Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

மலையக அரசியல் கட்சிகளின் மோதல்: கண்டனம்

மலையகத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தொழிலாளர் தேசிய சங்கம் என்பவற்றின் தலைமைகளுக்கிடையிலான போட்டியும் மோதலும் அவர்களது தொழிற்சங்க அரசியல் நலன்களுக்கும் ஆதிக்க இருப்பிற்கும் உரியதே அன்றி மலையக மக்களின் நலன்களுக்கோ தேவைகளுக்கோ தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்கானதோ அல்ல. அண்மையில் கொட்டகலை, அட்டன், பொகவந்தலாவ போன்ற இடங்களில் இரு தரப்பினரிடையே இடம்பெற்ற மோதல்களும் வன்முறைப் பிரயோகங்களும் தோட்டங்களுக்கும் தொழிலாளர்கள் மத்திக்கும் எடுத்துச் செல்லப்பட கூடாத ஒன்றாகும்.

மலையக மக்களைப் பிரித்து மோதவைக்கும் மேற்படி தாக்குதல்களையும் வன்முறைச் சம்பவங்களைளும் எமது புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது. மலையக மக்களையும் தோட்டத் தொழிலாளர்களையும் மோதவிட்டு பிரித்து வைப்பதன் மூலம் தத்தமது தொழிற்சங்க அரசியல் ஆதிக்கத்தை நிலைநிறுத்த நிற்கும் எந்தவொரு சக்திக்கும் மலையக மக்கள் ஆதரவு வழங்காதிருத்தல் அவசியமானதாகும். இவ்வாறு புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் தேசிய அமைப்பாளர் இராகலை வெ. மகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

மேலும் அவ் அறிக்கையில், மத்திய மாகாணத்தில் மாகாண சபைத் தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் இ.தொ.காவின் பாராளுமன்ற உறுப்பினர் பெ.இராஜதுரை அதிலிருந்து விலகி தொழிலாளர் தேசிய சங்கத்தில் இணைந்துகொண்ட நிலையில் ஏற்பட்ட முறுகல் சூழலிலேயே கொட்டகலை தொடங்கி பொகவந்தலாவை வரை இருதரப்பிலும் வன்முறைத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றின் பின்னால் தொழிற்சங்க அரசியல் நலன் சார்ந்த இருப்பும் வாக்கு வங்கி விரிவாக்கமுமே உள்ளன. இ.தொ.காவிலிருந்து விலகிய பாராளுமன்ற உறுப்பினர் பெ. இராஜதுரை அதன் குடும்ப அரசியல், தொழிற்சங்க அரசியலை விமர்சனம் செய்து கொண்டு மற்றொரு வகையான தொழிற்சங்க ஆதிக்கத்தை நிலைநிறுத்த முன்னிற்கும் தொ.தே.சங்கத்தில் இணைந்திருப்பது மலையக மக்களுக்கோ அவர் கூறும் அடிமட்ட சாதாரண மக்களுக்கோ எவ்வித நன்மையும் தரமாட்டாது.

 

ஏனெனில் மேற்கூறிய இருதரப்பினரும் இன்றைய இன, வர்க்க ஒடுக்குமுறையினை முன்னெடுத்து வரும் மகிந்த சிந்தனையின் பேரினவாத ஆட்சியின் பங்காளிகளும் ஆதரவாளர்களுமாவர். இத்தகையோரை வைத்தே ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கமும் தோட்ட முதலாளிமார்களும் மலையக மக்களினதும் தோட்ட தொழிலார்களினதும் அடிப்படை வாழ்வாதார உரிமைகளையும் சம்பள உயர்வினையும் மறுத்து நிராகரித்து வருகிறார்கள்.

 

எனவே ஒன்றுபட்டு நின்று தமது வர்க்க இனத்துவ உரிமைகளுக்காகப் போராடுவதற்கு ஐக்கியப்படுத்தப்பட வேண்டிய மக்களிடையே தத்தமது நலன்களுக்காகவும், தொழிற்சங்க அரசியல் ஆதிக்க இருப்புக்காகவும், மோதல்களையும் வன்முறைகளையும் சாதியப் பிரிவினைகளையும் உருவாக்க முன்னிற்கும் சக்திகளுக்கு எதிராக மலையக மக்கள் விழிப்புடன் இருப்பது அவசியம் என்பதையே எமது கட்சி சுட்டிக்காட்டுகின்றது.

இராகலை வெ. மகேந்திரன்,

தேசிய அமைப்பாளர்