Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

அடக்கிட துடிக்கும் அரசாங்கமும் அடங்க மறுக்கும் மாணவர் இயக்கமும்!

கடந்த எட்டு வருடங்களாக நாடு சென்று கொண்டிருக்கும் பாதை கவலைக்குரியதாக இருக்கின்றது. நவ தராண்மைவாத ((Neo – liberalism)) பொருளாதரம் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இந்த பொருளாதார கொள்கையின் பிரதான இயல்பான தனியார் மயமாக்கம் எல்லா துறைகளிலும் பரவி வருகின்றது. குறிப்பாக இலங்கையில் நடைமுறையில் இருக்கும் இலவச கல்வியை தனியார் மயமாக்கும் முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதன் பிரதிபலன்களை பெற்றோர்கள் இன்று உணர ஆரம்பித்திருக்கின்றார்கள். அதேவேளை இலவச கல்வியை தனியார் மயமாக்கும் முயற்சிக்கு எதிரான போராட்டங்களும் தீவிரமடைந்து வருகின்றன. குறிப்பாக இந்த விடயத்தில் மாணவர்களும் விரிவுரையாளர்களும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களும் ஒன்றினைந்து போராடும் சூழல் உருவெடுத்திருக்கின்றது. இதற்கெதிராக பல்கலைக்கழக மாணவர்கள் மீதான அடக்குமுறைகளும் வன்முறைகளும் உச்ச கட்டத்தினை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.

இரண்டு காரணங்களின் அடிப்படையிலேயே இந்த அடக்கு முறைகள் அரங்கேறுகின்றன. முதலாவது, கல்வியை தனியார் மயப்படுத்தும் முயற்சிக்கு எதிரான மாணவர் போராட்டங்களையும் அதற்கு தலைமைத்துவம் வழங்கும் மாணவர் தலைவர்களையும் முளையிலேயே முடக்குவது. இரண்டாவது, வடகிழக்கில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்படும் அடக்குமுறையாகும். தமிழ் இளைஞர் யுவதிகளின் ஆயுத பேராட்டம் முறியடிக்கப்பட்ட பின், தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைக்கும் இனஅழிப்பு நடவடிக்கைக்கும் எதிராக புரட்சிகரமான போராட்ட குணமிக்க குரல்கள் எழுச்சியடைவதினை பேரினவாதிகளின் அரசாங்கம் விரும்பவில்லை. இதனை முளையிலேயே கிள்ளி எறியும் முனைப்புடன் அரசாங்கம் செயற்படுகின்றது. அதன் காரணமாக யாழ் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாடுகளை கண்ணில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு அவதானிக்கும் அரசாங்கம் அவர்களின் மீது அளவு கடந்த அடக்குமுறையை கட்டவிழ்த்துள்ளது.

குறிப்பாக கடந்த வருடம் மாவீரர் நாள் மற்றும் மே 18 ஆகிய நாட்களில் அரசாங்கம் வடகிழக்கு பல்கலைக்கழகங்களில் கண்காணிப்பை அதிகரித்திருந்ததோடு பொதுவாகவே பல்கலைக்கழக சூழலிலும் பல்கலைக்கழகத்தினுள்ளும் புலனாய்வாளர்களை உலவ விட்டுள்ளது. கடந்த வருடம் மாவீரர் நாள் நிகழ்வுகள் அனுஷ்டிக்கபட்டதினை தொடர்ந்து 13 மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்கள் 40ற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு அச்சுறுத்தப்பட்டார்கள். இம்முறையும் மே 18 நிகழ்வுகளிற்கு முன்னர் மாணவர்கள் அச்சுறுத்தப்பட்டார்கள். எனினும் இம்முறை மாணவர்களும் விரிவுரையாளர்களும் ஒன்றாய் கரம்கோர்த்து மே 18 நிகழ்வுகளை நடத்தியிருந்தார்கள். கிழக்கு பல்கலைகழகத்தினை பொறுத்தவரை மாணவர் தலைவர்கள் தனிதனியாக பலமுறை இனம்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டார்கள்.

தென்பகுதி பல்கலைக்கழகங்களிலும் இதே போன்று அடக்குமுறைகள் தொடர்ச்சியாக நடக்கின்றன. அண்மையில் பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் கண்டி நகரில் வைத்து கடத்தப்பட்டு கடுமையாக அச்சுறுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டார். களனி பல்கலைக்கழக மாணவர் சில மாதங்களுக்கு முன் நள்ளிரவு வேளையில் தாக்கப்பட்டார். றுகுனு பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர், கடத்தல் முயற்சியில் இருந்து அதிஷ்டவசமாக மயிரிழையில் காயங்களுடன் தப்பினார். சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தடைசெய்யப்பட்டதோடு 5 மாணவர்களிற்கு வகுப்புதடை விதிக்கப்பட்டுள்ளது. பேராதனை பல்கலையில் 27 மாணவர்கள் மீது வகுப்பு தடை விதிக்கப்பட்டதோடு மாணவர் ஒன்றியத்தினை தடை செய்யும் முயற்சிகளும் மேற்க்கொள்ளப்பட்டன.

கடந்த வருடம் பொய் குற்றசாட்டின் பெயரில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்ப்பாட்டாளர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதனை தொடர்ந்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி மேற்க்கொண்ட பேரணியை முன்னின்று நடத்திய இரு மாணவர்கள் திட்டமிட்ட விபத்தொன்றின் மூலம் படுகொலை செய்யப்பட்டார்கள். மேலும், பல வழிகளில் மாணவர் தலைவர்கள், செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்பட்டு வருகின்றார்கள்.

மாணவர்களின் வீடுகளுக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்புவது, பெற்றோர்களை அச்சுறுத்துவது, இனம்தெரியாத நபர்களை கொண்டு தாக்குதல் நடத்துவது, கடத்தி அச்சுறுத்துவது, கைது செய்து சிறையிலடைப்பது, கொலை செய்வது என்பன அண்மை காலமாக அரசாங்கம் மாணவர்களை அடக்கியாள கையாளும் வழிமுறைகளாகும். மேலும், மாணவர்களின் போராட்டங்களை முடக்குவதற்கு பகிடி வதையை அரசாங்கம் ஆயுதமாக பயன்படுத்துகின்றது.

பகிடி வதை என்பது ஒரு பிற்போக்கான விடயம் என்பதில் மாற்று கருத்துக்கள் இல்லை. பல்கலைக்கழகங்களில் பகிடிவதையை நிறுத்திட மாணவர் ஒன்றியங்கள் செயலாற்றிட வேண்டும். சில பல்கலைக்கழகங்களில் மாணவர் ஒன்றியங்களின் ஆக்கபூர்வமான செயற்பாடுகளினால் பகிடி வதை பெருமளவில் குறைந்துள்ளது. மாணவர் ஒன்றியங்கள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்துவரும் வேளை அரசாங்கமோ, தனக்கு சார்பான மாணவர்களை கொண்டு மாணவர்களை கொண்டு பகிடிவதையை ஊக்குவித்து வருகின்றது. உண்மையில் அரசாங்கத்திற்கு பகிடிவதையை நிறுத்தும் நோக்கம் இல்லை. பகிடிவதையை நிறுத்துகின்றோம் என்ற பெயரில் பல்கலைக்கழகங்களில் போராட்டங்களில் முன்னனி வைக்கும் செயற்பாட்டாளர்களை அடக்கி ஆளும் ஆயுதமாக பகிடிவதை ஒழிப்பு சட்டங்களை பயன்படுத்துகின்றார்கள். பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவிக்கும் வேலையையே அரசாங்கம் செய்கின்றது.

இதற்கான காரணம் மிக தெளிவானதாகும். உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் சிறிலங்கா அரசிற்கு தொடர்ந்து கடன் வழங்க அரசின் செலவுகளை குறைக்க வேண்டும், வருமானத்தினை அதிகரிக்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது. இந் நிபந்தனையை அரசாங்கம் நடைமுறைபடுத்தாவிட்டால் தொடர்ந்து கடன் கிடைக்காது. அதன் காரணமாக தான் அரசாங்கம் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்ததோடு கல்வியை விற்பனை பண்டமாக்கி வருமானம் ஈட்டவும் முயற்சிக்கின்றார்கள்.

இதற்கு எதிராக மாணவர்கள் தொடர்ச்சியாக போராடி வருகின்றார்கள். இவர்களுடன் விரிவுரையாளர்களும் போராட்டத்தில் குதித்துள்ளார்கள். இவ்வாறான போராட்டங்கள் அரசின் கல்வியை விற்கும் கொள்கைக்கு பெரும் இடைஞ்சலாகும். தனது திட்டத்திற்கு இடைஞ்சலான போராட்டங்களை அடக்கிட அரசாங்கம் திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றது. போராட்டங்களை தடுக்கவும் போராட்டங்களிலிருந்து மாணவர்களை திசை திருப்பவும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ தலைமைத்துவ பயிற்சியை வழங்கும் திட்டத்தினை மேற்கொள்கிறது. அத்துடன் பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், பதிவாளர்களாக இராணுவ அதிகாரிகளை நியமித்து பல்கலைக்கழகத்திற்குள் அடிமைதனமான இராணுவ சூழலினை உருவாக்கியுள்ளது.

எனினும் யாழ் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கல்வி தனியார் மயமாக்கலிற்கு எதிராக போராட்டங்களை மேற்க்கொள்ளவில்லை. அவர்களது செயற்பாடுகள் இனஓடுக்குமுறையை சார்ந்தனவையாகும். தனியார் மயமாக்கலிற்கு எதிராக சகலரும் போராட வேண்டிய நிலை தற்போது ஏற்ப்பட்டுள்ளது. அனைவரும் இப்பிரச்சினையில் ஒன்றினைந்த போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. விரிவுரையாளர்கள் அவ்வாறே செயற்படுகின்றார்கள். மாணவர்கள் அவ்வாறு செயற்படமுடியாமைக்கான பொறுப்பினை மாணவர் ஒன்றியங்களை அண்மைகாலம் வரை தன் கட்டுபாட்டில் வைத்திருந்த பேரினவாதிகளான ஜே.வி. பி னர் தான் பொறுப்பேற்க வேண்டும்.

வடகிழக்கு மாணவர்கள் பாரிய அவலங்களுக்கு முகம் கொடுத்த சந்தர்ப்பங்களில் தென்பகுதி மாணவர்கள் அவர்களுக்காக குரல் கொடுப்பதினை மார்க்சிய தத்துவங்களை திரிபுபடுத்தி கையாண்டு தடுத்து வந்தனர். தற்போது மீண்டும் தலையெடுக்க முடியாத வகையில் அவர்கள் ஒரம் கட்டப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் ஒன்றினைந்து செயற்பட்டு மாபெரும் சக்தியாக, தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுக்கும் காலம் உதயமாகியுள்ளது. கடந்த கால தவறுகளை சகலரும் சுயவிமர்சனம் செய்துகொண்டு சேர்ந்து செயலாற்றுவதன் மூலம் சகல உரிமைகளையும் வென்றெடுப்பதற்கான போராட்ட சக்தியாக மாணவர்கள் எழுச்சியடைய வேண்டும். அதன் மூலமே அடக்குமுறைகளையும் ஒடுக்குமுறைகளையும் உடைத்தெறிந்து சமூகத்தினை முன்னோக்கி நகர்த்த முடியும்.

-பழ றிச்சர்ட் (முன்னால் ஓன்றிய செயலாளர்)

(பிரயோக விஞ்ஞான பீடம் - வவுனியா வளாகம்)