Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

ஓநாய் தனக்காக அழுகிறதா? அல்லது ஆடு நனைவதற்கு அழுகிறதா?

ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் ஜக்கிய அமெரிக்கா கொண்டுவர இருக்கும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான தீர்மானத்தின் நகல் அறிக்கையை வெளியிட்டதன் மூலம் தனது ஏகாதிபத்தியத்திய உள்நோக்க சுயரூபத்தை வெளிக்காட்டியுள்ளது. இதனைப் புரிந்து கொள்ளாது அமெரிக்கா மேற்குலக விசுவாசிகளான தமிழர் தரப்புக் கட்சித் தலைமைகள் ஜெனிவாத் தீர்மானம் மூலம் தமிழ் மக்களுக்கு ஏதோ வரப்பிரசாதம் வரப்போவதாகப் பொய்த்தனமான பிரச்சாரங்களைச் செய்து வந்தன. இப்போது தாங்கள் ஏமாற்றப்பட்டதாக கவலையும் ஒப்பாரிகளும் வைக்கிறார்கள். இது அவர்களது தூர நோக்கற்ற குறுகிய அரசியலினதும் ஏகாதிபத்தியத்தைப் புரிந்து கொள்ளாத வெள்ளைத் தோல் விசுவாசத்தினதும் வெளிப்பாடேயாகும். ஓநாய் தனக்காக அழுகிறதா அல்லது ஆடு நனைவதற்கு அழுகிறதா என்பதை விளங்கிக் கொள்ளாத தமிழர் தரப்புத் தலைமைகளின் அந்நிய விசுவாச அரசியல் வெளிப்பாட்டையே இன்று காண முடிகிறது.

இவ்வாறு புதிய ஜனநாயக மாக்சிச-லெனினிசக்கட்சியின் பொதுச்செயலாளர் சி.கா.செந்திவேல் கட்சியின் யாழ்ப்பாண பணிமனையில் இடம்பெற்ற இளைஞர்களுக்கான அரசியல் கலந்துரையாடலில் உரையாற்றும் போது கூறினார்.

 

மேலும் அவர் தனது உரையில், கடந்த நூற்றாண்டு முதல் இன்று வரை தமிழ்த் தரப்புத் தலைமைகள் எனப்பட்டவர்கள் யாவரும் வெள்ளைக் கொலனிவாதிகளுக்கும் பின் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுக்கும் விசுவாசிகளாகவும் சேவை புரிபவர்களாகவும் இருந்து வந்துள்ளனர். ஆனால் இவர்கள் காட்டிய பணிவான விசுவாசத்திற்கு அவர்கள் இதுவரை எத்தகைய அரசியல் பிரதிபலன்களையும் தமிழ் மக்களுக்கு வழங்கவில்லை. பிரித்தானியர்களும் பின்பு அமெரிக்கர்களும், சிங்கள பௌத்த பேரினவாதமேட்டுக்குடி ஆளும் வர்க்கத்தினர் பக்கத்திலேயே இருந்து வந்துள்ளனர். போர்க்குற்றம் மனித உரிமை மீறல் பற்றிப் பேசப்படும் இறுதிக்கால யுத்தத்தின் போது அமெரிக்காவும் பிரித்தானியாவும் ஏனைய மேற்குலக நாடுகளும் இந்தியாவும் யார் பக்கத்தில் இருந்து வந்தன என்பதை இலகுவில் மறந்து விட்டு அவர்கள் மூலம் ஜெனிவாவில் போர்க்குற்ற விசாரணைக்குத் தீர்மானம் எதிர் பார்த்து நிற்பது அடிக்கப்பொல்லெடுத்துக் கொடுத்தவனிடம் சாட்சி சொல்லக் கேட்பது போன்றதொரு வேடிக்கையானதாகும்.

இன்று அமெரிக்காவிற்கும் மேற்குலக நாடுகளுக்கும் தேவைப்படுவது வடக்குக் கிழக்கும் தமிழ் மக்களும் அல்ல. அவர்கள் முழு இலங்கையையும் தமது உலக மேலாதிக்கத்திற்கான பிடிக்குள் வைத்திருக்கவே விரும்புகின்றனர். அதற்கு ராஜபக்ச சகோதரர்கள் ஆட்சி முழு இணக்கத்தை கொடுக்க மறுத்து நிற்பதனாலேயே அவர்களை வழிக்குக் கொண்டுவர அல்லது அவ் ஆட்சியை அகற்றித் தமக்குரிய ஆட்சியைத் தெற்கில் கொண்டுவரவே ஜெனிவாவில் இருந்து கயிறுகள் எறியப்பட்டு வருகின்றன. அதனையே ஜெனிவாத் தீர்மானத்தில் 26வது 27வது அமர்வுகளிலும்; இலங்கை பற்றி விவாதிக்கப்படுவதற்கு நகல் தீர்மானத்தில் காலஅவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. இத்தகைய அமெரிக்காவையும் பிரித்தானியாவையும் தமிழ்த்தலைமைகள் தமிழர்களின் மீட்பார்களாகக் காட்டுவது முழுத் தமிழ் மக்களையும் ஏமாற்றுவதாக உள்ளது. காலத்திற்குக் காலம் சென்னையையும், புதுடெல்லியையும், வாசிங்டனையும், லண்டனையும் தமிழ் மக்களுக்குக் காட்டி அதோ அழுத்தம் வருகிறது, இதோ பொறிமுறை வருகிறது, சர்வதேசம் உற்று அவதானிக்கிறது சர்வதேச விசாரணை வரப்போகிறது, எனத் தமிழர் தரப்புக்கட்சிகள் கூறிவருவது அரசியல் ஏமாற்றுக்களேயாகும்.

இத்தகைய அரசியல் பொய்மைகளையும் அரசியல் மூடநம்பிக்கைகளையும் தமிழ் மக்கள் குறிப்பாகத் தமிழ் இளம் தலைமுறையினைப் நிராகரித்து தூர நோக்கிலான தெளிவுள்ள மக்களுக்கான அரசியல் பாதையில் பயணிக்க முன்வரல் வேண்டும். இல்லாதுவிடின் தொடர்ந்தும் மக்கள் ஏமாற்றங்களையும் இழப்புக்களையும் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும் எனவும் கூறினார்.

மேலும் அக்கலந்துரையாடலில், நீங்கள் அண்மைக் காலங்களில் இதே தமிழ்த் தரப்புத் தலைமைகள் நடாத்திய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்களில் கலந்து கொண்டீர்கள், அது ஏன் என்ற கேள்விக்கு செந்திவேல் பதிலளித்தார். நாம் இரண்டு காரணங்களுக்காக அப்போராட்டங்களில் பங்கு கொண்டு வந்தோம். ஒன்று, சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சியானது யுத்த முடிவிற்குப் பின்பும் பல்வேறு நிலைகளில் வடக்குக் கிழக்குத் தமிழ் மக்கள் மீதான அரசியல் பொருளாதார இராணுவ ஒடுக்கு முறைகளை மேற்கொண்டு வருவதை எமது கட்சி மிக வன்மையாக கண்டித்து எதிர்த்து வந்தமையாகும். தொழிலாளர்கள் விவசாயிகள் மீனவர்கள், பெண்கள் கடும் பாதிப்புக்களைப் பெற்றவர்களாக இன்றும் இருந்து வருகின்றனர். எனவே இடம்பெறும் கவனயீர்ப்புப் போராட்டங்களில் எமது கட்சி தனது சொந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தியே அவற்றில் பங்கு கொண்டு வந்துள்ளது.

தமது சொந்த இடங்களில் மக்கள் மீளக்குடியமர்வது ராணுவ நிலஅபகரிப்பு, திட்டமிட்ட குடியேற்றம், அரசியல் கைதிகளின் விடுதலை, மீளக்குடியமர்ந்த மக்களுக்கு உரிய புனர்வாழ்வு, சிவில் நிர்வாகம், இயல்பு வாழ்வு, ஜனநாயகம் போன்றவற்றிற்காக அத்தகைய போராட்டங்களில் நாம் பங்கு கொண்டு வந்தோம் அதே வேளை மேற்கூறியவற்றையும் அரசியல் தீர்வுக்கான ஒரு பொது வேலைத்திட்டத்தையும் அவ்வப்போது தமிழ்கட்சிகளிடம் வலியுறுத்தி வந்தோம். குறிப்பாக முற்போக்கான தமிழ்த்தேசியத்தை வலியுறுத்தியும் வந்தோம். ஆனால் இவை எவற்றையும் எம்மிடம் எதிர்பார்க்க வேண்டாம், நாம் தொடர்ந்தும் எமது மேட்டுக்குடி ஆதிக்க அரசியல் பாதையில் தான் செல்வோம் என்ற தொனியுடனேயே தமிழர் தரப்புக் கட்சித் தலைமைகள் தொடர்ந்து சென்றுகொண்டிருக்கின்றன. தமிழ்தேசியக் கூட்டமைப்புக் கட்சிகளிடம் ஒற்றுமை, ஜக்கியம் இல்லாத அதேவேளை வாக்குகள், பதவிகள், தமக்கான அதிகாரம், ஆதிக்கஅரசியல் பாதையிலேயே தொடர்ந்து பயணிக்கிறது. தமிழ்த்தேசியம் என்ற போர்வையுடன் தமிழ் மக்களுக்கு குறுகிய அரசியல் பாதையினைத் தொடர்ந்து காட்டி வருகிறனர். அதேவேளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியினர் இரண்டு தேசக் கொள்கையெனக் கூறி தொடர்ந்தும் தமிழீழப் பாதையில் பயணிக்க முன்நிற்கிறனர்.

இவர்களது இக்குறுந் தமிழ்த்தேசியவாத நிலைப்பாடு தெற்கே சிங்கள பௌத்த பேரினவாதிகளுக்கும் ராஜபக்ச சகோதரர்களது ஆட்சிக்கும் சிறந்த ஊட்டச்சத்தாக அமைந்து வருகிறது. அதே வேளை தெற்கே அவர்கள் முன்னெடுக்கும் சிங்கள பௌத்த பேரினவாத முன்னெடுப்புக்களும் நடைமுறைகளும் தமிழ்த்தலைமைகளுக்கு வாய்ப்பாக இருந்து வருகின்றன. இந்நிலையில் தமிழ் மக்களுக்கு வழிகாட்டக்கூடிய நடைமுறைச் சாத்தியமுள்ள கொள்கைகளோ வேலைத்திட்டங்களோ கிடையாது. இந்நிலையில் தான் உதைத்த கால்களைக் கட்டிப்பிடித்து கெஞ்சுவது போன்று அமெரிக்க பிரித்தானிய இந்திய ஆட்சியாளர்களான ஏகாதிபத்திய பிராந்திய மேலாதிக்க சக்திகளிடம் சரணடைந்து கெஞ்சி நிற்கிறார்கள். இந்நிலையில் இருந்து விலகி தமிழ் மக்கள் மத்தியில் ஜனநாயகத்திற்கும் சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான அரசியல் தீர்வுக்கும் தூரநோக்கிலமைந்த வெகுஜனப் போராட்ட மார்க்கத்தில் முன்செல்லவேண்டும். அதில் உழைக்கும் தமிழ் மக்களின் அபிலாசைகளும் தொழிலாளர்கள் விவசாயிகள், மீனவர்கள், பெண்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் என்போரது அடிப்படைப் பிரச்சனைகளும் பிரதிபலிக்கப்பட வேண்டும். அத்தகைய நிலைப்பாடு தெற்கின் சாதாரண உழைக்கும் சிங்கள மக்களிடையே பிரதிபலிப்பையும் அரசியல் தீர்வுக்கான தமிழ் மக்களின் நியாயத்தையும் தோற்றுவிக்க வேண்டும். எனவே தான் தமிழ்த் தரப்புக் கட்சிகள் பதவிகளுக்கான வாக்குப் பெட்டி அரசியலுக்கு அப்பால் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் ஜக்கியப்பட்ட இலங்கையில் தேசிய இனங்களுக்கான சுயாட்சியை வென்றெடுப்பதற்கான பொது வேலைத்திட்டத்திற்கு முன்வரல் வேண்டும் எனத் தொடர்ந்து எமது கட்சி வலியுறுத்தி வருகிறது இதனை இளம் தலைமுறையினர் தமது கவனத்தில் கொள்வது அவசியம் என்றும் சுட்டிக்காட்டினார்.