Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

இந்திய பெரும் முதலாளிகளின் பொருளாதார நலன்களும் வடக்கு மாகாணசபையும்...

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மாகாணசபையின் அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் அவற்றிற்கான அதிகாரம் பற்றிய வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றுக் கொண்டு வருகின்றன. இந்த வேளையில் கிழக்கு மாகாணசபையும் தனது அதிகாரங்களை வழங்கும்படியும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் இருந்தும், இந்திய மத்திய அரசில் இருந்தும் சிலவகையான குரல்கள் மேலெழுந்தவாரியாக வந்து கொண்டு இருக்கின்றது.

இந்த வேளையில் தமிழ் மக்கள் தமது ஜனநாயகக் கோரிக்கைகளுக்காக போராட வேண்டும் என்ற சிந்தனைக்கு மாற்றாக தம்மையே தோற்கடிக்கப்படக் கூடிய சக்திகளை தெரிந்தெடுத்துள்ளார்கள் என்பது ஒரு புறமிருக்க, தேர்தலின் பின்னர் முதலீடு, அதிகாரம் போன்றவற்றைப் பெற்றுக் கொடுக்கப் போவதாக தமிழக அரசியல்வாதிகள் பேசிக் கொள்கின்றனர்.

இதில் குறிப்பாக தமிழகத்தில் இருந்து வருகின்ற குரல்களைப் பார்ப்போமானால் மாகாணசபைக்கு அதிகாரத்தை பெற்றுக் கொடுப்பதும், நிதியினை நேரடியாகவே மாகாண சபைக்கு கொடுக்கப்படும் என காங்கிரஸினைச் சேர்ந்த திரு நாச்சியப்பன் தெரிவித்துள்ளார். அத்துடன் சில நாட்களின் பின்னர் கச்சத்தீவை தமிழக இலங்கை மீனவர்களின் வர்த்தக மையமாக மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சரான இவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை தடுப்பது குறித்து உளவுத்துறை மூலம் ஆய்வுகள் நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதே போல முன்னாள் இராணுவ அதிகாரியும், ஆய்வாளருமான கரிகரன் கல்வித்துறையையும், முதலீடுகளையும் தமிழகத்தவர்கள் மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். இவ்வாறான கருத்துக்கள் தமிழக அரசியல்வாதிகள், ஜனநாயகவாதிகள் போன்றவர்களிடம் இருந்து வருகின்றது. இவர்கள் த.தே.கூட்டமைப்பின் ஊடாக இந்திய மூலதனத்தின் ஆழுமையை தமிழ் பகுதியில் நுளைக்க முனைகின்றனர்.

த.தே.கூ வேண்டி நிற்கின்ற அதிகார அபிலாசை என்பது கூட இந்திய சார் நவதாராள பொருளாதாரக் கொள்கையை நிறைவேற்றுவதாக அல்லாமல் செல்லவே முடியாது. ஆனால் இதனை தமிழ் மக்கள் மீதான இந்திய பாசமாக காட்ட முனைகின்றமை ஒரு புறமிருக்க, இந்தியமைய அரசின் திட்டமென்பது வேறு வழிகளில் இருக்கின்றது. இது பிராந்திய நலன்கருதி சிறிலங்கா ஆழும் வர்க்கத்துடன் இணைந்து செல்கின்றதையே தனது சதியரசியலாக கொள்கின்றது.

இப்போது இலங்கையில் 50000 வீடுகளை 2015ம் முன்னர் கட்டிமுடிக்கப்படும் என்றும், கொழும்பு - யாழ் புகையிரப்பாதை, காங்கேசன்துறை, தலைமன்னார் துறைமுகங்களும், பலாலி விமான நிலையமும் மக்களின் பாவனைக்கு ஏற்ப திருத்தப்படும் எனவும், 13வது சட்டத்திருத்தத்தின் மூலம் அதிகாரத்தை பெற்றுக் கொடுப்பது பற்றியும் வெளிவிவகார அமைச்சர் கருத்து தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சர் சம்பூர் அனல்மின் நிலையத்திற்கான ஒப்பந்தத்தையும் கையொப்பமிட்டார். சுற்றச்சூழல் மாசுபடுத்தல் மாத்திரமன்றி, மக்களின் வாழ்வாதாரத்தை விட்டு துரத்திவிட்ட அனல் மின்னிலையத்தை அமைப்பது பற்றி த.தே.கூட்டமைப்பு மௌனம் சாதிக்கின்றார்கள். இதுவெருபுறமிருக்க, த.தே.கூட்டமைப்பை தெரிவுக் குழுவிற்குள் வந்து தீர்வு பற்றி பேசும்படி கூறியமை சிறிலங்கா அரசாங்கம் தனது பெருந்தேசியப் பெருமையை தொடர்ந்தும் வலுப்படுத்துவதாகும்.

ஆனால் சிறிலங்கா என்ற தேசத்தினுள் இனங்களுக்கான அரசியல் உரிமையை வழங்கத் தயாராக இல்லை. பலஸ்தீனருக்கான அரசியல் உரிமையை, வழங்கத் தயாரில்லாத போக்கை இஸ்ரேல் கொண்டுள்ளதோ அதே இனப்பெருமித சிந்தனையில் அமைந்த அணுகுமுறையை, போக்கை கொண்டதாக இருப்பதை இலங்கை அரசியலில் அவதானிக்க முடியும். இதனை அரசியல் பேசும் நபர்கள், ஜனநாயகவாதிகள் கண்டு கொள்வதில்லை. இது பெருந்தேசியவாதம் குறுந்தேசியத்தினையும், குறுந்தேசியம் பெருந்தேசியமும் உதிர்ந்து கொள்ள விடாது பாதுகாக்கின்றது.

அதிகாரப் பகிர்வுக்கு இலங்கையைப் பணிய வைக்காமல் ராஜபக்¬ஷ கூறியதற்குத் தலையாட்டி விட்டு வந்திருக்கிறார் குர்ஷித் என குற்றம் சாட்டப்படுகின்றது. இவ்வாறு வெற்றுக் கூச்சல் என்பது தமிழக காங்கிரஸ் அரசியல்வாதிகளின் வெற்றுப் பேச்சுக்கும் வீரப்பிரதாப பேச்சுக்களுக்கும் இவ்வாறான திட்டங்கள் கோரிக்கைகள் பயன்படலாம். ஆனால் இந்திய மையஅரசின் திட்டத்தினை மாற்றம் கொள்ள வைக்கப்பபோவதில்லை.

இதனை இந்திய மைய அரசு தெரிந்தே செய்கின்றது. ஏனெனில் இந்திய நலன் என்பது பொருளாதார நலன் சார்ந்தது. குரங்கு அப்பத்தை பங்கிட்டது போன்று இந்தியாவும் சீனருக்கு கிடைத்ததற்கு அதிகமாகவே நலனை பெற்றிருக்கின்றது. இந்த வகையில் இந்திய, தமிழக மூலதனம் என்பது தொழிலாளர்களுக்கு ஒரு பாதகமான நிலையை தோற்றுவிக்கும்.

இதில் முக்கிய நிகழ்வு என்னவெனில் இந்திய மூலதனம் குறிப்பாக தமிழர் பகுதியில் குவிகின்ற போது அதனை எவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கையாளப் போகின்றது?

பொருளாதாரக் கொள்கையை உருவாக்கும் உரிமையான உள்நாட்டு உற்பத்தியை பெருக்கவும், உள்நாட்டு பொருட்களின் நுகர்வு, உற்பத்திச் சக்தியை வளர்த்தெடுப்பது அன்னிய முதலீடுகளுக்கான- அவர்களின் பண்ணைகளாக இல்லாது சுய பொருளாதாரத்தையும் தன்னிறைவையும் கொண்ட பொருளாதாரத்தையும், தன்னிறைவுப் பொருளாதாரத்திட்டத்தில் மேற்கொள்ளும் உரிமைக்காக போராடுவார்களா???