Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

தீர்ப்பிடாதீர்கள்... தீர்ப்பிடப்படுவீர்கள்... (சிறுகதை)

"டேய் கொஞ்சம் பொறு.. ஏன் இப்ப அவசரப்படுறாய்..... அவன் வந்தவுடன் எல்லாருமாச் சேர்ந்து ஒரு முடிவெடுப்போம். சும்மா கோவப்பட்டு அவசரப்படாதே."...

"இல்லை மச்சான் என்னாலே பொறுக்கேலாமல் கிடக்கு.... இப்ப அவள் என்ரை கையிலே கிடைச்சால்...... என்ன செய்வேனெண்டே தெரியாது.... அவ்வளவு கோவமாயிருக்கு"....

"எனக்கென்ன கோபமில்லையே.... இதைக் கேள்விப்பட்ட நேரத்திலேயிருந்து இன்னும் நான் நித்திரையே கொள்ளவேயில்லை".....

இப்படியே மூன்று பேரும் மாறி மாறி கோவப்பட்டுக் கதைத்துக் கொண்டிருந்தனர்.

"டேய்.... இது நிமலன்ரை குடும்பப் பிரச்சினை. எதெண்டாலும் அவன் தான் முடிவெடுக்க வேண்டும். அவன் என்ன சொல்லுறான் எண்டு கேட்ப்பம். பிறகு அப்படியே செய்வோம்" என்றான் ஆனந்தன்.

"இல்லை மச்சான் இவன் யாரோ சொந்தக்காரன் எண்டு வந்து பழகினானே... அவன்தான் இதுக்கெல்லாம் காரணம், பச்சைத் துரோகி... உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்த பாவி... அவனையும் அவளையும் சுட்டுத் தள்ள வேண்டும்" என்றான் கணேஸ்.....

"இல்லை... அவளுக்கு முன்னாலே அவன்ரை ஒரு கையையும் ஒரு காலையும் வெட்டிப் போட்டு, அவளின்ரை கைவிரல்களையும், கால்விரல்களையும் வெட்டி, அவளை உயிரோடு நடமாட விட வேண்டும். அப்படியெண்டால் தான் இஞ்சை ஆடிக்கொண்டு திரியிற மற்றப் பெண்களும் திருந்துவாளுகள்"... என்றான் புவனேஸ்...

"எங்கடை நிமலுக்கு ஒண்டெண்டால் நாங்க சும்மா இருக்கக் கூடாது. இல்லை மச்சான் சாமத்தியப்படுற வயதிலே பிள்ளை இருக்க, அவளுக்கு இன்னொரு மனுசன் வேண்டிக்கிடக்கோ.... கோபம் தலைக்கு மேல் பொங்கியெழும்ப கணேஸ் அங்கும் இங்குமாக மாறிமாறி நடந்தான்.

எங்கடை கலாச்சாரம் என்ன... எங்கடை பண்பாடென்ன.... இவள் இப்படி கரியைப் பூசிப் போட்டாளே... இனி மற்ற நாட்டவர்கள் தமிழரைப்பற்றி என்ன நினைப்பாங்கள். நாங்கள் வெளியாலே தலைகாட்ட முடியாமைச் செய்து போட்டாளே... எளிய.... வே.... என்று மாறி மாறி மூவரும் தங்கள் வாய்க்கு வந்த மாதிரி தங்கள் கோபத்தை தீர்த்துக் கொண்டனர்.

இஞ்சை கேளுங்கோ.... இது ஊரைப் போலே இல்லை. இதுகளிலே சம்பந்தப்பட்டா.. பிறகு எங்கடை வாழ்க்கையே நாசமாப்போடும். இது பற்றி அறிஞ்சாலே என்ரை மனுசி என்னைக் கொண்டு போடும். நான் அறிஞ்ச ஒரு விசயத்தைச் சொல்லுறன் கவனமாக் கேளுங்கோ...

உங்கே ஏதோ ஒரு ஜரோப்பிய நாட்டிலே... ஒரு குறூபபொண்டு இருக்காம். காசைக் கொடுத்தா அருளாமல் வந்து ஆக்களையே முடிச்சுப் போட்டு போடுவாங்களாம்... பிறகு நாங்கள் நிம்மதியா திரியலாம். இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறையள் எண்டு புவனேஸ் கேட்க மற்ற இரண்டு பேரும் ஓமோ.ம்...ம்.... இது நல்ல ஜடியாத் தான் எண்டு ஒத்துக் கொண்டனர்

எதுக்கும் நிமலன் வரட்டுக்கும், வெகுவிரைவிலே இந்த வேலையைச் செய்து முடிச்சுப் போடணும். பிறகு ஆறவிட்டால் அது பழங்கஞ்சியாப் போம்... பிறகு அவள் இவனோடு சேர்ந்து திரிய.... நினைக்கவே முடியாமல் கிடக்கு... டேய் அவனுக்கு திரும்ப அடியடா... என்று புவனேஸ், சொல்லி வாய் மூடேல்லை நிமலனின் கார் வீட்டுக்கு முன்னால் வந்து நின்றது.

மெல்லத்திறந்து உள்ளே நுழைந்தபடியே "என்ன மூன்று பேரும் தண்ணியடிக்கப் பிளான் பண்ணுறையளோ"... என்றபடி பக்கத்தில் அமர்ந்து கொண்டு... என்ன...? அவசரமாய் வரச் சொன்னையள், என்று மிகவும் சாதரணமாகக் கேட்க, மற்றவர்களுக்கு ஏதோ மாதிரி இருந்தது.

நாங்க என்னிடா என்றால் கொதிச்சுக் கொண்டிருக்கிறோம். இவன் என்றால் ஏதோ விருந்துக்கு வந்த மாதிரியல்லோ நிக்கிறான் என்று மற்ற மூவரும் மாறி மாறி நினைத்துக் கொண்டனர்.

இல்லை நிமலன்... நாங்க கேள்விப்பட்டது... உன்ரை மனுசி.......? அவனோடு போய்விட்டாளாம். அது தான் நாங்க என்ன செய்யலாமெண்டு யோசித்துக் கதைக்கத் தான் உன்னைக் கூப்பிட்டனாங்கள்...

ம்ம்.... என்ன போய்க் கூட்டிக்கொண்டு வந்து சேர்த்துவிடப் போறையளோ...? அல்லது நான் அவளோடு சேர்ந்து வாழவேண்டுமென்று நினைக்கிறையளோ....? என்ற போது மற்றவர்களிடமிருந்து எதுவிதப்பதிலும் உடனே வரவில்லை.

 நால்வருமே மௌமாயிருந்தார்கள்.

"இரண்டு பேரையும் சும்மா விடக்கூடாது மச்சான்" என்றான் ஒருத்தன்.

"அவனைத்தான், முதலிலே கொல்ல வேண்டும்" என்றான் மற்றவன்.

"இப்ப என்ன செய்ய வேண்டும் எண்டு சொல் மச்சான் உடனே செய்யிறம்" எண்டான் அடுத்தவன்.

கையை உயர்த்திய படி நீங்கள் எனக்காக நிக்கிறையள் என்பது சந்தோசம். ஆனால் கோவப்பட்டு உங்கடை ஒருத்தற்றை வாழ்க்கையையும் சும்மா நாசமாக்கிப் போட வேண்டாம். இது ஊரில்லை. ஏதாவது அவசரப்பட்டு ஏதாவது நடந்து.... நீங்கள் பிடிப்பட்டு உள்ளே போயிருப்பதை கொஞ்சம் யோசிச்சுப் பாருங்கோ... உங்கடை மனுசி பிள்ளையளின்றை எதிர்காலம்?.... ஆ....ஆ

இல்லை, இதுகள் பற்றி யோசியாமல் இல்லை.. இதுக்கெண்டு ஆக்களிருக்கிறான்கள்..... அதெல்லாம் பற்றி நாங்கள் கதைத்தனாங்கள் என்ற போது நிமலனின் முகம் மாறியதை அவர்களால் தெளிவாக் கண்டு கொள்ள முடிந்தது.

அப்ப என்ரை பிள்ளையளையும் என்ன...? அனாதையாக்கப் போறயைளோ...? என்ற போது மூவரும் வாயடைத்துப் போய் நின்றனர்.

இப்படி அடிக்கோணும், வெட்டோணும் எண்டு வெளிக்கிட்டா... எத்தனை பேரை வெட்டப் போறம்... எத்தனை நாளைக்கு வெட்டப் போறம். இனிவரும் காலங்களிலும் எமது அடுத்த சந்ததியினர் இதை விட மிக வேகமாகச் செய்யப் போகினம்.

நான் என்ரை முடிவையும் என்ரை நினைப்பபையும் சொல்லுறன் கொஞ்சம் கவனமாய்க் கேளுங்கோ... இது உங்களுக்கோ... அல்லது எங்கடை மற்றத் தமிழ்ச் சமூகத்தக்கோ வியப்பாகவும் வேடிக்கையாகவும் கூட இருக்கலாம். ஆனால் இது தான் நடைமுறை உண்மை என்பதை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

சரியோ பிழையோ நானும் அவளும் ஒரு பத்துப்பன்னிரண்டு வருடங்கள் கணவன் மனைவியாக வாழ்ந்தனாங்கள். இப்ப கொஞ்சக் காலமாய் எங்கள் இரண்டு பேருக்கும் எதுக்கெடுத்தாலும் பிரச்சினை. நான் அவளைப் பிழையெண்டு நினைப்பதும் அவள் என்னைப் பிழையெண்டு நினைப்பதும் வழக்கமாகிவிட்டது. இந்தச் சின்னச்சின்னப் பிரச்சினைகள் முற்றித்தான் இன்று இந்தளவுக்கு வந்திருக்கின்றது.

அவனுடன் தொடர்பு வந்த பின்னர் தான் என்னுடன்

பிரச்சினைகள்

வந்ததா... அல்லது என்னுடன் பிரச்சினைகள் வந்த பின்னர் தான் அவனுடன் தொடர்பு வந்ததா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நான் அவளுக்கு வேண்டாதவன் என்று வந்த பிறகு இது பற்றி ஆராய விரும்பவில்லை.

முன்பு ஊரிலே இருக்கும் போது என்ரை அம்மம்மா தாத்தாவுடன் சண்டைப்பட்டால், அடிக்கடி சொல்லுவா, "நான் எண்டபடியால் இவரோடு குடும்பம் நடத்திறன் எண்டு. அதே போல் என்ரை அம்மாவுக்கும் ஜயாவுக்கும் சண்டை நடந்து முடிஞ்ச பிறகு அம்மா சொல்லுவா... நானெண்டபடியால் உன்ரை கொய்யாவுடன் காலம் தள்ளுறேன் எண்டு. பிறகு என்ரை மாமியும் மாமாவோடு சண்டை போடடதையும் பார்த்திருக்கிறேன், மாமியும் அதையே சொல்ல பல முறை கேட்டிருக்கிறேன். ஏன்... அன்றைய நிலமை வேறு.. இன்றைய நிலமை வேறு.

சிலவேளையில் எங்கடை நாட்டிலே இந்த வெளிநாடுகள் மாதிரியான சோஷல் முறைகள் இருந்திருந்தால் எங்கடை அம்மாமாரும் மூன்று நாலு என்று கணவன்மாரை மாத்தியிருப்பினம்...

இண்டைக்கு பெண்கள் சமூக, கலாச்சார ரீதியாக, பொருளாதார ரீதியாக வலிமை பெற்று வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். உயர் கல்விகள் என்றும் பெரிய பெரிய உத்தியோகங்கள் எண்டும் தங்களுடைய சொந்தக் காலிலேயே நிக்கத் தொடங்கி விட்டார்கள்.

ஆனால் இப்போது நிலமைகள் எவ்வளவோ மாறிவிட்டது. மாறிக் கொண்டிருக்கின்றது. ஒரு நாள் எனக்கும் அவளுக்கும் பிரச்சினை வந்து சண்டை முற்றியபோது பிள்ளைகளின் நலன் கருதி நாங்கள் இருவரும் பிரிந்து வாழ்வது தான் நல்லது என்ற முடிவெடுத்தோம்...

சில பேர் சொல்வது போல் பிள்ளைகளக்காக போலியாக நடிப்பாக ஒரே வீட்டிலிருந்து வாழ முடியாது. இது ஒரு பெரிய கசப்பான உண்மை. பிள்ளைகளுக்காகவது வாழலாம் தானே என்று நீங்களும் நினைக்கலாம்.

பிரிந்து போவது என்று சொல்வது,

இலகுவானதல்ல.. அந்தக்கஸ்ரத்தையும் வேதனையையும் அனுபவிப்பவர்களால் தான் உணர முடியும்... உறவுகள் தோல்வியடைந்ததால் ஏற்படும் மனவேதனை.... சொல்ல முடியாமல் நா.. தளதளத்து தொண்டை அடைத்து கொள்ள.... சரி இதை விடுங்கோடா... இது தான் என்ரை விதி....

ஆனந்தன் அருகில் வந்து கையைப் பிடித்துக் கொண்டான்.

இந்த வெளிநாடென்று வந்து பிறகு எத்தனை விடையங்களை புதிது புதிதாக சந்தித்துக் கொண்டிருக்கிறோம். எத்தனையோவற்றை எம்மை அறியாமல் தொலைத்துக் கொண்டிருக்கிறோம், விரும்பியோ விரும்பாமலோ பல விடையங்களை நாங்கள் ஆதரிக்க வேண்டியவர்களாகவும், ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலமையிலும் இன்று எல்லோரும் தள்ளப்பட்டிருக்கின்றோம், நிர்பந்திக்கப்பட்டிருக்கின்றோம் என்பது தான் பெரிய உண்மை.

ஏன்... அவள் இன்னொரு வாழ்க்கையை தேர்தெடுக்கக் கூடாது. கொஞ்சம் நிதானமாக ஆறுதலாக யோசித்துப் பாருங்கோ... எங்களைப் போல் அது அவளது வாழ்வுரிமை, அவளது சுதந்திரம். ஆணைப் போன்ற உரிமைகள் பெண்களுக்கும் உண்டு.

கணவனே கண்கண்ட தெய்வம், கல்லானாலும் கணவன், புல்லானாலும் புரிசன் என்று வாழ வேண்டிய அவசியமில்லை.

எங்கடை இந்து சமயம் சொல்லுறமாதிரி ஒருத்தனுக்கு ஒருத்தி எண்டு சொல்லிக் கொண்டு யாரும் வாழ வேண்டிய கட்டாயமுமில்லை. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமான முகமூடிகளைப் போட்டுக் கொண்டு கணவனுக்குத் தெரியாமல் மனைவியும் மனைவிக்குத் தெரியாமல் கணவனும் வைத்திருக்கும் கள்ளத் தொடர்புகளைவிட பிரிந்து போய் இன்னொரு வாழ்வை அமைப்பது தான் நல்லது என்று நினைக்கிறேன்.

பிடிக்காத ஒரு வறட்டு வாழ்க்கை என்று தெரிந்து கொண்ட போதும், போதும் போதும் என்று வாழ்க்கையால் விரட்டப்பட்டு எந்த நேரமும் துன்பமும் துயரமும் வாழ்வில் நிறைந்து கொண்டு போகும் போது பிரிந்து போவது தான் சாலச்சிறந்தது.

இன்று எங்களில் பல பேர் ஒரு திணிக்கப்பட்ட இறுக்கப்பட்ட ஒரு இருட்டு வாழ்க்கைக்குள் வாழ்ந்து கொண்டு வெளியுலகத்துக்கு நடித்துக் கொண்டிருக்கின்றோம்.

சிலபேர் பிரிந்து போகின்றார்கள். சில பேர் மனதால் பிரிந்திருந்தும், எங்கடை சமூகத்தின் மரியாதைக்கேடு, அவமானம் என்ற வறட்டு வலைப்பின்னல்களுக்குள் மாட்டப்பட்டு வெளிவர முடியாமல் நினைத்து ஒவ்வொரு நாளும் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கணவனும் மனைவியும் மனம் விரும்பியே பிரிந்து போக வேண்டும் என்று முடிவெடுத்தாலும் பாழாப் போன எமது சமூகம் எங்கே இருந்தாலும் விடாதுகள்.

ஒரு பெண் பிரிந்து போகின்றாள் என்றவுடன் ஏதோ செக்ஸ் என்ற ஒண்டுக்காகத் தான் எண்டு இந்தச் சமூகம் உடனே முடிவெடுத்து விடும். அவர்களுக்கும் மனம் இருக்கென்றோ தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் இருக்கென்றோ ஒருக்காலும் நினைத்துப் பார்ப்பதில்லை.

என்னை விட்டிட்டு போய்விட்டாள் என்ற காரணத்துக்காக எந்த வன்முறையாலையும் அந்த அன்பையோ, காதலையோ திருப்பி பெற்றுவிட முடியாது.

நீங்கள் நினைப்பது போல் அவளையும் அவனையும் கொல்ல வேண்டும், என்று நினைப்பது போல் அவர்களுக்கும் என்னைக் கொல்ல ஒரு திட்டமிருந்தா....? கொஞ்சம் நினைச்சுப் பாருங்க.....!!!

சிலவேளையில் இதுகளுக்கெல்லாம் பயந்தவன் என்றோ ஆண்மையில்லாத பாலியல்

பிரச்சினையுள்ளவனோ என்று கூட இந்தத் தமிழச் சமூகம் நினைக்கலாம். இது பற்றிய எந்தவிதமான கவலைகள் அற்றவன் நான்.

மரணத்தை நோக்கி நகரும் வாழ்க்கையில் நம்மை விரும்பி வாழ வைப்பது காதலும் நட்பும் தான். இவையிரண்டும் சில வேளைகளில் பொய்யாகி விடுகின்றது. நீங்கள் என் பக்கத்தில் இருப்பீர்கள் என்றும் நம்புகிறேன். நல்ல நட்பு இருக்கும் வரையில் நான் மீண்டும் ஜெயிப்பேன்.

மூவரும் எழுந்து வந்து அவனை இறுக அணைத்துக் கொண்டனர்.

முற்றும்.