Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

மலையக மக்களை ஏமாற்றுவதற்கே மாடி வீட்டுத் திட்டம்!

_இந்த நாட்டின் தொழிலாளர்கள், விவசாயிகள், சாதாரண உழைக்கும் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டையோ உள்நாட்டு பொருளாதார அபிவிருத்தியையோ நோக்காக கொள்ளாத ஒரு வரவு செலவு திட்டம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருக்கிறது. ஓட்டு மொத்தத்தில் ஒரு மக்கள் விரோத ஜனநாயக விரோத வரவு செலவு திட்டமே முன்வைக்கப்பட்டுள்ளது என்றே கூறவேண்டியுள்ளது. வழமைப் போலவே மலையக மக்களின் சமூகப் பொருளாதார நலன் சார்ந்த எந்தவொரு முன்மொழிவையும் இவ் வரவு செலவுத் திட்டம் கொண்டிருக்கவில்லை. அதேவேளை இந்த நாட்டின் பொருளாதார கட்டுமானத்தை தாங்கி நிற்கும் மலையக மக்கள் வரலாற்று நெடுகிலும் வேண்டி நிற்கும் வீடு, காணி உரிமை அப்பட்டமாக மறுக்கப்ட்டிருகிறது. இவ்வாறு புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் தேசிய அமைப்பாளர் ராகலை வெ.மகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இவ்வரவு செலவு திட்டத்தில் மலையக மக்களுக்கு 50000 தொடர் மாடி வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவுள்ளதாக முன்மொழியப்பட்டுள்ளது. இது இம்மக்கள் மீது திணிக்கப்படும் இன்னுமொரு வரலாற்றுத் துரோகமாகும். இத்திட்டத்தினை அரசு சார்ந்த அரசுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் அரசியல் தொழிற்ச்சங்க தலைவர்கள் வரவேற்றுள்ளனர். இந்த நாட்டில் வாழும் ஒரு தேசிய இனத்தின் அடிப்படை வாழ்வாதார உரிமையினை மறுத்து மீண்டும் நவீன லயத்துச் சிறைக்குள் முடக்கி வைக்க எத்தனிக்கும் கபடத்தனமான இத்திட்டத்தை எமது கட்சி முற்றாக நிராகரிக்கிறது. பொருளாதார அரசியல் சமூகப் பண்பாட்டு ரீதியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் ஒரு சமூகத்தின் மீதான துரோகத்தனத்தை எமது கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

பேரினவாத ஆட்சியதிகாரத்தின் மீது கோலோட்சும் மகிந்த சிந்தனை அரசு இந்த நாட்டில் வாழும் ஏனைய தேசிய இனங்களின் அபிலாஷைகளையும் அவர்களின் காணியுரிமையினையும் சட்டத்தின் பேரில் மறுதலித்தே வந்திருக்கிறது. அதே வேளை கடந்த மாகாண சபை தேர்தல் காலத்தில் அரசுடன் இனைந்து போட்டியிட்ட இ.தொ.கா, தொ.தே.ச ஆகியவற்றின் பிரச்சார மேடைகளில் ஜனாதிபதி மலையக மக்களுக்கு காணி வழங்கி தனி வீடு கட்டி கொடுக்கப்படும் என்றும் மலையகத்தில் கிராமிய கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் என்றும் பல வாக்குறுதிகளை வழங்கிச் சென்றிருந்தார்.

ஆனால் மலையக மக்களின் அடிப்படை வாழ்வாதார உரிமைகள் மறுக்கப்பட்டும் ஒரு தேசிய இனம் என்ற வகையில் அவர்களின் அபிலாஷைகள் தூக்கி எறியப்பட்டும் இனவாத வக்கிரத்தனத்தால் தொடர்ந்தும் வஞ்சிக்கப்பட்டே வந்திருக்கிறார்கள். இனவாத காடைத் தனமும் இவர்களின் வாழ்வாதார நிலத்தின் மீதான ஆக்கிரமிப்பும் தொடர்ந்து இந்த நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் இரண்டு பேரினவாத கட்சிகளாலும் தாராளமாகவே முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாகவே 50000 தொடர்மாடி வீட்டுத் திட்டத்தின் பேரிலான இம் மக்களின் வீட்டு காணியுரிமை மறுப்பும் அமைகிறது. இவாறானதொரு பின்புலத்திலேயே இம் மக்கள் சார்பாக தனி வீட்டு திட்டத்திற்க்கான கோரிக்கையை தொடர்ந்தும் வலியுறுத்த வேண்டும்.

மலையக பெருந்தோட்ட பகுதியில் 37000 எக்டேயர் பயிரிடப்படாத நிலம் உள்ளதாக அரச புள்ளி விபரங்களே கூறுகின்றன. எனவே குறைந்தப் படசம் 20 பேர்ச் காணியுடன் தனிவீட்டுத் திட்டமொன்றை மிகத் தாராளமாகவே நடைமுறைப்படுத்த முடியும். இவ்வாறனதொரு சூழ்நிலையில் ஒரு சமூகத்தின் வீட்டுக்கான காணியுரிமையினை மறுக்கும் இம் மாடி வீட்டுத் திட்டம் முற்றாக நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அதேவேளை மலையக மக்களுக்கு தனி வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுவதனையும் மலையகத்தில் கிராமிய கட்டமைப்புகள் உருவாக்கப்படுவதனையும் வலியுறுத்துகின்ற ஒன்றினைத்த வேலைத்திட்டம் மிக அவசியமானதாக அமைகின்றது.

குறிப்பாக முன்மொழியப்பட்டிருக்கும் தொடர் மாடி வீட்டுத்திட்டம் தொடர்பாக பாரளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயுப் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இவை வெறும் அறிக்கைகளோடும். பேச்சுகளோடும் முடியும் ஒன்றாகவே இருந்து வருகிறது. கடந்த காலங்களில் இம் மக்களின் சம்பள உயர்வு போன்ற பல்வேறு பிரச்சனைகளின் போதும் இவ்வாறான அறிக்கைகள் வெறும் பேச்சுக்கள் மட்டுமே இடம் பெற்று வந்ததனையும் நாம் கண்டோம்.

இன்று தமது அரசியல் சுய நலங்களுக்கும் பதவிகளுக்கும் அப்பால் இம் மாடி வீட்டுத் திட்டத்தை முற்றாக நிராகரித்து காணியுரிமையுடன் கூடிய தனி வீட்டுத் திட்டத்தை வென்றெடுப்பதற்கான சக்திமிக்க வெகுஜன போராட்ங்களை முன்னெடுக்க மலையக அரசியல் தொழிற் சங்க தலைமைகளும் இம்மக்கள் சார்பாக சிந்திக்கின்ற அனைத்து கட்சிகளும் இடதுசாரி ஜனநாயக சக்திகளும் முன்வர வேண்டும் என எமது கட்சி அழைப்பு விடுக்கிறது.

இராகலை வெ. மகேந்திரன்

தேசிய அமைப்பாளர்

புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி