Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

'புதிய பள்ளிவாசல் மூடப்படும், பழைய பள்ளிவாசல் திருத்தப்படும்'

இலங்கையின் தலைநகர் கொழும்பில் கிராண்ட்பாஸ் சுவர்ண சைத்திய வீதியில் நேற்று சனிக்கிழமை இரவு தாக்குதலுக்கு உள்ளான பள்ளிவாசலை அங்கிருந்து அகற்றவும் அதனருகில் உள்ள பழைய பள்ளிவாசலை தொடர்ந்து பயன்படுத்த அனுமதி வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பௌத்த சாசனம் மற்றும் மதவிவகார அமைச்சில் முஸ்லிம் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசாங்கத்தின் மூத்த அமைச்சர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

பழைய பள்ளிவாசலை அகற்றுவதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை ஏற்கனவே எடுத்திருந்த தீர்மானத்தை ரத்துசெய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முடிவு எட்டப்பட்டுள்ளது.

பழைய பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள போதி மரத்தை (அரச மரம்) அகற்றிவிட்டு, அந்த இடத்தை பள்ளிவாசலுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இன்று மாலை ஊடகங்களுக்கு அரசின் முடிவை அறிவித்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறினார்.

அரச செலவில் பழைய பள்ளிவாசலை புனர்நிர்மாணம் செய்வதற்கு அமைச்சர்கள் இணக்கம் தெரிவித்ததாக பேச்சுவார்த்தையில் பங்கெடுத்திருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

இதேவேளை, கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் தொடர்பான பேச்சுவார்த்தை முஸ்லிம்களுக்கு முழுத் திருப்தியளிப்பதாக இருக்கவில்லை என்று மேல்மாகாண சபை ஆளுநர் அலவி மௌலானா கூறினார்.

முன்னதாக, நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்ட கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் பிரதேசத்திற்கு இன்று காலை சென்ற அமைச்சர்களிடம், தாக்குதலுக்குள்ளான பள்ளிவாசலை அங்கிருந்து அகற்றக் கூடாது என்று முஸ்லிம்கள் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஊரடங்கு உத்தரவு

இதற்கிடையே, சிறப்பு அதிரடிப் படையினர், கலகத்தடுப்பு பொலிசார் என்று பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த நிலையிலும் இன்று கிராண்ட்பாஸ் பகுதியில் தாக்குதல்கள் நடந்துள்ளன.

சிங்கள மக்களுக்குச் சொந்தமான வீடுகளும் தாக்கப்பட்டிருந்தன. அடிக்கடி மோதல்கள் மூளும் சூழ்நிலையால் அப்பகுதியில் தொடர்ந்தும் பதற்றம் நிலவியதாக உள்ளூர் ஊடகவியலாளர்கள் தமிழோசையிடம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சனிக்கிழமை இரவு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு காலையில் தளர்த்தப்பட்டிருந்த போதிலும், இரண்டாவது நாளாக இன்று ஞாயிற்றுக்கிழமை இரவும் காலை 7 மணிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இதற்கு முன்னர் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சந்தர்ப்பங்களில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காதபடியாலேயே இனவாத சக்திகள் தொடர்ந்தும் தங்களின் செயற்பாடுகளை முன்னெடுத்துவருவதாக முஸ்லிம் அமைச்சர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.