Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

யாழ்.பல்கலைக்கழகம் ஒரு மாதம் மூடப்பட்டதை வெறுப்போடு கண்டிக்கின்றோம்!

2013 நவம்பர் 11ம் திகதியிலிருந்து டிசம்பர் 02ம் திகதி வரை யாழ். பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு பாதுகாப்புப்பிரிவுகளின் வற்புறுத்தலின் பேரில் பல்கலைக்கழக உயரதிகாரிகள் முடிவெடுத்திருக்கிறார்கள். யுத்தத்தில் இறந்த தமது உறவுகளை நினைவு கூர்தலை தவிர்ப்பது தான் இதன் நோக்கமாக இருக்கின்றது. கடந்த வருடத்திலும் கூட இவ்வாறான சம்பவமொன்று நடந்தது. மாவீரர் தினத்திற்குச் சமமாக யாழ்.பல்கலை மாணவர்களால் நடத்தப்பட்ட நிகழ்ச்சியொன்றிற்குள் திடீரென நுழைந்த பாதுகாப்பு படையினர் மாணவர்களை மிருகத்தனமாகத் தாக்கி மாணவர் தலைவர்களை கைது செய்வதற்கும் நடவடிக்கை எடுத்திருந்தனர். அதன் தொடர்ச்சியாகத்தான் இம்முறையும் பல்கலைக்கழகம் மூடப்பட்டிருக்கின்றது.

இந்த முடிவு நாட்டின் ஜனநாயகம் மற்றும் மனித சுதந்திரம் சம்பந்தமாக வரலாற்றில் வைக்கப்படும் கரும்புள்ளியாக இருப்பதோடு, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் என்ற வகையில் நாம் இந்த முட்டாள்தனமான முடிவை வெறுப்போடு கண்டிக்கின்றோம்.

எல்.டீ.டீ.ஈ. இயக்கத்தையும் அதன் கொள்கைகளையும் நாங்கள் அனுமதிக்காவிடினும், தமிழ் மக்கள் இறநத் தமது மக்களை, தமது உறவுகளை நினைவு கூறும் உரிமைக்கு நாங்கள் மதிப்பளிக்கின்றோம். அவர்களது உரிமைக்கு பாதுகாப்பளிக்க வேண்டும். அவர்களது உரிமைகளுக்கு ஊறு விளைவிப்பதனால் அவர்களது இனவாத மற்றும் வன்முறை அடையாளங்களை தோற்கடிக்கவோ, ஜனநாயக நீரோட்டத்திற்குள் அவர்களை அழைத்து வரவோ முடியாது.

யுத்தமென்பது யுத்தமாகவே இருக்கின்றது. நாகரிக சமூகத்தினால் அதனை எவ்வகையிலும் அனுமதிக்க முடியாது. யுத்தத்தின்போது யார் சரி என்பது குறித்து பேசுவது பலனற்ற காரியமாக இருக்கும் அதேவேளை, அதனால் அனைத்துப் பிரிவினருக்கும் அழிவு மட்டுமே எஞ்சி நிற்கும். ஆகவே மனித சமூகத்திற்கு, மனித வர்க்கத்திற்கு பொறுப்புக்கூறக் கூடிய மற்றும் அன்பு காட்டும் நபர்களுக்கோ, இயக்கங்களுக்கோ மனிதப் படுகொலை யுத்தத்தை அனுமதிக்கும் ஆற்றல் கிடையாது. வடக்கின் யுத்தத்தைப் பற்றிய எங்களது நிலைப்பாடு இதுதான்.

இந்த யுத்தத்தை நிர்மாணித்தவர்கள் சிங்கள, தமிழ், முஸ்லிம் இனவாத பதவிப் பித்துப் பிடித்த ஆளும் வர்க்கமேயல்லாது, யுத்தத்தின் இரும்புச் பாதணிகளுக்கு மிதிபட்ட அல்லது தீக் குண்டுகளால் பொசுக்கப்பட்ட அப்பாவிகளல்ல. ஆகவே, ஆயுதங்களைக் கையிலெடுத்து ஒருவரையொருவர் கொலை செய்துக் கொண்ட எல்.டீ.டீ.ஈ.னரையோ அல்லது இராணுவ சிப்பாய்களையோ குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவது நீதியாகமாட்டாது என்பதோடு, இந்த கொடுமைகளுக்கான பொறுப்பை பதவிப் பேராசைக்காக இனவாதத்தை விதைத்த மற்றம் இப்போதும் அப்படியே செயற்படும் மூன்று இனங்களையும் சேர்ந்த ஆட்சியாளர்களையே குற்றவாளிக் கூண்டில் ஏற்ற வேண்டும்.

இந்த நாசமாய்ப்போன யுத்தத்தின் விளைவாக விலைமதிக்க முடியாத ஆயிரக்கணக்கான சிங்கள, தமிழ், முஸ்லிம் உயிர்களை நாடு இழந்தது. இழக்கப்பட்ட அந்த ஒவ்வொரு உயிருக்கும் மதிப்பொன்று இருப்பதோடு, அவர்களுக்காக கண்ணீர் சிந்தும், வேதனைப்படும் ஏதோவொரு மனித இதயம் இன்றும் கூட இந்த மண்ணில் இருப்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அதேபோன்று இறந்த அந்த உறவுகளுக்காக ஒரு துளி கண்ணீர் சிந்த, நினைவு கூற இருக்கும் உரிமையை நாங்கள் ஏற்கவும் வேண்டும். சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற பேதங்களின்றி விலங்குகளைப் போன்று மனிதர்களை கொன்று போடும், மனித உயிர்களின் மதிப்புத் தெரியாத கொலைகார ஆட்சியாளர்கள் என்ன கூறினாலும், மனிதத்தை மதிக்கும் யாராலும் அந்த தீர்மானத்தை அங்கீகரிக்க முடியாது.

மரணித்த படை வீரர்களை நினைவு கூர்வதற்கு சிங்கள மக்களுக்கு உள்ள உரிமையைப் போன்றே தமது வீரர்களை நினைவு கூறும் உரிமை தமிழ் மக்களுக்கும் இருக்கின்றது. யுத்தம் என்பது இருசாரார்களுக்கிடையில் நடப்பதாகும். எந்தப் சாராரும் மற்றச்சாராரை அங்கீரிப்பது கிடையாது. மதிப்பது கிடையாது. அந்த முரண்களின் காரணமாகவே யுத்தம் நிர்மாணிக்கப்படுகின்றது. ஆகவே, எந்தவொரு பிரிவினருக்கம் மற்றப் பிரிவினர் எதிரிகளாகவேயல்லாது வீரர்களாகத் தெரிவதில்லை. இறந்த எதிர் பக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர் துரோகியாகவும் தனது உறுப்பினர் வீரனாகவும்தான் தெரியும். இதன்படி பார்த்தால் யுத்தத்தினால் உயிரிழந்த தமிழ்ப் போராளிகள் வீரர்களாவர். இரு சாராரினதும் பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் பிரிவதற்குக் காரணமான நிபந்தனைகளை ஒழித்துக்கட்டி, இருசாராரும் இருசாராரை மதிப்பதாயிருந்தால் மாத்திரமே அந்த நிலையை மாற்ற முடியும். இலலையாயின், வெற்றியடைந்த பிரிவினரின் வற்புறுத்தலின் மீது தோல்வியடைந்த பிரிவினரின் எண்ணங்கள், எதிர்ப்பார்ப்புக்கள் போன்றவற்றைத் தீர்மானிப்பதற்கு முயல்வதனால் மீண்டும் குரோத மனப்பான்மையே வளரும். படுகொலை யுத்தத்திற்கு மீணடும் வழி திறக்கப்படும். ஆகவே, அவ்வாறு எடுக்கப்படும் எந்தத் தீர்மானமும் ஜனநாயகமாக இருக்காததோடு, மனிதநேயத்திற்கும் எதிரானதாகும். எனவே, தமது வீரர்களை நினைவு கூர்வதற்காக தமிழ் மக்களுக்கு உள்ள உரிமையை ஏற்றுக் கொள்வது பயங்கரவாதமல்ல.

தமிழ் மக்களுக்கு அவர்களது சிவில் உரிமைகளை பெற்றுக் கொடுத்தல், ஜனநாயகத்தை மீள நிலைநாட்டல், ஏனைய சமூக பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வுகாணல் மற்றும் வடக்கில் அரச பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருதல் போன்றவற்றின் மூலமே மீண்டும் அவர்கள் ஆயுதபாணிகளாக மாறுவதைத் தடுக்கு முடியும்.

இல்லையாயின் இவ்வாறான இனவாதத் தீர்மானங்களால் தமிழ் இனவாதம் மீண்டும் ஊட்டி வளர்க்கப்பட்டுவிடும். மீண்டுமொரு யுத்தத்திற்கான பின்புலத்தை நிர்மாணிப்பதாக அமையும். இப்படியான ஒரு நிலையை ஆட்சியாளர்கள் விரும்புவது எங்களுக்குத் தெரியும். ஏனெனில், ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியிலான பிரிவினைகளைப் பயன்படுத்தி அவர்களால் தமது இருப்பை பாதுகாத்துக் கொள்ள முடியம். ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களும் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு பொறுப்புக் கூற வேண்டிய உண்மையான எதிரிகளான மூன்று இனக்குழுமங்களையும் சார்ந்த ஆளும் வர்க்கத்திற்கு எதிராக ஒடுக்கப்பபட்ட மனிதர்கள் ஒன்றுகூடாதவரை, சிங்களவர்களின் எதிரிகளாக தமிழர்களையும், தமிழர்களின் எதிரிகளாக சிங்களவர்களையும் பார்க்கும்வரை, அவர்கள் ஒருவரோடொருவர் மோதிக்கொள்ளும் வரை தமது இருப்பு குறித்து ஆளும் வர்க்கத்திற்கு எந்தச் சவாலும் கிடையாது. இந்த எதார்த்தத்தை புரிந்துக் கொண்டு ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றுபட்டால் அது ஆளும் வர்க்கத்திற்கு மரண வேதனையாக இருக்கும்.

எனவேதான் அவர்கள் எப்பொழுதும் இனவாதத்தைத் தூண்டுவதற்கும் முன்னெடுத்துச் செல்வதற்கும் முயற்சிக்கின்றனர். யாழ்.பல்கலைக்கழகத்தை மூடியமை, அவர்களது நினைவு கூர்தலை தடுத்தமை போன்றவற்றின் பின்னணியில் அந்த நோக்கமே இருப்பதை புரிந்துக் கொள்ள வேண்டியதோடு, அதனால் ஏற்படக் கூடிய அழிவை தடுப்பதாயிருந்தால், நாங்கள் அனைவரும் இனவாதத்தை தூக்கி எறிந்துவிட்டு இந்தத் தீர்மானத்திற்கு எதிராக வேண்டும். அது ஜனநாயகத்தை கௌரவிக்கும் மனதநேயத்தை மதிக்கும், மீண்டுமொரு கொடூர யுத்தத்தை விரும்பாத அனைவரினதும் பொறுப்பாகும்.

நன்றி

சஞ்சீவ பண்டார