Tue04232024

Last updateSun, 19 Apr 2020 8am

கொழும்பில் தமிழ் மொழி அமுலாக்கலை வலியுறுத்தும் மொழியுரிமை மாநாடு

தமிழ் மொழியை ஆட்சி மொழியாகவும், சட்டவாக்க மொழியாகவும், நிர்வாக மொழியாகவும், நீதிமன்றமொழியாகவும் அர்த்தமுள்ள வகையில் அமுல்படுத்துவது அரசின் பொறுப்பாகும் என்பதுடன் சமத்துவம், தனித்துவம், சுயாதீனம் என்பவற்றின் அடிப்படையில் மொழி சமத்துவம் பேணப்படுவதற்கான இலங்கை மக்களின் பண்பாட்டு புரட்சி ஏற்பட வேண்டுமெனவும், தமிழ் மொழி அமுலாக்கலை அர்த்தமுள்ளதாக்குவோம் என்ற தொனிப்பொருளில் மாற்று கருத்தாடலுக்கான அமையம் கொழும்பில் 30.11.2013 அன்று நடத்திய மொழியுரிமை மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

மஞ்சு ஸ்ரீ தேரர், சிவ ஸ்ரீ முரளிதர குருக்கள், பிதா சக்திவேல், மௌலவி எம்.எச்.எம் இப்ராஹிம், கலாநிதி செல்வி திருச்சந்திரன், சாந்தா கம்லத், ஜோசப் ஸ்டாலின் ஆகியோரின் தலைமையில் கொழும்பில் நடைபெற்ற மாநாட்டில் தமிழ் மொழி அமுலாக்கலை அர்த்தமுள்ளதாக்குவதற்கான முன்மொழியப்பட்ட தீர்வு யோசனைகள் தூரப்பார்வையுடன் முன்வைக்கப்பட்டதுடன் அவை தேசிய இனப்பிரச்சனையின் தீர்வின் தவிர்க்க முடியாதவை என்பனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

நாடெங்குமிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ், முஸ்லீம், சிங்கள, மலையகத்தமிழ் பிரதிநிதிகள் கலந்து கொண்டதுடன் தமிழ்மொழியை அர்த்தமுள்ளவகையில் அமுல்படுத்துவதற்கான வேலைத்திட்டம் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

கல்வித்துறையில் தமிழ்மொழி அமுலாக்கல் பற்றிய அறிக்கையை ஓய்வுபெற்ற பாடசாலை அதிபரும் தொழிற்சங்கவாதியுமான சி.சரவணபவானந்தன் சமர்பித்தார். அதனை சிங்களத்தில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் சமர்பித்தார். ஆசிரியரும் தொழிற்சங்கவாதியுமான நெல்சன் மோகன்ராஜ் பொதுநிர்வாகத்துறையில் தமிழ் மொழி அமுலாக்கலை இரு மொழியிலும் சமர்பித்தார். நீதித்துறையில் தமிழ் மொழி அமுலாக்கல் பற்றிய அறிக்கையை தமிழில் சட்டத்தரணி இ. தம்பையாவும்இ சிங்களத்தில் ரொனால்ட் குணதிலக்கவும் சமர்ப்பித்தனர்.

இம்மூன்று அறிக்கைகளும் மொழியுரிமை மாநாட்டில் மக்கள் விஞ்ஞாபனமாக ஏற்று அங்கீகரிக்கப்பட்டன. அவ்வரிக்கைகள் மூன்று மொழிகளிலும் அச்சிடப்பபட்டு விநியோகிக்கப்பட்டது.

இலங்கையர்கள் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் தேர்ச்சியடைய வேண்டியது ஒரு சுகமான நீண்ட கனவு. அது அனைத்து மக்களினதும் சுய விருப்பத்திலேயே நிஜமாக்கப்பட முடியும். அதனை நிஜமாக்குவது என்பது மொழிகளின் சமத்துவம், தனித்துவம், சுயாதீனம் என்பவற்றின் அடிப்படையில் இருக்க வேண்டுமே அன்றி தனியொரு மொழியின் மேலாதிக்கத்தை இன்னொரு வகையில் நிலைநாட்டுவதாகவோ இன்னொரு மொழியின் இருப்பின் அச்சுருத்தலாகவோ இருக்கக் கூடாது.

இலங்கையர் அனைவரும் மும்மொழிகளிலும் தேர்ச்சியடைவது என்பது நூற்றாண்டு கால இலக்கு மும்மொழியுரிமை, மும்மொழி பிரயோகம் என்பவற்றை அர்த்தமுள்ள வகையில் உறுதி செய்வது அரசினது சில ஆண்டுகால இலக்கு எனவே மொழி அமுலாக்கலில் அரசுக்கு பாரிய பொறுப்பு உண்டு எனவும் இம்மாநாட்டில் தெளிவுபடுத்தப்பட்டது.

வடக்கு கிழக்கில் மட்டுமன்றி வடக்கு கிழக்குக்கு வெளியிலும் தமிழ் மொழி அமுலாக்கலை அர்த்தமுள்ளதாக்குவதற்காக மாவட்ட மட்டங்களில் விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் வழிகாட்டும் நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதெனவும் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதெனவும், இலங்கை மக்கள் மத்தியில் சிங்கள, தமிழ் மொழி பரிமாற்றல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

மாற்று கருத்தாடலுக்கான அமையம்

அழைப்பாளர்கள்

சி.சரவணபாவானந்தன்

இ.தம்பையா