Sat04202024

Last updateSun, 19 Apr 2020 8am

வேலையில்லா பட்டதாரிகள் யாழ்பாணத்தில் ஆர்ப்பாட்டம்

யாழ் அரச செயலகத்திற்கு முன்னால் வேலையற்ற யாழ் மாவட்ட பட்டதாரிகள் சனியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.  பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்வது தேசியக் கொள்கையாக இருந்து வருகின்ற போதிலும் கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து அரச சேவையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்குப் பட்டதாரிகளை அரசுகள் உள்வாங்கவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் குற்றம் சுமத்தியிருக்கின்றனர்.

ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகளின் சங்கங்களின் ஒன்றியத் தலைவர் தமிக்க முனசிங்க தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது. அரசாங்கம் பட்டதாரிகளுக்கு வேலை வழங்குவதில் பாராமுகமாகவே நடந்து கொள்கின்றது என அங்கு கருத்து தெரிவித்தார் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத் தலைவர் துஷாந்தன்.

கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை, நாடளாவிய ரீதியில் 30 ஆயிரம் பட்டதாரிகள் வேலையற்றவர்களாக இருக்கின்றார்கள். ஆனால், அரசத் திணைக்களங்களில் சுமார் 50 ஆயிரம் வெற்றிடங்கள் இருக்கின்றன.

இந்த நிலையில் வெறும் பேச்சளவிலான உத்தரவாதங்களைக் கைவிட்டு வேலையற்றிருக்கின்ற பட்டதாரிகளுக்கு வேலை வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்றார் பட்டதாரிகள் சங்கங்களின் ஒன்றியத் தலைவர் தமிக்க முனசிங்க.