ட இயக்கமாக நகர்த்த வேண்டும்.

சர்வதேசிய முற்போக்கு முகாம்களின் துணை கொண்டு, சரியான திசை நோக்கி நகர்வோமாகின் மகிந்தாவின் அத்தனை தடைகளையும் தாண்டி ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுக்க பக்க பலமாக திகழ முடியும். இதை விடுத்து ஏகாதிபத்தியங்களின் "ஓசியின் பாற்பட்ட அரசியல் போராட்டங்கள் விடுதலையைப் பெற்றுத் தரமாட்டா" எனும் நடைமுறையை நடந்தேறும் சமகாலச் சம்பவங்கள் யாவும் நிரூபிக்கின்றன. எனவே எம்மக்களின் உரிமைக்கான போராட்டம் சரியான திசை நோக்கின் தடைகள் தானாகத் தகரும.